Friday, November 20, 2009

1857 சிப்பாய் புரட்சி




தலைப்பு: 1857 சிப்பாய் புரட்சி
எழுத்தாளர்: உமா சம்பத்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ.100

வெறுப்பின் முடிவு என்னவாக இருக்கும்?
கோபத்தின் முடிவு என்னவாக இருக்கும்?
போர்களின் முடிவு என்னவாக இருக்கும்?
வெறுப்பு, கோபம், போர் இதெல்லம் ஒரே உணர்ச்சியின் பல்வேறு படிமங்கள். இவற்றின் முடிவு இழப்பைத் தவிர ஒன்றுமில்லை. வெறுப்பினால் அமைதி; கோபத்தால் நிம்மதி; போரினால் உயிர் போய்த்தான் ஆகவேண்டும். இவற்றால் கிடைக்கப்போவது ஒன்றுமில்லை.
ஆனால், போரைத் தவிர வேறுவழியில்லை அவர்களை அழிப்பதற்கு. எங்கிருந்தோ வந்தார்கள்; வியாபாரம் செய்தார்கள்; நண்பர்கள் ஆனார்கள்; அதிகாரம் செய்தார்கள்; இப்போது அநியாயம் இழைக்கிறார்கள். அகண்ட பாரதமும் அவர்கள் வசம்; கிழக்கிந்திய கம்பெனியிடம். அக்கினிக் குஞ்சுகள் போல் மக்களிடம் இருந்துவந்த வெறுப்பு ஒன்றுகூடி பறங்கியரை எதிர்த்த ஆண்டு 1857. இந்த சிப்பாய்க் கலகம் தான் முதல் இந்திய சுதந்திரப் போர் என்று அழைக்கப்படுகிறது.(ஆனால் வேலூரில் 1806 ரிலேயே சிப்பாய்க் கலகம் நடந்தது.)
சிப்பாய்க் கலகம் தொடங்குவதற்கு ஒரு முக்கியக் காரணம் மதம். கம்பெனியின் படையில் இந்துக்களும் முஸ்லிம்களும் அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள். பன்றிக்கொழுப்பினால் பூசப் பட்ட குண்டுகளை இருமதத்தவரும் ஏற்க மறுத்தார்கள். அதனை எதிர்த்து மங்கள் பாண்டே என்ற சிப்பாய் தனியாக புரட்சி நடத்தினான்; அவன் அடக்கப்பட்டான். ஆனால், அவன் ஏற்றிவிட்ட நெருப்பு அசுர வேகத்தில் பரவியது. (சிப்பாய்களுக்குள்ளும் மதம் மற்றும் சாதிரீதியான வேறுபாடுகள் நிறையவே இருந்தன.)
பல்வேறு அரசர்களும் ஆங்கிலேயர்கள் மீது கடுப்பில் இருந்ததால் சிப்பாய்களுக்கு உதவி கிடைப்பதில் சிக்கல் இல்லை. போராட்டத்திற்கு நாள் குறிக்கப்பட்டது அது மே 31, 1857. ஆனால், மீரட்டில் முன்னதாகவே தொடங்கியது. வெறுப்பின் உச்சத்திலிருந்த சிப்பாய்கள் வெள்ளைக்காரர்களைக் கொன்று குவித்தார்கள். இங்குதான் புரட்சியின் குரூர முகம் தொடங்கியது. புரட்சியாளர்களின் குறி வெள்ளை உயிர்களாக மட்டுமே இருந்தன. பெண்கள் குழந்தைகள் என்று ஒருவரையும் விட்டுவைக்கவில்லை. அவர்களின் ஆத்திரம் அவர்களைச் செலுத்தியது.
