Sunday, December 20, 2009

இதெல்லாம் நமக்கு சகஜம்

நேற்று ஒரு இன்டர்வியூவிக்கு போய் வந்தேன். கேள்வியால் துவைத்துக் காயப்போட்டுவிட்டார்கள்.

இதெல்லாம் நமக்கு சகஜம்.

மனச தேத்த இந்த வீடியோ... பாருங்க

Sunday, December 13, 2009

வெற்றி நிச்சயம்!

நீங்கள் முன்னேற எவ்வளவு நேரம் உழைக்கிறீர்கள். இந்த அருமையான விடியோவைப் பாருங்கள்.

Friday, November 20, 2009

1857 சிப்பாய் புரட்சி




தலைப்பு: 1857 சிப்பாய் புரட்சி
எழுத்தாளர்: உமா சம்பத்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ.100

வெறுப்பின் முடிவு என்னவாக இருக்கும்?
கோபத்தின் முடிவு என்னவாக இருக்கும்?
போர்களின் முடிவு என்னவாக இருக்கும்?
வெறுப்பு, கோபம், போர் இதெல்லம் ஒரே உணர்ச்சியின் பல்வேறு படிமங்கள். இவற்றின் முடிவு இழப்பைத் தவிர ஒன்றுமில்லை. வெறுப்பினால் அமைதி; கோபத்தால் நிம்மதி; போரினால் உயிர் போய்த்தான் ஆகவேண்டும். இவற்றால் கிடைக்கப்போவது ஒன்றுமில்லை.
ஆனால், போரைத் தவிர வேறுவழியில்லை அவர்களை அழிப்பதற்கு. எங்கிருந்தோ வந்தார்கள்; வியாபாரம் செய்தார்கள்; நண்பர்கள் ஆனார்கள்; அதிகாரம் செய்தார்கள்; இப்போது அநியாயம் இழைக்கிறார்கள். அகண்ட பாரதமும் அவர்கள் வசம்; கிழக்கிந்திய கம்பெனியிடம். அக்கினிக் குஞ்சுகள் போல் மக்களிடம் இருந்துவந்த வெறுப்பு ஒன்றுகூடி பறங்கியரை எதிர்த்த ஆண்டு 1857. இந்த சிப்பாய்க் கலகம் தான் முதல் இந்திய சுதந்திரப் போர் என்று அழைக்கப்படுகிறது.(ஆனால் வேலூரில் 1806 ரிலேயே சிப்பாய்க் கலகம் நடந்தது.)
சிப்பாய்க் கலகம் தொடங்குவதற்கு ஒரு முக்கியக் காரணம் மதம். கம்பெனியின் படையில் இந்துக்களும் முஸ்லிம்களும் அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள். பன்றிக்கொழுப்பினால் பூசப் பட்ட குண்டுகளை இருமதத்தவரும் ஏற்க மறுத்தார்கள். அதனை எதிர்த்து மங்கள் பாண்டே என்ற சிப்பாய் தனியாக புரட்சி நடத்தினான்; அவன் அடக்கப்பட்டான். ஆனால், அவன் ஏற்றிவிட்ட நெருப்பு அசுர வேகத்தில் பரவியது. (சிப்பாய்களுக்குள்ளும் மதம் மற்றும் சாதிரீதியான வேறுபாடுகள் நிறையவே இருந்தன.)
பல்வேறு அரசர்களும் ஆங்கிலேயர்கள் மீது கடுப்பில் இருந்ததால் சிப்பாய்களுக்கு உதவி கிடைப்பதில் சிக்கல் இல்லை. போராட்டத்திற்கு நாள் குறிக்கப்பட்டது அது மே 31, 1857. ஆனால், மீரட்டில் முன்னதாகவே தொடங்கியது. வெறுப்பின் உச்சத்திலிருந்த சிப்பாய்கள் வெள்ளைக்காரர்களைக் கொன்று குவித்தார்கள். இங்குதான் புரட்சியின் குரூர முகம் தொடங்கியது. புரட்சியாளர்களின் குறி வெள்ளை உயிர்களாக மட்டுமே இருந்தன. பெண்கள் குழந்தைகள் என்று ஒருவரையும் விட்டுவைக்கவில்லை. அவர்களின் ஆத்திரம் அவர்களைச் செலுத்தியது.
மீரட்டிலிருந்து தில்லி சென்று பின்னர் ஊர் ஊராகப் பரவியது புரட்சி. வெள்ளையர்கள் ஆட்டம் கண்டார்கள். ஆனால், அனைத்து சிப்பாய்களும் புரட்சியில் இல்லை. சீக்கியப் படைகள், கூர்காப் படைகள் என சில படைகள் ஆங்லேயருக்கு மிக விசுவாசமாக நடந்துகொண்டன. கடைநிலை ஊழியர்கள் காட்டிய விசுவாசமே வெள்ளையர்களை வாழவைத்தது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். ஒரு கோட்டை முற்றுகையின் போது 24 மணிநேரத்தில் ஒரு கிணறையே சீக்கியச் சிப்பய்கள் தோண்டியதாக கூறப்படுகிறது. புத்தகத்தின் இறுதியில் உள்ள ரஸ்ஸெல் என்னும் ஆங்கில பத்திரிக்கையாளரின் குறிப்பு இதைத்தான் சொல்கிறது "கடைநிலை இந்திய ஊழியர்களின் ஆதரவினால் தான் ஆங்கிலப்படை தாக்குபிடித்தது."
புரட்சியாளரகள் தாமாக கிளம்பிவிடவில்லை. அவர்களுக்கு பின் பல பெரிய தலைகள் இருந்தன. நானா சாகிப், தாத்தியா தோப்பி, குன்வர் சிங், ஜான்சியின் லட்சுமி பாய், மெளல்வி அகமது ஷா போன்று பலர் புரட்சியினை வழிநடத்தினர். ஆனால் இதில் நானா சாகிப், தோல்விக்கு பிறகு தனக்கும் புரட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்று ஒரு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. இதில் ஜான்சி ராணியை பலருக்கும் தெரிந்திருக்கும். தன்னுடைய இருபது வயதில் ஒரு பெரிய புரட்சி செய்தவள். தாத்தியாவும் குன்வர் சிங்கும் சிப்பாய்ப் புரட்சியில் வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனம். இவர்களின் வீரம் ஆங்கிலேயர்களுக்கு பெரும் இழப்பை ஏற்ப்படுத்தியது.
பல்வேறு இழப்புகளை இருதரப்பும் சந்தித்தது. ஆயிரக்கணக்கன உயிர்கள், ஏராளமான பொருளிழப்பு; வெறுப்பின் விளைவு இந்த இழப்புகள் மட்டும்தான். ஒவ்வொருவராக புரட்சி தலைவர்கள் வீழ்ந்தார்கள், புரட்சியின் வேகம் குறைந்து, மீண்டும் கிழக்கிந்திய் கம்பெனியிடமே ஆட்சி வந்தது. ஆனால் முடிவில் சிறு மாற்றம்; ஆட்சி அனைத்தும் இப்போது இங்கிலாந்து ராணியின் கீழ் வந்துவிட்டது. ஆனால் கிழக்கிந்திய கம்பெனி இன்னும் போகவில்லை; அதற்கு பல வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
எழுத்தாளர் உமா சம்பத் சிப்பாய்ப் புரட்சியின் அனைத்து நிகழ்வுகளையும் தந்திருக்கிறார் என்றே நினைக்கிறேன். ஆனால், இது வரலாற்று புத்தகமா, இல்லை ஒரு கதையாக கூறமுற்பட்டுள்ளாரா என்று தெரியவில்லை. ஆனால் இப்புத்தகம் 1857 சிப்பாய் புரட்சியின் ஒரு எளிய அறிமுகமாகவே இருக்கிறது. தொடந்து போர்களாக வருவதால் பாதியிலேயே அலுப்புதட்டுகிறது. அதற்கு கண்டிப்பாக எழுத்தாளரைக் குறை கூற முடியாது.
ஒரு வரலாற்று புத்தகம் என்பதால் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. புத்தகத்தில் பல போர்களின் காலம் துல்லியமாக தரப்படவில்லை. காலவரிசைப் பட்டியலும் (Timeline) இணைக்கப்படவில்லை. மேலும் ஆங்கில நூல்களில் உள்ளது போன்று அகரவரிசையில் வகுகப்பட்ட (Index) சொற்கள் இல்லை. இதனால் இப்புத்தகத்தை Reference ஆக பயன்படுத்துவது கடினம். இவற்றையெல்லாம் சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

