Friday, October 14, 2011

லூசுத்தனமான வாழ்க்கை

காலைல எழுந்த உடனே ஒரே எரிச்சல். எத்தனை மணிக்கு தூங்கி எத்தனை மணிக்கு எழுந்தாலும் அதே எரிச்சல். பல் தேச்சு சில்லறையத் தேடிப் பிடிச்சு பால வாங்கி காப்பி போட்டு, அத நானே குடிச்சு. என்ன வாழ்க்கைடா இது!

எவ்வளவு நேரம் தூங்கினாலும் சோர்வா தான் இருக்கு. அதுல இந்த டாக்டர் பத்ராவோட தொந்தரவு வேற. காலங்காத்தால மூணு மணிக்கு SMS. 'Don't Take your hair fall Easy' யாம். அது இருந்தா என்ன போனா என்ன. காலங்காத்தால மூணு மணிக்கா இதுக்கெல்லாம் கவலைப்பட முடியும்.

எடுத்த வேலையெல்லாம் முடிக்காம அப்படியே இருக்கு. எந்த வேலையையும் சொன்ன தேதியில முடிச்சு கொடுத்ததே இல்ல. தெரிஞ்சவன் தெரியாதவன் எல்லாரும் கேட்டாச்சு ‘ஏன் எப்போதும் சீரியஸாவே இருக்க?’ நான் நார்மலா இருந்தாலே அப்படித்தான் இருப்பேன்னு எத்தன பேர்கிட்ட தான் விளக்கம் கொடுக்க? ஒரு தடவ பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்க போனேன். அந்த போட்டோ கிராஃபர் தொடர்ந்து மூணு தடவ திரும்பத் திரும்ப ‘smile sir' னு சொல்லிக்கிட்டே இருந்தார். அவர் மூணாவது தடவ சொல்லும் போது எனக்கு கோவம் வந்திடுச்சு. ‘இவ்ளோ தான் எடுங்க எடுங்க’. நியாயமா அந்தாளுக்குத் தான் கோவம் வந்திருக்கணும்.

இந்த self-control விஷயத்துல ரொம்பவே மோசம். ஏதாவது ஒன்னு செய்யணும்னு நினச்சுப்பேன் ஆனா செய்யமாட்டேன். மறதியெல்லாம் இல்லை. முழுச் சோம்பேறி ப்ளஸ் மனம் போன போக்குல போறது. இதைச் சொன்னா 'மனத்தை ஏன் அடக்கணும். தும்மல அடக்குவியா? விக்கல அடக்குவியா? அத அடக்குவியா? இத அடக்குவியா? அதே மாதிரி மனசையும் அடக்க கூடாது. அதுபாட்டுக்கு அலையவிட்டு வேடிக்கை பாரு'ங்கறாய்ங்க. 

ஐயா சாமி மனச அடக்கணும்னு யாரு சொன்னா? கவனத்தை குவிக்கணும்னு தான சொல்றாங்க. அனுஷ்கா பத்தி நினைக்கும் போது அனுஷ்கா நினைவு வந்தா தப்பில்லை. ஆஞ்சநேயர் கோயிலுக்கு போயி ‘கடவுளே! எனக்கு மட்டுமாவது நல்ல புத்திய கொடு’ன்னு ஒரு முக்குல உக்காந்து உருகும் போது அனுஷ்கா நினைப்பு வந்தா எரிச்சல் வருமா வராதா? இல்ல, உங்க மேனேஜர் சீரியஸா ஒரு விஷயம் பேசறார், ஒரு வார்த்த ‘ட்விட்டர்’னு சொல்லிட்டார். உடனே உங்க மனம் உங்க ட்விட்டர் ஐகான நினைவுல கொண்டுவந்து, அதுலேர்ந்து முந்தின நாள் ட்விட்டர்ல படிச்ச ஜோக்குக்கு போயி, அதுக்கு நீங்க இப்போ சிரிச்சு, அத உங்க மேனேஜரும் பார்த்தா எரிச்சல் வருமா வராதா? இதுக்கு தான் சொல்றேன் மனச கட்டுப்படுத்தணும். ஆனா என்னால முடியல.

அதுக்கடுத்தது அறிவுப் பிரச்சனை. பதினாறாம் வாய்ப்பாடு வரை தெரிஞ்சா போதாதா. இதப் படிப்போமோ அதப் படிப்போமான்னு சதா எதையாவது தேடிக்கிட்டு. யாருக்கு யாரு மகாகவியா இருந்தா எனக்கென்னனு சும்மாயிருக்கா. சில சமயம் தேவையானத படிக்கிறத விட தேவையில்லதத தான் அதிகமா படிக்கிறேன். 