மீரட்டிலிருந்து தில்லி சென்று பின்னர் ஊர் ஊராகப் பரவியது புரட்சி. வெள்ளையர்கள் ஆட்டம் கண்டார்கள். ஆனால், அனைத்து சிப்பாய்களும் புரட்சியில் இல்லை. சீக்கியப் படைகள், கூர்காப் படைகள் என சில படைகள் ஆங்லேயருக்கு மிக விசுவாசமாக நடந்துகொண்டன. கடைநிலை ஊழியர்கள் காட்டிய விசுவாசமே வெள்ளையர்களை வாழவைத்தது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். ஒரு கோட்டை முற்றுகையின் போது 24 மணிநேரத்தில் ஒரு கிணறையே சீக்கியச் சிப்பய்கள் தோண்டியதாக கூறப்படுகிறது. புத்தகத்தின் இறுதியில் உள்ள ரஸ்ஸெல் என்னும் ஆங்கில பத்திரிக்கையாளரின் குறிப்பு இதைத்தான் சொல்கிறது "கடைநிலை இந்திய ஊழியர்களின் ஆதரவினால் தான் ஆங்கிலப்படை தாக்குபிடித்தது."
புரட்சியாளரகள் தாமாக கிளம்பிவிடவில்லை. அவர்களுக்கு பின் பல பெரிய தலைகள் இருந்தன. நானா சாகிப், தாத்தியா தோப்பி, குன்வர் சிங், ஜான்சியின் லட்சுமி பாய், மெளல்வி அகமது ஷா போன்று பலர் புரட்சியினை வழிநடத்தினர். ஆனால் இதில் நானா சாகிப், தோல்விக்கு பிறகு தனக்கும் புரட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்று ஒரு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. இதில் ஜான்சி ராணியை பலருக்கும் தெரிந்திருக்கும். தன்னுடைய இருபது வயதில் ஒரு பெரிய புரட்சி செய்தவள். தாத்தியாவும் குன்வர் சிங்கும் சிப்பாய்ப் புரட்சியில் வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனம். இவர்களின் வீரம் ஆங்கிலேயர்களுக்கு பெரும் இழப்பை ஏற்ப்படுத்தியது.
பல்வேறு இழப்புகளை இருதரப்பும் சந்தித்தது. ஆயிரக்கணக்கன உயிர்கள், ஏராளமான பொருளிழப்பு; வெறுப்பின் விளைவு இந்த இழப்புகள் மட்டும்தான். ஒவ்வொருவராக புரட்சி தலைவர்கள் வீழ்ந்தார்கள், புரட்சியின் வேகம் குறைந்து, மீண்டும் கிழக்கிந்திய் கம்பெனியிடமே ஆட்சி வந்தது. ஆனால் முடிவில் சிறு மாற்றம்; ஆட்சி அனைத்தும் இப்போது இங்கிலாந்து ராணியின் கீழ் வந்துவிட்டது. ஆனால் கிழக்கிந்திய கம்பெனி இன்னும் போகவில்லை; அதற்கு பல வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
எழுத்தாளர் உமா சம்பத் சிப்பாய்ப் புரட்சியின் அனைத்து நிகழ்வுகளையும் தந்திருக்கிறார் என்றே நினைக்கிறேன். ஆனால், இது வரலாற்று புத்தகமா, இல்லை ஒரு கதையாக கூறமுற்பட்டுள்ளாரா என்று தெரியவில்லை. ஆனால் இப்புத்தகம் 1857 சிப்பாய் புரட்சியின் ஒரு எளிய அறிமுகமாகவே இருக்கிறது. தொடந்து போர்களாக வருவதால் பாதியிலேயே அலுப்புதட்டுகிறது. அதற்கு கண்டிப்பாக எழுத்தாளரைக் குறை கூற முடியாது.
ஒரு வரலாற்று புத்தகம் என்பதால் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. புத்தகத்தில் பல போர்களின் காலம் துல்லியமாக தரப்படவில்லை. காலவரிசைப் பட்டியலும் (Timeline) இணைக்கப்படவில்லை. மேலும் ஆங்கில நூல்களில் உள்ளது போன்று அகரவரிசையில் வகுகப்பட்ட (Index) சொற்கள் இல்லை. இதனால் இப்புத்தகத்தை Reference ஆக பயன்படுத்துவது கடினம். இவற்றையெல்லாம் சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