Thursday, November 5, 2009

வாழ்க்கை என்னும் அற்புதம்


"நான் ஏன் பிறந்தேன்?"
இந்தக் கேள்வியை நீங்கள் எத்தனை முறை உங்ககிட்டயே கேட்டிருப்பீங்க. நான் சண்ட போடும் போதெல்லாம்  அம்மாகிட்ட "என்ன ஏன் பெத்த?”ன்னு கேட்பேன்; ரொம்ப முட்டாள்தனமான கேள்வி. ஒங்க வாழ்க்கை சரியா போறவரைக்கும் இந்த கேள்வியெல்லாம் தோனாது. சிலருக்கு எப்பவுமே தோனாது. வாழ்க்கை நீங்க நெனச்ச மாதிரி போலைனா, அப்ப வர்ற முதல் கேள்வியே இதுதான்.

அந்த கேள்விக்கு பதில் கடைக்கறதுக்குள்ள வேற கேள்வியெல்லாம் தோணும். "ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது?", "என்ன ஒருத்தரும் மதிக்க மாட்டேங்கறாங்களே ஏன்?", இப்படியே கேட்டுட்டே போய் கடைசியா "இப்படி ஒரு வாழ்க்க வாழறதுக்கு செத்துபோலாமா?" -ன்னு தோனும். இதுக்கெல்லாம் பதில்?

கடவுள் உங்கள, இங்கவுள்ள இடத்த நிரப்பரதுக்காக படைக்கல. இங்கவுள்ள சொத்து சுகத்தையெல்லாம் அனுபவிக்க மட்டும் படைக்கல. அப்பறம் எதுக்கு, இந்த ஊரில, இந்த தெருவுல, நீங்க பிறக்கனும்? உங்கள சுத்தியுள்ள யாரோ ஒருத்தருக்கோ இல்ல பலருக்கோ உதவி செய்யதான் உங்கள படைச்சிருக்கனும். அது உங்க அப்பா அம்மாவா இருக்கலாம்; உங்க பக்கத்து வீட்டுகாரரா இருக்கலாம்; உங்க கூடபிறந்தவங்களா இருக்கலாம்; வந்த இல்ல வரப்போற துணையா இருக்கலாம்; உங்க குழந்தையாகூட இருக்கலாம்.
எனக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கை என்னும் விளக்கை பாதுகாத்து;
இன்னும் பிரகாசமாக அடுத்த தலைமுறைக்கு அளிப்பதற்கே நான் உழைக்கிறேன்.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
இதையெல்லாம் யோசிக்கத் தூண்டினது ஒரு சிறுகதையும் அதை தழுவி வந்த ஒரு திரைப்படமும். 1943ல பிலிப் வான் டோரன் (Philip Von Doren) எழுதிய The Greatest Gift ங்கற சிறுகதை தான் அது. பின்னர் 1946ல Frank Capra அதை தழுவி It’s A Wonderful Life ன்னு ஒரு படம் இயக்கினார்.

