Tuesday, February 14, 2012

லூசுத்தனமான வாழ்க்கை #2

பிப்ரவரி 14 2012                                                                                                    கர மாசி 2

பெங்களூரில் நாளுக்கு நாள் வெய்யில் அதிகமாகிக் கொண்டே போகிறது. நேற்று திருநெல்வேலிலும் பெங்களூரிலும் அதிகளவு வெப்பம் என்பது ஒரே அளவில் பதிவாகியிருக்கிறது. ஆபீஸ் காண்டீனில் சாப்பிட்டுவிட்டு, போட வேண்டிய இடத்தில் போடாமல், எச்சுத்தட்டை தூக்கிக் கொண்டு படியிறங்கும் வரை எனக்கு முத்தியிருக்கிறது.

இந்த வருடம் தொடங்கி ஒன்றரை மாதம் ஆகிவிட்ட பின்னும் உருப்படியாக எதுவும் செய்ததாக நினைவில்லை. தாயார் சன்னதி படிக்கத் தொடங்கியிருக்கிறேன். கிட்டத்தட்ட இருபத்தியிரண்டு வருடங்கள் அந்த நாசமாய்போன ஊரில் சுற்றியிருக்கிறேன். எனக்குத் திருநநேலின்னா அது சுலோச்சன முதலியார் பாலத்துக்கு இந்தப் பக்கம் தான். அப்பப்போ ஆரெம்கேவிக்காக அந்தப் பக்கம் போவதுண்டு. இப்போ ஆரேம்கேவியும் பாலத்துக்கு இந்தப் பக்கம் வந்தாச்சு. இந்த புக்க இன்னும் ரெண்டு மூணுவாட்டி படிச்சா நானும் பிரத்யேக திருநேலி வார்த்தையெல்லாம் பேச ஆரம்பிச்சிடுவேன். அப்புறம் என்னத் திட்டக்கூடாது. அண்ணாச்சி சுகா இருக்கார். அவரை திட்டவும்.

பிப்ரவரி 14, என்றாலே என் நினைவுக்கு வருவது எங்கள் கணிதப் பேராசிரியர் சுந்தரராஜன் சார் தான். கல்லூரியின் ஒரு கட்டிடத்தில் அவர் பாடம் எடுக்கிறார் என்றால், மற்ற எந்த கட்டிடத்திலிருந்தும் துல்லியமாக கேட்கலாம். அடிவயிற்றிலிருந்து அவர் கத்திக் கத்திப் பாடம் எடுக்கும் போது, அது மத்தியானமே ஆனால் கூட தூக்கம் வராது. பாடத்தை எடுத்து முடிப்பதில் அவர் காட்டும் அக்கறையும், ஒவ்வொரு தலைப்புக்கு அவர் தரும் நோட்ஸும் மறக்கவே முடியாதது. அவருக்காக ஒரு orkut communityபிரசன்னா உருவாக்கினான்.

ஒரு பிப்ரவரி 14ஆம் நாள் பாடம் எடுக்க வந்தவர், கரும்பலகையில் எழுத கையை உயர்த்தினார், பின் ஏதோ நியாபகம் வந்தவராக திரும்பி எங்களைப் பார்த்துச் சொன்னார்,

"காண்டாமிருகத்த மனசுக்குள்ள நுழைய விடவேகூடாது. நொழைஞ்சிடுச்சுன்னா.. அவ்ளோதான்”

Friday, October 14, 2011

லூசுத்தனமான வாழ்க்கை

காலைல எழுந்த உடனே ஒரே எரிச்சல். எத்தனை மணிக்கு தூங்கி எத்தனை மணிக்கு எழுந்தாலும் அதே எரிச்சல். பல் தேச்சு சில்லறையத் தேடிப் பிடிச்சு பால வாங்கி காப்பி போட்டு, அத நானே குடிச்சு. என்ன வாழ்க்கைடா இது!

எவ்வளவு நேரம் தூங்கினாலும் சோர்வா தான் இருக்கு. அதுல இந்த டாக்டர் பத்ராவோட தொந்தரவு வேற. காலங்காத்தால மூணு மணிக்கு SMS. 'Don't Take your hair fall Easy' யாம். அது இருந்தா என்ன போனா என்ன. காலங்காத்தால மூணு மணிக்கா இதுக்கெல்லாம் கவலைப்பட முடியும்.

