Showing posts with label இரா.முருகன். Show all posts
Showing posts with label இரா.முருகன். Show all posts

Monday, March 23, 2009

அரசூர் வம்சம்


தலைப்பு : அரசூர் வம்சம்
எழுத்தாளர் : இரா.முருகன்
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்
விலை : ரூ.175

மேலும் விபரங்களுக்கு...



இது, தமிழில் நான் படித்த முதல் நாவல். தன் பரம்பரையின் துணுக்குகளைக் கொண்டு இக்கதையை ஆசிரியர் அமைத்துள்ளார். கற்பனை கட்டுப்பாடு அற்றது; கட்டுக்குள் வரவில்லை என்றால் ஒரு பைசா கூடப் பிரயோஜனப்படாது. அதைக் கட்டுப்படுத்தி, புதிய உலகத்தைப் படைத்து, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அடக்கி, அங்கு நம்மையும் இறக்கி தாம் படைத்த உலகை, மக்களை எழுத்தால் அறிமுகப்படுத்துவது அத்தனை எளிதல்ல. ஆனால், அரசூர் வம்சத்தின் கதையை, அலுப்புத் தட்டதவாறு மிகவும் நேர்த்தியான நடையில் இரா.முருகன் படைத்துள்ளார்.


பாத்திரப் படைப்பு:


ஜமீந்தார், சாமிநாதன், சங்கரன், கொட்டக்குடி தாசி, சுப்பம்மாள், கிட்டவய்யன் என்று விதவிதமான கதாப்பாத்திரங்கள்.


ஆட்சி போன பின்பு ஆசை மட்டும் இருக்கும் ஜமீந்தார்; படித்தே பைத்தியமான சாமிநாதன்; இயல்பாய் இருக்கிறாளா, இல்லை இயக்கப்படுகிறாளா என்றே தெரியாத சுப்பம்மாள்; வெண்பா எழுதும் தாசி; என்று வித்தியாசமான கதாபத்திரங்களுக்கு நடுவே எப்போதும் குழம்பிக் கொண்டிருக்கும் சங்கரன்.


பனியன் சகோதரர்கள். முன்னுரையைப் படிக்கும் போது பனியன் சகோதரர்கள், கதை முழுதும் வருவார்களோ என்று தோன்றியது. ஆனால், அவர்கள் வந்துவந்து போகிறார்கள். வரும்போது வில்லங்கத்தோடு வருகிறார்கள், போகும்போது குழப்பிவிட்டுப் போகிறார்கள். வயசனும் சுலைமானும் கதையின் ஓட்டத்தை திருப்பிவிடுகிறார்கள்.


முன்னோர்கள், தம் மக்கள் கூடவே இருக்கிறார்கள். அறிவுரை கூறுகிறார்கள், விவாதிக்கிறார்கள், சுப்பம்மாளைப் படுத்தியெடுத்து நலங்குப்பாட்டுப் பாடுகிறார்கள், சாராயம் கேட்கிறார்கள், அனைத்தையும் சுபமாக்குகிறார்கள். முன்னோர்களைப் பயன்படுத்தியே கதையில் சில மர்மங்களுக்கு விடையளிக்கிறார், எழுத்தாளர். நம் முன்னோர்கள், நம்முடன் பேசுவார்களா?


கொட்டக்குடி தாசியை, எழுத்தாளர் சித்தரிக்கும் விதம் பாராட்டுக்குறியது. அவள் ஒரு சகலகலாவல்லி. ஒரிடத்தில், ஐய்யங்கார் ஜோசியரே, அவளைத் தன் வீட்டுக்கு வரவழைத்து வெண்பா எழுதித்தரக் கேட்கிறார்.


கதையின் அமைப்பு:


இது அரசூரின் கதை. அங்கு வாழ்ந்த ஒரு வம்சத்தின் கதை. எழுத்தாளர், அரசூரின் கதையைச் சொல்லியிருக்கிறார். அம்மக்களை விவரித்திருக்கிறார். நீதியுரைக்கிறேன் என்றோ, நியாய அநியாயங்களைப் பிரித்துக் கூறுகிறேன் என்றோ எழுதவில்லை. தன்னுடைய கதாபாத்திரங்களுடைய விமர்சனத்தை அவர் முன்வைக்கவில்லை. மாறாக கதையோட்டத்திலேயே அவர்களின் இயல்பை விளக்குகிறார்.


கதையின் நடை, ஒரே சீராக இருக்கிறது. சங்கரன், கப்பலில் மாட்டிக்கொள்ளும் போதும், கிட்டவய்யன் மதம்மாறும் போதும், சிறிது மெதுவாய்ப் பயணிக்கிறது. ஆனால், ஆவலைத் தூண்டுகிறது. வசனங்கள் சுருக்கமாகவே எழுதப்பட்டு, பக்கங்களுக்கு இறக்கைகள் பொருத்தப்பட்டுள்ளது. பயன்படுத்தியுள்ள பல சொற்கள், தற்போது பயன்பாட்டில் இல்லாவிடினும் அர்த்தம் புரிய சிரமமில்லை, கதையின் ஓட்டத்தையும் பாதிக்கவில்லை.