ஜார்ஜுக்கு மேற்படிப்ப முடிச்சிட்டு உலகத்த சுத்தனும் ஆசை. ஆனா, கிளம்பும்போது அவனோட அப்பா இறந்துவிடுகிறார். குடும்ப தொழில ஜார்ஜ் பார்த்துக்கனும்; இல்லாட்டி சொத்தெல்லாம் ஒரு பேராசைக்காரன்ட போயிடும். எப்படியாவது இந்த தொழில இருந்து விடுபடனும் ஜார்ஜ் நினைக்கிறான். ஆனா, முடியல. அதுக்குள்ள அவன் விரும்பின பெண்னையே கல்யாணம் செய்துக்கறான். குடும்பத்தோடு அதே ஊரில வளமா இருக்கான்.

ஒரு நாள் தொழில்ல நஷ்டம் ஏற்பட்டதால வாழ்க்கையை வெறுத்து தற்கொலை பண்ணிக்கப்போறான். அப்ப ஒரு தேவதை அவனை தடுத்து என்ன ஏதுன்னு விசாரிக்குது. தன்னோட கஷ்டத்த சொல்லி "நான் ஏன் பிறந்தேன்?"ன்னு தேவதைகிட்ட சண்டை போடறான். தேவதை அவன் பிறக்காமலே இருந்தால் அவனைச் சுற்றியுள்ளவங்க எப்படி கஷ்டப்படறாங்கன்னு காமிக்குது. அப்பதான் ஜார்ஜ் தான் எவ்வளவு அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கோம்ன்னு புரிஞ்சிக்கரான்.

It’s A Wonderful Life ஒரு நல்ல திரைப்படம். மிக எளிமையான, அதேநேரம் நேர்த்தியான திரைக்கதை; படம் முழுதாகவே இழையோடும் நகைச்சுவை இருப்பதோடு மட்டுமில்லாமல், வாழ்க்கை எவ்வளவு அற்புதமானது என்று புரியவைக்கிறது. முடிந்தால் நீங்களும் இந்தப் படத்தைப்பாருங்கள்.

நம்முடைய வாழ்க்கையும் அற்புதமானதுதான்.

Saturday, October 31, 2009

உங்களுக்கு டயபிட்டீஸ் வரணுமா?

குறிப்பு: இதை பதிவெடுத்து நீங்க அதிகமா, பாக்கற இடத்துல ஒட்டுங்க. உங்க ஆபீஸ் நோட்டிஸ் போர்டுல போடுங்க. எதோ என்னால முடிச்சது.

டயபிட்டீஸ் வேண்டும்னா இத கடைபிடிங்க

1. அதிகாலை 8 மணிக்கே எழுந்திடுங்க. காலை காப்பில ரெண்டு ஸ்பூன் சீனி      அதிகமாக போட்டுக்கோங்க. இனிப்பான காலை உங்களுக்கு ரொம்ப முக்கியம்.

2. எங்க போனாலும் வண்டிலயோ கார்லயோ போங்க. நடந்து போனா நாய் கூட மதிக்காது. கார் இல்லியா? அவசியம் ஒன்னு வாங்குங்க.

3. சிகரெட், தண்ணி பழக்கமுண்டா? நல்ல பழக்கம். Keep it up!

4. உடம்ப கவனமா பார்த்துக்கோங்க. எடை கொறஞ்சுடப் போகுது. யாரவது எடைக்கு எட பரிசு தருவாங்க.

5. சிப்ஸ், கூல் ட்ரிங்க்ஸ் எல்லாம் நிறைய சாப்பிடுங்க. அமெரிக்க கம்பெனியெல்லாம் நாம காப்பத்தாம, வேற யாரு காப்பத்துவா?

6. எண்ணெய்ல செஞ்சதோ, வெண்ணெய்ல செஞ்சதோ; எதுவா இருந்தாலும் கூட ஒன்னு சாப்பிடுங்க. அப்புறம் எதுக்குங்க நாக்கு.

7. அப்ப அப்ப டென்ஷனாகுங்க. அப்பதான் மத்தவங்க பயப்படுவாங்க.

8. விடுமுறை நாள்ல வீட்டு வேலையெல்லாம் செய்யதீங்க. விடுமுறை சிறப்பு நிகழ்ச்சிகள் மட்டும் பாருங்க. அத விட நல்ல வேல ஒன்னுமில்ல.

9. உங்க அப்பா அம்மாவுக்கு டயபிட்டீஸ் இருந்தா நீங்க அதிர்ஷ்டசாலி. மேல சொன்னத கொஞ்சமா செஞ்சாலே போதும்.

10. எதயுமே தனியா செய்யாதீங்க. ஒங்க நண்பர்கள் கூட சேர்ந்து செய்யுங்க, அப்பதான் ஒரு ஈடுபாடு வரும். யான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறுக.

Wednesday, October 21, 2009

தினம் தினம் தீபாவளி...