Thursday, November 5, 2009

வாழ்க்கை என்னும் அற்புதம்


"நான் ஏன் பிறந்தேன்?"
இந்தக் கேள்வியை நீங்கள் எத்தனை முறை உங்ககிட்டயே கேட்டிருப்பீங்க. நான் சண்ட போடும் போதெல்லாம்  அம்மாகிட்ட "என்ன ஏன் பெத்த?”ன்னு கேட்பேன்; ரொம்ப முட்டாள்தனமான கேள்வி. ஒங்க வாழ்க்கை சரியா போறவரைக்கும் இந்த கேள்வியெல்லாம் தோனாது. சிலருக்கு எப்பவுமே தோனாது. வாழ்க்கை நீங்க நெனச்ச மாதிரி போலைனா, அப்ப வர்ற முதல் கேள்வியே இதுதான்.

அந்த கேள்விக்கு பதில் கடைக்கறதுக்குள்ள வேற கேள்வியெல்லாம் தோணும். "ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது?", "என்ன ஒருத்தரும் மதிக்க மாட்டேங்கறாங்களே ஏன்?", இப்படியே கேட்டுட்டே போய் கடைசியா "இப்படி ஒரு வாழ்க்க வாழறதுக்கு செத்துபோலாமா?" -ன்னு தோனும். இதுக்கெல்லாம் பதில்?

கடவுள் உங்கள, இங்கவுள்ள இடத்த நிரப்பரதுக்காக படைக்கல. இங்கவுள்ள சொத்து சுகத்தையெல்லாம் அனுபவிக்க மட்டும் படைக்கல. அப்பறம் எதுக்கு, இந்த ஊரில, இந்த தெருவுல, நீங்க பிறக்கனும்? உங்கள சுத்தியுள்ள யாரோ ஒருத்தருக்கோ இல்ல பலருக்கோ உதவி செய்யதான் உங்கள படைச்சிருக்கனும். அது உங்க அப்பா அம்மாவா இருக்கலாம்; உங்க பக்கத்து வீட்டுகாரரா இருக்கலாம்; உங்க கூடபிறந்தவங்களா இருக்கலாம்; வந்த இல்ல வரப்போற துணையா இருக்கலாம்; உங்க குழந்தையாகூட இருக்கலாம்.
எனக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கை என்னும் விளக்கை பாதுகாத்து;
இன்னும் பிரகாசமாக அடுத்த தலைமுறைக்கு அளிப்பதற்கே நான் உழைக்கிறேன்.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
இதையெல்லாம் யோசிக்கத் தூண்டினது ஒரு சிறுகதையும் அதை தழுவி வந்த ஒரு திரைப்படமும். 1943ல பிலிப் வான் டோரன் (Philip Von Doren) எழுதிய The Greatest Gift ங்கற சிறுகதை தான் அது. பின்னர் 1946ல Frank Capra அதை தழுவி It’s A Wonderful Life ன்னு ஒரு படம் இயக்கினார்.

ஜார்ஜுக்கு மேற்படிப்ப முடிச்சிட்டு உலகத்த சுத்தனும் ஆசை. ஆனா, கிளம்பும்போது அவனோட அப்பா இறந்துவிடுகிறார். குடும்ப தொழில ஜார்ஜ் பார்த்துக்கனும்; இல்லாட்டி சொத்தெல்லாம் ஒரு பேராசைக்காரன்ட போயிடும். எப்படியாவது இந்த தொழில இருந்து விடுபடனும் ஜார்ஜ் நினைக்கிறான். ஆனா, முடியல. அதுக்குள்ள அவன் விரும்பின பெண்னையே கல்யாணம் செய்துக்கறான். குடும்பத்தோடு அதே ஊரில வளமா இருக்கான்.

ஒரு நாள் தொழில்ல நஷ்டம் ஏற்பட்டதால வாழ்க்கையை வெறுத்து தற்கொலை பண்ணிக்கப்போறான். அப்ப ஒரு தேவதை அவனை தடுத்து என்ன ஏதுன்னு விசாரிக்குது. தன்னோட கஷ்டத்த சொல்லி "நான் ஏன் பிறந்தேன்?"ன்னு தேவதைகிட்ட சண்டை போடறான். தேவதை அவன் பிறக்காமலே இருந்தால் அவனைச் சுற்றியுள்ளவங்க எப்படி கஷ்டப்படறாங்கன்னு காமிக்குது. அப்பதான் ஜார்ஜ் தான் எவ்வளவு அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கோம்ன்னு புரிஞ்சிக்கரான்.

It’s A Wonderful Life ஒரு நல்ல திரைப்படம். மிக எளிமையான, அதேநேரம் நேர்த்தியான திரைக்கதை; படம் முழுதாகவே இழையோடும் நகைச்சுவை இருப்பதோடு மட்டுமில்லாமல், வாழ்க்கை எவ்வளவு அற்புதமானது என்று புரியவைக்கிறது. முடிந்தால் நீங்களும் இந்தப் படத்தைப்பாருங்கள்.

நம்முடைய வாழ்க்கையும் அற்புதமானதுதான்.