கதையின் தொடக்கம் முதல் இறுதி வரை, பிராமண சம்பிரதாயங்களை கதையோட்டத்திலேயே சொல்லியுள்ளார். அதிலும் சுந்தர கனபாடிகள் மூலம் திவசம் செய்வதன் அர்த்தத்தை மிக அழகாக கூறியுள்ளார். கிறித்தவர்களின் மதமாற்றப் பிரச்சாரத்தையும், கிட்டவய்யன் பணத்திற்காக மதம் மாறுவதையும் இதமாகவே கூறியுள்ளார். இப்படி மத சம்பந்தமான விஷயங்களை விமர்சிக்காமல் இயல்பாகவே தெரிவித்திருப்பது நன்றாக உள்ளது.


சங்கரன் வீடு அவன் சகோதரனுடன் எரிந்து சாம்பலாகிறது. யார் எரித்தார்கள்? தெரியவில்லை. சங்கரனுக்கு ஜமீன் மீது சந்தேகம். ஆனால், உண்மையில் யார் எரித்தார்கள். கடைசி வரை அதைப் பற்றிக் கூறவேயில்லை. எழுத்தாளரும் முன்னோர்களிடம் கேட்கிறார். அவர்களுக்கும் தெரியவில்லை. கதையின் சுவாரசியத்துக்காகவே வீடு சாமிநாதனோடு எரிக்கப்பட்டதோ? ஆசிரியருக்கே வெளிச்சம்.


ஒரு வருத்தம்:


இன்று தமிழ் சினிமாவில் ஒரு வழக்கம். இளைஞர் என்றாலே பாரும்(Bar) பீரும் என்றே ஒரு எழுதாத விதியாகிவிட்டது.


இக்கதையிலும் அப்படித்தான். அனைத்துக் கதாபாத்திரமும் சதாசர்வ காலமும் காமத்தையே சிந்தனை செய்து கொண்டிருக்கின்றன.


சங்கரனுக்கு வாலிப வயது. அவனுக்கு இப்படிப்பட்ட சிந்தனைகள் வருவது, இயல்பானது என்று கொள்ளலாம். அவனுக்கு கொட்டக்குடி தாசியின் மீது ஆசை, ராணியின் மீது ஆசை. மனோதத்துவத்தில் Law of Attraction என்று சொல்லுவார்கள். ஒருவன் எதை எப்பொதும் சிந்தித்துக் கொண்டிருக்கிறானோ அவன் அதன் பால் ஈர்க்கப்படுகிறான். சதாசர்வகாலமும் தேகசுகத்தையே சிந்திக்கும் சங்கரன், சென்னைப் பட்டணத்தில் கப்பலில் வீழ்வதும் காமத்தில் தான்.


ஜமீந்தார், ஐம்பதுக்கு மேல் ஆசை வளர்க்கும் குழந்தை. இவரை சபலபுத்தி ஆட்டுவிக்கிறது. சேடிப் பெண்னையும் மலையாளக் குட்டிகளையும் நினைத்தே காலம் கழிக்கிறார். முன்னோர்களின் புத்திமதிகளைக் கூட அவர் கண்டுகொள்ளவில்லை. அவரே சும்மா இருந்தாலும் அவரைத் தூண்டிவிட்டுக் காரியம் சாதிக்கும் பனியன் சகோதரர்கள்.


பகவதிக்குட்டியின் சகோதரர்கள், கூட்டுக் குடும்பமாக வாழ்கிறார்கள். கூட்டுக் குடும்பத்தில் இல்லாத சுவாரசியமா? அவர்கள் தேகசாந்தி செய்துகொள்வதையா கூற வேண்டும். இவர்கள் மட்டுமல்ல. இறந்து போய் ஆகாசத்தில் பறக்கும் ஆவிகள் கூட காமத்தையேவா சிந்தித்துக் கொண்டிருக்கவேண்டும். புஸ்தி மீசைக் கிழவன் இறந்த பிறகும் கூட மூத்தகுடிப் பெண்டுகளின் பின்னால் செல்கிறார். இதைக் கற்பனை என்றே வைத்துக்கொண்டாலும் கூட, ஏற்றுக்கொள்வது கடினம் தான்.


ஜமீந்தார் பேசும் வார்த்தைகள், ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்குமா என்பதை நீங்கள் படித்தால் தான் சொல்லமுடியும். ஆனால், எனக்கு இதில் சில சொற்கள் சங்கடமானதாகவே இருந்தது. ஒரு சிறந்த கதையை தன்னுடைய சொந்த வாழ்வின் துணுக்குகளில் இருந்து அழகான கதாபாத்திரங்களின் மூலம் வரைந்த இரா.முருகன் மேலே சொன்ன வசனங்களையும் கதாபாத்திரங்களின் சபலமான சிந்தனைகளையும் தவிர்த்திருக்கலாம்.