இந்த முறை தீபாவளி நன்றாகவே முடிந்தது. கொஞ்சம் பயணம்; நிறைய பலகாரம். குறைவில்லாமலே முடிந்தது பண்டிகை. ஒரு காலத்தில் அப்பா எவ்வளவு வெடி வாங்கிவந்தாலும் மனம் திருப்தியடைந்ததில்லை. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வெடிப்பதில் நாட்டமில்லை. அது ஏதோ ஹிம்சையாகபடுகிறது. சாஸ்திரத்துக்காக வெடிக்க வற்புறுத்துகிறார்கள், ஆனாலும் வெடிக்கத் தோன்றுவதில்லை.
எத்தனைபேர் தீபாவளியைக் கொண்டாடினார்கள்? சிலருக்கு அது வெடிகளோடு முடிந்துவிடுகிறது; சிலருக்கு மங்கல இசையில் தொடங்கி, சிறப்புத் திரைப்படத்தோடு முடிகிறது. சிலருக்கு பண்டம், சிலருக்கு உடை. ஆனால், சிலரது தீபாவளிகள் என்றுமே முடிவதில்லை. அவர்கள் வாங்கும் கடன்கள் அவர்களுக்கு பண்டிகையை நினைவூட்டிக்கொண்டே இருக்கின்றன. தீபாவளிக்கு முதல்நாள், வெடிக்கடைகளில் உள்ள கூட்டம், அடகு கடைகளிலும் இருந்தது. இவர்களுக்கு, தீபாவளி கடன்களில் தொடங்கி வட்டியில் தொடர்கின்றது.
இவர்களின் வாழ்க்கையில் என்று வரும், வசந்தம். எப்படி வரும் சந்தோஷம்? தெரியவில்லை. 


யாரைக் குறை சொல்வது? ஒருவரைச் சொல்லிக் குற்றமில்லை. கடன் வாங்கியே காலத்தை செலுத்தும் இவர்களின் வாழ்க்கை மாறவேண்டுமானால் என்ன செய்வது? டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை உயர்த்தாலாமா?(அமெரிக்காவில் வறுமை உண்டா?) சீனாவிலிருந்து குறைந்த விலையில் ஜவுளி, பட்டாசு, இனிப்பு எல்லாம் இறக்குமதி செய்யலாமா? திருநெல்வேலியில் கிலோ ரூ.120விற்கும் அல்வாவை சீனா ரூ.15க்கு தரலாம். இல்லை மக்களின் கவலையைப் போக்க 'இலவச சினிமா சீட்டு' திட்டத்தின் மூலம் பண்டிகையன்று ஒரு திரைப்படத்தை பார்க்க வாய்ப்பு தராலாம் (இலவசமா கொடுத்துட்டு டாஸ்மாக்ல விலைய ஏத்திரலாம். கணக்கு கரக்டா வந்துரும்).
இல்லை இந்த மக்களெல்லாம், சோப்பேறிகளா? சம்பாதிப்பதை சேமிக்காமல், தகுதிக்கு மீறி ஆசைப்படுகிறார்களா  ?  இல்லை முட்டாள்களா ? இல்லை இவர்களிடம் மாற்றத்தை கொண்டுவர முடியாத மற்ற அனைவரும் முட்டாள்களா ? தெரியவில்லை.
ஆனால் யோசிக்கிறேன். சில நூறு பேர் அப்படி இருக்கலாம். ஆனால் கோடிக்கணக்கான மக்கள், எப்படி இப்படியே இருக்கிறார்கள்? எங்கோ இடிக்கிறது. இதையெல்லாம் புரிந்து கொள்ள எனக்கு அறிவு போதவில்லை என்றே நினைக்கிறேன்.
நீங்களும் யோசியுங்கள்.மன்மோகன் சிங்கும் சோனியா காந்தியூமே எல்லவற்றையும் யோசித்துக் கொண்டிருக்கமாட்டார்கள். அவர்களுக்கு இதற்கு நேரமில்லாமல் கூட இருக்கலாம்.
யோசியுங்கள்! கண்டிப்பாக ஒரு வழி கிடைக்கும்.


Tuesday, September 29, 2009

பசித்திரு; விழித்திரு - ஸ்டீவ் ஜாப்ஸ்

கண்டிப்பாக கேட்க வேண்டிய பதிவு.



இந்த சொற்பொழிவின் எழுத்து வடிவம் (ஆங்கிலம்):http://news-service.stanford.edu/news/2005/june15/jobs-061505.html

Sunday, September 13, 2009

இந்தியாவின் எதிர்காலம்

நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பதை மிக அழகாகவும் சுருக்கமாகவும் வழங்குகிறார், நந்தன் நிலேக்கனி.

Saturday, August 15, 2009

ரத்தன் டாடா





தலைப்பு: ரத்தன் டாடா

எழுத்தாளர்: என்.சொக்கன்

பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம்

விலை: ரூ.75/-

மனிதர்கள் விசித்திரமானவர்கள். சிறிது பலம், சிறிது பணம், சிறிது கல்வி இருந்தாலே அவர்களைக் கையில் பிடிக்க முடியாது. ஆனால், பெரிய தொழில் நிறுவனத்தின் தலைவர், சிறந்த கல்வி, புகழ் சேர்க்கும் விருதுகள் அனைத்தும் கொண்ட பிறகும் கடுகளவும் கர்வம் இல்லத ஒருவரைக் காண்பது அரிது. பொதுவாக எழுத்தாளர்கள், சாதனையாளர்கள் போன்ற பலருக்கு கர்வம் இருக்கும்; சிலருக்கு இன்னும் அதிகமாக தலைக்கனமே இருக்கும். இவை இல்லாத உயர்ந்த மனிதர்கள் உண்டா?

சிறுவயதில் டாடா-பிர்லா என்றால் இருவரும் ஏதோ சகோதரர்கள் எனவும், இருவரும் இணைந்து தொழில் செய்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். விவரம் புரிய பல வருடங்கள் எடுத்தது. சரி டாடா வேறு; பிர்லா வேறு. ஆனால் யார் இந்த டாடா? கச்சிதமான முகவெட்டும் ஊடுருவும் புன்னகையும் கொண்ட இந்த மனிதர் யார்? இவர் தான் டாடா நிறுவனங்கள் அனைத்தையும் நிறுவினாரா?