இந்த Time Sheet எல்லாம் போட்டுப் பார்த்தா எவ்வளவு நேரம் வீணடிக்கிறேன்னு தெரிஞ்சுக்கலாம்தான். தெரிஞ்சு என்ன செய்ய? சரி கூடவே ஒரு டுடு லிஸ்ட் வெச்சுகிட்டா நல்லாயிருக்கும்ல? இருக்கும் தான். தொடர்ந்து ரெண்டு நாளைக்கு மேல அத ஃபாலோ பண்ணுவேன்ற நம்பிக்கை எனக்கில்லை.

இதப்பத்தி மத்தவங்க கிட்ட பேசினா சிலர், ‘இந்த வயசுல உனக்கென்னைய்யா என்ஜாய் பண்ணு’ன்றாங்க. இன்னும் பலர் ‘கல்யாணம் பண்ணிக்கோ கவலையெல்லாம் போயிடும்’னு சொல்றாங்க. கொஞ்சம் வயசு குறைஞ்சவங்ககிட்ட கேட்டா ‘Go get a girlfriend'டாம். அதுக்கெல்லாம் இந்த மூஞ்சிய வெச்சுகிட்டு நானெங்கே போறது. தெருத்தெருவா அலைய வேண்டியது தான்.

இந்தப் பதிவு மாதிரி என்னென்வோ பண்றேன், ஏதாவது நடந்து உள்ளொளியோ உள்ளெலியோ பட்டுனு ரெண்டுல ஒன்னு வெளியே வந்துட்டா பரவாயில்ல. ம்ம்... பாப்போம்.

Tuesday, September 27, 2011

சேனைப் புழுக்கு

குறிப்பு: விளையாட்டாக சில வார்த்தைப் பிரயோகங்கள் பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால் இப்படியொரு பதார்த்தம் உண்டு என்பதை தயவு செய்து நம்பிவிடுங்கள். 

தேவையான பொருள்கள்:
 • சேனைக் கிழங்கு - 250 கிராம்
 • தட்டப்பயறு      - 100 கிராம்
 • பச்சை மிளகாய்  - 3
 • தேங்காய்        - கொஞ்சம் (துருவியது)
 • உப்பு            - தேவையான அளவு
 • தேங்காய் எண்ணெய் - இரண்டு டீ ஸ்பூன் 

சமையல் குறிப்பு template படி இந்த இடத்தில் புழுக்கு செய்த பின் எடுத்த புகைப்படம் வரவேண்டும். என்னிடம் புகைப்படம் இல்லை. வழக்கமாக நான் கேட்டுவிட்டு திருடி எடுத்துப் போடும் இடத்திலும் இந்தப் படம் இல்லை. (அது சரி! அங்கிருந்தால் நான் ஏன் இதை எழுதிக் கொண்டிருக்கப்போகிறேன்.)

செய்முறை:
 • சேனைக்கிழங்கை சின்னச் சின்ன கன சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்
 • சேனைக்கிழங்கையும் தட்டைப்பயிரையும் கூக்கரில் வைத்து சேர்த்தோ அல்லது தனித்தனியாகவோ உப்பு சேர்த்து வெந்து கொள்ளவும். (கொஞ்சம் குழைவாகவே வெந்து கொள்ளலாம். இல்லையென்றால் சேனை செமிக்க கடினமாக இருக்கும்.)
 • பச்சை மிளகாயை வகுந்து கொள்ளவும்
 • ஒரு கனத்த பாத்திரத்தில் தேங்காய் எண்ணை விட்டு பின்,  வேகவைத்த கிழங்கையும் பயறுயும் போட்டு கிண்ட வேண்டும். 
 • இதேடு வகுந்து வைத்த பச்சை மிளகாயையும் சேர்த்து கிண்டவும். 
 • பிறகு பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி தேங்காய்த் துருவலை சேர்க்கவும்.
* சேனை நாக்கை அரிக்கலாம். நாக்கை பல்லில் சொறிந்து கொள்வதைத் தவிர வேறேதும் வழியில்லை.


மேட்ச் ஃபிக்சிங் கார்னர்: 
பருப்பு ரசம், எலுமிச்சை ரசத்திற்கு இது நன்றாக இருக்கும். கொஞ்சம் காரமாக செய்தால் தயிர்சாத்ததிற்கும் சேர்த்துக் கொண்டு சாப்பிடலாம். 


தொடர்புள்ள சுட்டிகள்:
@jsrigovind
@losangelesramMonday, July 18, 2011

சதி!