எடுத்த வேலையெல்லாம் முடிக்காம அப்படியே இருக்கு. எந்த வேலையையும் சொன்ன தேதியில முடிச்சு கொடுத்ததே இல்ல. தெரிஞ்சவன் தெரியாதவன் எல்லாரும் கேட்டாச்சு ‘ஏன் எப்போதும் சீரியஸாவே இருக்க?’ நான் நார்மலா இருந்தாலே அப்படித்தான் இருப்பேன்னு எத்தன பேர்கிட்ட தான் விளக்கம் கொடுக்க? ஒரு தடவ பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்க போனேன். அந்த போட்டோ கிராஃபர் தொடர்ந்து மூணு தடவ திரும்பத் திரும்ப ‘smile sir' னு சொல்லிக்கிட்டே இருந்தார். அவர் மூணாவது தடவ சொல்லும் போது எனக்கு கோவம் வந்திடுச்சு. ‘இவ்ளோ தான் எடுங்க எடுங்க’. நியாயமா அந்தாளுக்குத் தான் கோவம் வந்திருக்கணும்.

இந்த self-control விஷயத்துல ரொம்பவே மோசம். ஏதாவது ஒன்னு செய்யணும்னு நினச்சுப்பேன் ஆனா செய்யமாட்டேன். மறதியெல்லாம் இல்லை. முழுச் சோம்பேறி ப்ளஸ் மனம் போன போக்குல போறது. இதைச் சொன்னா 'மனத்தை ஏன் அடக்கணும். தும்மல அடக்குவியா? விக்கல அடக்குவியா? அத அடக்குவியா? இத அடக்குவியா? அதே மாதிரி மனசையும் அடக்க கூடாது. அதுபாட்டுக்கு அலையவிட்டு வேடிக்கை பாரு'ங்கறாய்ங்க. 

ஐயா சாமி மனச அடக்கணும்னு யாரு சொன்னா? கவனத்தை குவிக்கணும்னு தான சொல்றாங்க. அனுஷ்கா பத்தி நினைக்கும் போது அனுஷ்கா நினைவு வந்தா தப்பில்லை. ஆஞ்சநேயர் கோயிலுக்கு போயி ‘கடவுளே! எனக்கு மட்டுமாவது நல்ல புத்திய கொடு’ன்னு ஒரு முக்குல உக்காந்து உருகும் போது அனுஷ்கா நினைப்பு வந்தா எரிச்சல் வருமா வராதா? இல்ல, உங்க மேனேஜர் சீரியஸா ஒரு விஷயம் பேசறார், ஒரு வார்த்த ‘ட்விட்டர்’னு சொல்லிட்டார். உடனே உங்க மனம் உங்க ட்விட்டர் ஐகான நினைவுல கொண்டுவந்து, அதுலேர்ந்து முந்தின நாள் ட்விட்டர்ல படிச்ச ஜோக்குக்கு போயி, அதுக்கு நீங்க இப்போ சிரிச்சு, அத உங்க மேனேஜரும் பார்த்தா எரிச்சல் வருமா வராதா? இதுக்கு தான் சொல்றேன் மனச கட்டுப்படுத்தணும். ஆனா என்னால முடியல.

அதுக்கடுத்தது அறிவுப் பிரச்சனை. பதினாறாம் வாய்ப்பாடு வரை தெரிஞ்சா போதாதா. இதப் படிப்போமோ அதப் படிப்போமான்னு சதா எதையாவது தேடிக்கிட்டு. யாருக்கு யாரு மகாகவியா இருந்தா எனக்கென்னனு சும்மாயிருக்கா. சில சமயம் தேவையானத படிக்கிறத விட தேவையில்லதத தான் அதிகமா படிக்கிறேன். 

இந்த Time Sheet எல்லாம் போட்டுப் பார்த்தா எவ்வளவு நேரம் வீணடிக்கிறேன்னு தெரிஞ்சுக்கலாம்தான். தெரிஞ்சு என்ன செய்ய? சரி கூடவே ஒரு டுடு லிஸ்ட் வெச்சுகிட்டா நல்லாயிருக்கும்ல? இருக்கும் தான். தொடர்ந்து ரெண்டு நாளைக்கு மேல அத ஃபாலோ பண்ணுவேன்ற நம்பிக்கை எனக்கில்லை.