அந்த திறமை வாய்ந்த மனிதர் ரத்தன் நவல் டாடா. சுருக்கமாக ரத்தன் டாடா. இந்தியத் தொழிற் துறையின் பீஷ்மர். ஆனால், ஒட்டுமொத்த டாடா குழுமத்தை உருவாக்கியது அவரில்லை. நூற்றாண்டு கண்ட நிறுவனமான டாடா குழுமத்தின் தற்போதைய தலைவர். ஆனால், 1962 ஆம் ஆண்டு அவர் டாடா ஸ்டீலில் ஒரு பயிற்சிபெறும் ஊழியர். ஒரு கடை நிலை ஊழியர், அந்நிறுவனத்தின் தலைவரா? எப்படி? இதை சுவாரசியமான ஒரு புத்தகமாக தந்துள்ளார், என்.சொக்கன்.

1868 -ல் ஜாம்ஷெட்ஜி டாடா தொடங்கிய ஒரு வர்த்தக நிறுவனம் தான் இன்று பல லட்சம் கோடி மதிப்புள்ள டாடா நிறுவனம். மிகத் திறமையான நிர்வாகிகளாலும் கடுமையான உழைப்பினாலும் உயர்த்தப்பட்டதே டாடா நிறுவனம். டாடா குடும்பத்தில் ஒரு நல்ல பழக்கம், அவர்கள் தங்கள் பிள்ளைகளை பொன் குஞ்சாகக் கருதவில்லை. மாறாக திறமையானவருக்கே வாய்ப்புகள் வழங்கப்பட்டது. அமெரிக்கவில் பட்டம் பெற்ற ரத்தன் டாடாவைக் கூட ஒரு பயிற்சியாளராகவே டாடா ஸ்டீலில் சேர்த்துக் கொண்டனர். பல வருடம் தலைவராக இருந்த ஜே.ஆர்.டி டாடா கூட கடை நிலை ஊழியராகவே பணியில் சேர்ந்தார்.

புத்தகம் எதோ ரத்தன் டாடாவைப் பற்றி இருந்தாலும், நூறாண்டு கண்ட டாடா நிறுவனத்தின் வரலாற்றையே விவரமாகத் தருகிறது. இதற்கு எழுத்தாளர் என்.சொக்கனைப் பாராட்டியே தீர வேண்டும். கவனத்தைக் குவித்துப் படித்தால், இரண்டு மணிநேரத்திலேயே புத்தகம் முழுவதையும் படித்துவிடலாம். சொக்கனின் எழுத்து நடை அப்படி..

ஆனால், ரத்தன் டாடா எதிர்கொண்ட பிரச்சனைகளின் தீவிரம் மற்றும் அதை அவர் கையாண்ட விதம் ஆகியவற்றைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அவரே ஒரு புத்தகம் எழுதினால்தான் உண்டு. நிறுவனப் பொறுப்புகளிலிருந்து ஓய்வு பெற்ற பின், ரத்தன் டாடா, வருங்கால நிர்வாகிகளுக்கு வழிகாட்டியாக ஒரு புத்தகம் எழுதுவார் என்று நம்புகிறேன்.



Saturday, April 18, 2009

மக்களாகிய நாம்...


புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கிவரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு
மாறவில்லை - நம்
பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லை.
இது நாடா, இல்லை வெறும் காடா? - இதைக்
கேட்க யாரும் இல்லை தோழா...



கவிஞர் புலமைப்பித்தன்
உன்னால் முடியும் தம்பி (1988)
----------------------------------------------------------------------------------


இந்தப் பாடல் எழுதப்பட்டு இருபது வருடங்கள் ஓடிவிட்டன. ஆனாலும், இந்தஇருபது ஆண்டுகளில் மேலே கூறப்பட்ட நிலைமையில் எந்த மாற்றமும்இல்லை. பஞ்சமும் பசியும் சாராயமும் ஒன்றை ஓன்று விஞ்சி வளர்ந்துகொண்டிருக்கின்றன. யானை கொண்டு போர் அடித்த நாட்டில் இன்று, பசிவயிற்றில் அடிக்கிறது. பகத்சிங்கும் வாஞ்சிநாதனும் போராடி விழுந்த இடத்தில், எழுந்தவர்கள் எல்லாம் சாராயக் கடையில் சுதந்திரம் வளர்க்கிறார். நீதி ஆண்டஇடத்தில், சாதி ஆள்கிறது. இவையெல்லாம் கேடு விளைவிக்கும் என்பதுஅனைவருக்கும் தெரியும். ஆனால், இவற்றின் விளைவுகள் எத்தகயது என்றவிவரங்களும் அவற்றை தீர்க்க வேண்டிய செயல்பாடுகளும் சாதாரனமக்களுக்குத் தெரியாது. இவை தெரியாமல் அவர்களால் பிரச்சனைகளின்தீவிரத்தை உணர முடியாது. எத்தனை மக்களுக்கு பிரச்சனைகளின் தீவிரம்உணர்த்தப்படுகிறதோ, அத்தனை சீக்கிரம் அவை விலகும்.


அரசியல் கட்சிகள் தங்கள் வசதிக்கேற்ப அறிக்கைகளின் மூலம் பொய்மூட்டைகளையே கட்டவிழ்த்துவிடுகின்றன. ஊடகங்களும் பெரும்பாலும் ஒருசார்பு நிலையையே எடுக்கின்றன. நிலைமை இப்படி இருக்கையில், மக்கள்பிரச்சனைகளைப் பற்றி ஒருவர் கட்டுரைகள் எழுதிவருகிறார். அவர், அ.கி.வேங்கட சுப்ரமணியன். இவர், ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி. வேங்கடசுப்ரமணியன் கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து, மக்களாகிய நாம் என்னும்தலைப்பில் ஒரு நூலாக கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.


மொத்தம் 28 கட்டுரைகள்; குடியாட்சி, உள்ளாட்சி, கல்வி, வாழ்க்கை என்னும்நான்கு தலைப்புகளில் பகுக்கப்பட்டுள்ளன.


குடியாட்சி:

இந்தப் பகுப்பில் உள்ள கட்டுரைகளில் எழுத்தாளர், சமத்துவம், மது விலக்கு, விவசாயம், காவல்துறை போன்றவற்றின் தற்போதய நிலைமையைப் பற்றியும்அவற்றை சீர்படுத்த மேற்கொள்ள வேண்டிய வழிகளையும் விரிவாகக்கூறியுள்ளார். பெரும்பாலான கட்டுரைகளில் மகாகவி பாரதியாரின் கவிதைளைபயன்படுத்தியதோடு நில்லாமல், 'ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமா?' என்ற கட்டுரையில் பாரதியாரின் சுதந்திரப் பள்ளுவையும் நமது தற்காலநிலையையும் ஒப்பிட்டுள்ளார்.


யாருக்கு வரவு? யாருக்கு செலவு? என்ற கட்டுரை, கண்டிப்பாக படிக்க வேண்டியஒன்று. சாதாரணமாக அனைவருக்கும் புரியும்படி, விவசாயிகள் எந்த அளவிற்குபாதிக்கப்பட்டுள்ளனர் என்று விளக்கியுள்ளார். அரசின் வருமானம், அரசுஊழியர்களின் வருமானம், பியட் காரின் விலை போன்றவை பல மடங்குஅதிகரித்த போதும் விவசாயப் பொருட்களின் விலை அந்த அளவிற்குஉயரவில்லை. இதற்கு காரணம், மற்ற துறைகளைப் போல் விவசாயத்திற்குபோதிய அளவு அரசாங்கம் கட்டமைப்புகளை மேம்படுத்தாததே காரணம்- இவையே விவசாயிகளின் வறுமைக்குக் காரணம்.


உள்ளாட்சி:


ஊராட்சிகள் ஈட்டியின் கூர்முனைகள் என்று குறிப்பிட்டுள்ள வேங்கடசுப்ரமணியன், அவற்றைக் கொண்டு சிறப்பான நிர்வாகத்தைத் தர முடியும் என்றுகூறுகிறார். உள்ளாட்சிகளில் கட்சிகள் தேவையே இல்லை என்பதே இவர் வாதம். கட்சிகளின் தலையீடு இல்லாமல், நேர்மை, திறமை, எளிமை, துணிவு கொண்டஒரு குடிமகனையே உள்ளாட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், கட்சிகளின் பதவி வெறி உள்ளாட்சி அமைப்புகள் வரை படர்ந்துள்ளது குறித்துகவலையும் தெரிவித்துள்ளார்.


கடந்த இரு ஆட்சிகளிலும் மாநகராட்சித் தேர்தல்களில் நடந்த வன்முறைகள்பற்றி சில கட்டுரைகள் எழுதியுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் என்பது, சட்டமன்றதேர்தல்களில் போட்டியிட்டு தோற்றவர்கள் தங்கள் மானத்தை மீட்கவும், சிலகைத்தடிகள் கட்சித்தலைமையிடம் நல்ல(?) பெயர் வாங்கவும், ஆளும் கட்சிதனது கொடுரமான முகத்தைக் காட்டவுமே நடத்தப்படுகிறது. 2007-ம் ஆண்டுசென்னை மாநகராட்சியில் 99 வார்டுகளுக்கு உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில்மறுதேர்தல் நடந்தது. மாநகராட்சி சார்பில், மக்களை பயமின்றி வாக்களிகக்கோரி, தேர்தல் நாளன்று அறிவுப்பு செய்த போதும் கூட 30% வாக்குகளேபதிவானது. அரசியல் கட்சிகளின் இந்த கொடுர நோக்கத்தால் மக்கள் நம்பிக்கைஇழக்கும் அபாயத்தை இந்த கட்டுரைகள் சுட்டுகின்றன.


மக்களுக்கு நெருக்கமான நிலையில் உள்ள போதும், உள்ளாட்சி அமைப்புகளுக்குஅதிகாரங்கள் மிகவும் குறைவு. வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும்கையோடு சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு முயற்சி செய்யும் போதே உள்ளாட்சிஅமைப்புகளின் நிலைமை புரிந்திருக்கும். உள்ளாட்சி அமைப்புகளின்அதிகாரங்களை படிப்படியாக உயர்த்துவதன் மூலமே மக்களுக்கு சிறந்தநிர்வாகத்தின் பயனை அளிக்க முடியும்.


கல்வி:


அனைவருக்கும் கல்வி அளிப்பதில் உள்ள பிரச்சனைகள் இத்தொகுதியில்ஆராயப்பட்டுள்ளது. அதில் முக்கியமானது கல்வி வரி பற்றியது. இப்படி ஒரு வரிஇருப்பது பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிந்த போதும், அவை கல்விக்காகச்செலவழிக்கப்படுகிறதா? என்று நாம் சிந்தித்த்துண்டா? அதைப் பற்றி இருகட்டுரைகளில் விரிவாகக் கூறியுள்ளார். உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்கும்கல்வி வரிகள், தொடக்கக் கல்விக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டியவை. ஆனால் அவை தொடக்கக் கல்விக்காக பயன்படுத்தப்படவில்லை என்பதைதகவல் அறியும் சட்டம் மூலமாகவே எழுத்தாளர் அறிந்துள்ளார். இதைப் பற்றிநாம் யோசனை செய்வதே இல்லை. இந்தப் போக்கு மாற வேண்டும். நாம்செலுத்தும் வரிகள் சரியான நோக்கத்திற்கு பயன்படுகிறதா? என்றுகண்காணிப்பதும் நமது கடமை தான்.