இதப்பத்தி மத்தவங்க கிட்ட பேசினா சிலர், ‘இந்த வயசுல உனக்கென்னைய்யா என்ஜாய் பண்ணு’ன்றாங்க. இன்னும் பலர் ‘கல்யாணம் பண்ணிக்கோ கவலையெல்லாம் போயிடும்’னு சொல்றாங்க. கொஞ்சம் வயசு குறைஞ்சவங்ககிட்ட கேட்டா ‘Go get a girlfriend'டாம். அதுக்கெல்லாம் இந்த மூஞ்சிய வெச்சுகிட்டு நானெங்கே போறது. தெருத்தெருவா அலைய வேண்டியது தான்.

இந்தப் பதிவு மாதிரி என்னென்வோ பண்றேன், ஏதாவது நடந்து உள்ளொளியோ உள்ளெலியோ பட்டுனு ரெண்டுல ஒன்னு வெளியே வந்துட்டா பரவாயில்ல. ம்ம்... பாப்போம்.

Tuesday, September 27, 2011

சேனைப் புழுக்கு

குறிப்பு: விளையாட்டாக சில வார்த்தைப் பிரயோகங்கள் பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால் இப்படியொரு பதார்த்தம் உண்டு என்பதை தயவு செய்து நம்பிவிடுங்கள். 

தேவையான பொருள்கள்:
  • சேனைக் கிழங்கு - 250 கிராம்
  • தட்டப்பயறு      - 100 கிராம்
  • பச்சை மிளகாய்  - 3
  • தேங்காய்        - கொஞ்சம் (துருவியது)
  • உப்பு            - தேவையான அளவு
  • தேங்காய் எண்ணெய் - இரண்டு டீ ஸ்பூன் 

சமையல் குறிப்பு template படி இந்த இடத்தில் புழுக்கு செய்த பின் எடுத்த புகைப்படம் வரவேண்டும். என்னிடம் புகைப்படம் இல்லை. வழக்கமாக நான் கேட்டுவிட்டு திருடி எடுத்துப் போடும் இடத்திலும் இந்தப் படம் இல்லை. (அது சரி! அங்கிருந்தால் நான் ஏன் இதை எழுதிக் கொண்டிருக்கப்போகிறேன்.)

செய்முறை:
  • சேனைக்கிழங்கை சின்னச் சின்ன கன சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்
  • சேனைக்கிழங்கையும் தட்டைப்பயிரையும் கூக்கரில் வைத்து சேர்த்தோ அல்லது தனித்தனியாகவோ உப்பு சேர்த்து வெந்து கொள்ளவும். (கொஞ்சம் குழைவாகவே வெந்து கொள்ளலாம். இல்லையென்றால் சேனை செமிக்க கடினமாக இருக்கும்.)
  • பச்சை மிளகாயை வகுந்து கொள்ளவும்
  • ஒரு கனத்த பாத்திரத்தில் தேங்காய் எண்ணை விட்டு பின்,  வேகவைத்த கிழங்கையும் பயறுயும் போட்டு கிண்ட வேண்டும். 
  • இதேடு வகுந்து வைத்த பச்சை மிளகாயையும் சேர்த்து கிண்டவும். 
  • பிறகு பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி தேங்காய்த் துருவலை சேர்க்கவும்.
* சேனை நாக்கை அரிக்கலாம். நாக்கை பல்லில் சொறிந்து கொள்வதைத் தவிர வேறேதும் வழியில்லை.


மேட்ச் ஃபிக்சிங் கார்னர்: 
பருப்பு ரசம், எலுமிச்சை ரசத்திற்கு இது நன்றாக இருக்கும். கொஞ்சம் காரமாக செய்தால் தயிர்சாத்ததிற்கும் சேர்த்துக் கொண்டு சாப்பிடலாம். 


தொடர்புள்ள சுட்டிகள்:
@jsrigovind
@losangelesram