தேர்வு இல்லை; ஆனால் நுழைவு உறுதியா? என்ற கட்டுரையில் நுழைவுத் தேர்வுரத்து செய்வதால் மட்டுமே கிராமப்புற மாணவர்களுக்கு பொறியியல் மற்றும்மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காது என்பதை புள்ளிவிபரங்கள் மூலம்விளக்கியுள்ளார். கிராமப்புற பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவாகஇருப்பதால், அவர்களின் மேற்ப்படிப்பே கேள்விக்குறியாக இருப்பதே உண்மை. ஆனால், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளாமல், நுழைவுத்தேர்வை மட்டும் ரத்து செய்வது, ஒரு பயனையும் தராது என்பதே வேங்கடசுப்ரமணியன் அவர்களின் கருத்து.

வாழ்க்கை:


இதில், நெலசன் மண்டேலாவின் வாழ்க்கையை சில பக்கங்களில் தந்துள்ளார்எழுத்தாளர். சில பக்கங்களே ஆனாலும் கூட அவர் வாழ்க்கை முழுதும்கட்டுரையில் தந்திருப்பது, வேங்கட சுப்ரமணியன் அவர்களின் எழுத்துத் திறனின்மேன்மையைக் காட்டுகிறது.

புத்தக விபரங்கள்:








தலைப்பு: மக்களாகிய நாம்… எழுத்தாளர்: அ.கி. வேங்கடசுப்ரமணியன் பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் விலை: ரூ.100/-
மேலும் விபரங்களுக்கு...



பத்ரிக்கு ஒரு வேண்டுகோள்: இப்புத்தகத்தை மலிவு விலைப் பதிப்பிலும் வெளியிட்டால் , இக்கருத்துக்கள் அதிகமான மக்களிடம் போய்ச்சேரும்.




Monday, March 23, 2009

அரசூர் வம்சம்


தலைப்பு : அரசூர் வம்சம்
எழுத்தாளர் : இரா.முருகன்
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்
விலை : ரூ.175

மேலும் விபரங்களுக்கு...



இது, தமிழில் நான் படித்த முதல் நாவல். தன் பரம்பரையின் துணுக்குகளைக் கொண்டு இக்கதையை ஆசிரியர் அமைத்துள்ளார். கற்பனை கட்டுப்பாடு அற்றது; கட்டுக்குள் வரவில்லை என்றால் ஒரு பைசா கூடப் பிரயோஜனப்படாது. அதைக் கட்டுப்படுத்தி, புதிய உலகத்தைப் படைத்து, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அடக்கி, அங்கு நம்மையும் இறக்கி தாம் படைத்த உலகை, மக்களை எழுத்தால் அறிமுகப்படுத்துவது அத்தனை எளிதல்ல. ஆனால், அரசூர் வம்சத்தின் கதையை, அலுப்புத் தட்டதவாறு மிகவும் நேர்த்தியான நடையில் இரா.முருகன் படைத்துள்ளார்.


பாத்திரப் படைப்பு:


ஜமீந்தார், சாமிநாதன், சங்கரன், கொட்டக்குடி தாசி, சுப்பம்மாள், கிட்டவய்யன் என்று விதவிதமான கதாப்பாத்திரங்கள்.


ஆட்சி போன பின்பு ஆசை மட்டும் இருக்கும் ஜமீந்தார்; படித்தே பைத்தியமான சாமிநாதன்; இயல்பாய் இருக்கிறாளா, இல்லை இயக்கப்படுகிறாளா என்றே தெரியாத சுப்பம்மாள்; வெண்பா எழுதும் தாசி; என்று வித்தியாசமான கதாபத்திரங்களுக்கு நடுவே எப்போதும் குழம்பிக் கொண்டிருக்கும் சங்கரன்.


பனியன் சகோதரர்கள். முன்னுரையைப் படிக்கும் போது பனியன் சகோதரர்கள், கதை முழுதும் வருவார்களோ என்று தோன்றியது. ஆனால், அவர்கள் வந்துவந்து போகிறார்கள். வரும்போது வில்லங்கத்தோடு வருகிறார்கள், போகும்போது குழப்பிவிட்டுப் போகிறார்கள். வயசனும் சுலைமானும் கதையின் ஓட்டத்தை திருப்பிவிடுகிறார்கள்.


முன்னோர்கள், தம் மக்கள் கூடவே இருக்கிறார்கள். அறிவுரை கூறுகிறார்கள், விவாதிக்கிறார்கள், சுப்பம்மாளைப் படுத்தியெடுத்து நலங்குப்பாட்டுப் பாடுகிறார்கள், சாராயம் கேட்கிறார்கள், அனைத்தையும் சுபமாக்குகிறார்கள். முன்னோர்களைப் பயன்படுத்தியே கதையில் சில மர்மங்களுக்கு விடையளிக்கிறார், எழுத்தாளர். நம் முன்னோர்கள், நம்முடன் பேசுவார்களா?


கொட்டக்குடி தாசியை, எழுத்தாளர் சித்தரிக்கும் விதம் பாராட்டுக்குறியது. அவள் ஒரு சகலகலாவல்லி. ஒரிடத்தில், ஐய்யங்கார் ஜோசியரே, அவளைத் தன் வீட்டுக்கு வரவழைத்து வெண்பா எழுதித்தரக் கேட்கிறார்.


கதையின் அமைப்பு:


இது அரசூரின் கதை. அங்கு வாழ்ந்த ஒரு வம்சத்தின் கதை. எழுத்தாளர், அரசூரின் கதையைச் சொல்லியிருக்கிறார். அம்மக்களை விவரித்திருக்கிறார். நீதியுரைக்கிறேன் என்றோ, நியாய அநியாயங்களைப் பிரித்துக் கூறுகிறேன் என்றோ எழுதவில்லை. தன்னுடைய கதாபாத்திரங்களுடைய விமர்சனத்தை அவர் முன்வைக்கவில்லை. மாறாக கதையோட்டத்திலேயே அவர்களின் இயல்பை விளக்குகிறார்.


கதையின் நடை, ஒரே சீராக இருக்கிறது. சங்கரன், கப்பலில் மாட்டிக்கொள்ளும் போதும், கிட்டவய்யன் மதம்மாறும் போதும், சிறிது மெதுவாய்ப் பயணிக்கிறது. ஆனால், ஆவலைத் தூண்டுகிறது. வசனங்கள் சுருக்கமாகவே எழுதப்பட்டு, பக்கங்களுக்கு இறக்கைகள் பொருத்தப்பட்டுள்ளது. பயன்படுத்தியுள்ள பல சொற்கள், தற்போது பயன்பாட்டில் இல்லாவிடினும் அர்த்தம் புரிய சிரமமில்லை, கதையின் ஓட்டத்தையும் பாதிக்கவில்லை.


கதையின் தொடக்கம் முதல் இறுதி வரை, பிராமண சம்பிரதாயங்களை கதையோட்டத்திலேயே சொல்லியுள்ளார். அதிலும் சுந்தர கனபாடிகள் மூலம் திவசம் செய்வதன் அர்த்தத்தை மிக அழகாக கூறியுள்ளார். கிறித்தவர்களின் மதமாற்றப் பிரச்சாரத்தையும், கிட்டவய்யன் பணத்திற்காக மதம் மாறுவதையும் இதமாகவே கூறியுள்ளார். இப்படி மத சம்பந்தமான விஷயங்களை விமர்சிக்காமல் இயல்பாகவே தெரிவித்திருப்பது நன்றாக உள்ளது.


சங்கரன் வீடு அவன் சகோதரனுடன் எரிந்து சாம்பலாகிறது. யார் எரித்தார்கள்? தெரியவில்லை. சங்கரனுக்கு ஜமீன் மீது சந்தேகம். ஆனால், உண்மையில் யார் எரித்தார்கள். கடைசி வரை அதைப் பற்றிக் கூறவேயில்லை. எழுத்தாளரும் முன்னோர்களிடம் கேட்கிறார். அவர்களுக்கும் தெரியவில்லை. கதையின் சுவாரசியத்துக்காகவே வீடு சாமிநாதனோடு எரிக்கப்பட்டதோ? ஆசிரியருக்கே வெளிச்சம்.


ஒரு வருத்தம்:


இன்று தமிழ் சினிமாவில் ஒரு வழக்கம். இளைஞர் என்றாலே பாரும்(Bar) பீரும் என்றே ஒரு எழுதாத விதியாகிவிட்டது.


இக்கதையிலும் அப்படித்தான். அனைத்துக் கதாபாத்திரமும் சதாசர்வ காலமும் காமத்தையே சிந்தனை செய்து கொண்டிருக்கின்றன.


சங்கரனுக்கு வாலிப வயது. அவனுக்கு இப்படிப்பட்ட சிந்தனைகள் வருவது, இயல்பானது என்று கொள்ளலாம். அவனுக்கு கொட்டக்குடி தாசியின் மீது ஆசை, ராணியின் மீது ஆசை. மனோதத்துவத்தில் Law of Attraction என்று சொல்லுவார்கள். ஒருவன் எதை எப்பொதும் சிந்தித்துக் கொண்டிருக்கிறானோ அவன் அதன் பால் ஈர்க்கப்படுகிறான். சதாசர்வகாலமும் தேகசுகத்தையே சிந்திக்கும் சங்கரன், சென்னைப் பட்டணத்தில் கப்பலில் வீழ்வதும் காமத்தில் தான்.


ஜமீந்தார், ஐம்பதுக்கு மேல் ஆசை வளர்க்கும் குழந்தை. இவரை சபலபுத்தி ஆட்டுவிக்கிறது. சேடிப் பெண்னையும் மலையாளக் குட்டிகளையும் நினைத்தே காலம் கழிக்கிறார். முன்னோர்களின் புத்திமதிகளைக் கூட அவர் கண்டுகொள்ளவில்லை. அவரே சும்மா இருந்தாலும் அவரைத் தூண்டிவிட்டுக் காரியம் சாதிக்கும் பனியன் சகோதரர்கள்.


பகவதிக்குட்டியின் சகோதரர்கள், கூட்டுக் குடும்பமாக வாழ்கிறார்கள். கூட்டுக் குடும்பத்தில் இல்லாத சுவாரசியமா? அவர்கள் தேகசாந்தி செய்துகொள்வதையா கூற வேண்டும். இவர்கள் மட்டுமல்ல. இறந்து போய் ஆகாசத்தில் பறக்கும் ஆவிகள் கூட காமத்தையேவா சிந்தித்துக் கொண்டிருக்கவேண்டும். புஸ்தி மீசைக் கிழவன் இறந்த பிறகும் கூட மூத்தகுடிப் பெண்டுகளின் பின்னால் செல்கிறார். இதைக் கற்பனை என்றே வைத்துக்கொண்டாலும் கூட, ஏற்றுக்கொள்வது கடினம் தான்.


ஜமீந்தார் பேசும் வார்த்தைகள், ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்குமா என்பதை நீங்கள் படித்தால் தான் சொல்லமுடியும். ஆனால், எனக்கு இதில் சில சொற்கள் சங்கடமானதாகவே இருந்தது. ஒரு சிறந்த கதையை தன்னுடைய சொந்த வாழ்வின் துணுக்குகளில் இருந்து அழகான கதாபாத்திரங்களின் மூலம் வரைந்த இரா.முருகன் மேலே சொன்ன வசனங்களையும் கதாபாத்திரங்களின் சபலமான சிந்தனைகளையும் தவிர்த்திருக்கலாம்.