வழக்கம் போல் இந்த ஞாயிற்றுக்கிழமையும் காய்கறி வாங்க அதே கடைக்குத்தான் போனோம்.  உருளைக்கிழங்கு, வெங்காயம், கத்திரிக்காய், பீன்ஸ், கேரட் என்று அதே சைக்கிள் தான். இதைப் போன்ற கடைகளில் எந்தக் காய்கறியானாலும் பொறுக்கி பொறுக்கி வாங்கலாம். யாரும் தராசைத் தூக்கிக் கொண்டு அடிக்க வரமாட்டார்கள். பரங்கிக்காயை கூட சிலர் பொறுக்கி பொறுக்கித் தான் வாங்குகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.   ஒவ்வொரு கத்திரிக்காயாக, ஓட்டையில்லமல், நசுங்காமல், சூத்தையில்லாமல் இருக்கிறதா என்று பார்த்து பார்த்து பொறுக்கிக் கொண்டு வந்தேன்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கத்திரிக்காயை ஏதாவது ரூபத்தில் சமைத்துவிடுவது வழக்கம். இந்த வாரம் சீக்கிரம் வேலையாக வேண்டும் என்பதால் கத்திரிக்காய் வதக்கல் செய்துவிடலாம் என்று ஒருமனதாக தீர்மானமாயிற்று. சரி கொண்டாருங்கள் நான் நறுக்கித் தருகிறேன் என்று களத்தில் இறங்கினேன். அதற்கு இரண்டு வாரம் முன்பு செய்த கத்திரிக்காய் வதக்கல் சொதப்பியதற்கு நறுக்கியவர் தான் காரணம் என்று   தீர்ப்பாகியிருந்தது ஞாபகம் வந்தது. இருந்தாலும் என்னுடைய திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பாக கருதி இந்த வேலையை செய்யத் துணிந்தேன்.

ரொம்பவே கவனமாக என்னால் முடிந்த அளவிற்கு மெல்லிசாக நறுக்கி அதை சமைக்கவும் செய்தாயிற்று. சமைத்தது நானில்லை, வேறொருவர்.

கொஞ்ச நேரத்தில் சாப்பிட உட்கார்ந்தோம். கத்திரிக்காயை எடுத்து வாயில் போட்டுக்கொண்டால் அதை தொண்டைக்கு கீழ் இறக்க முடியவில்லை. மீன் வாடை. கத்திரிக்காயை நீள நீளமாக நறுக்கி கறி செய்தால் அது மீனைப் போல் இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் அதில் மீன் வாடையெல்லாம் இதற்கு முன் வந்ததே இல்லை. உடன் சாப்பிட்ட இரண்டு பேருக்கும் அதிர்ச்சி. 'டேய்! என்னடா இது?' அது கத்திரிக்காய் தானா என்ற சந்தேகமே அவர்களுக்கு வந்துவிட்டது. அந்தக் கத்திரிக்காய்களுக்கு விதித்தது அவ்வளவுதான் போலும் என்று அதை தூரப்போட்டுவிட்டு மாவடுவை சேர்த்துக்கொண்டோம்.

சரி இந்த வாடை எப்படித்தான் வந்திருக்கும்? ஒருவேளை அந்தக் கடையில் மீன் வண்டியில் கத்திரிக்கயையோ அல்லது கத்திரிக்காய் வண்டியில் மீனையோ ஏற்றிவந்திருக்கலாமோ? ஒவ்வொரு நொள்ளையாய் பார்த்து பார்த்து பொறுக்கும் போது வராத வாடை, 3mm  துண்டுகளாக நறுக்கும் போது வராத வாடை, சமைக்கும் போது வராத வாடை கடைசியில் எப்படி வந்தது. மீனும்-கத்திரியும் சேர்ந்து பயனித்திருக்கலாம் என்ற இந்த லாஜிக் எல்லா இடத்திலும் இடிப்பதால் இதை விட்டுவிடலாம்.

எங்கள் அக்கம் பக்கத்தில் இருக்கும் எதோ ஒரு வீட்டில் ஞாயிறு தோறும் மீன் சமைப்பார்கள். நான் பார்த்ததில்லை ஆனால் வாடை வரும். நேற்றும் சமைத்தார்கள்.  நேற்று அவர்கள் சமைக்கும் அதே நேரத்தில் தான் எங்கள் வீட்டிலும் சமைத்தார்கள். அவர்கள் சமைத்த மீனின் ஆவி கூடுவிட்டு கத்திரிக்காய்க்குள் பாய்ந்திருக்குமோ? உங்களைப் போல் நானும் முற்போக்குவாதி தான். இந்த கூடுவிட்டு கூடு பாய்வதை எப்படி நம்புவது? அதனால் இதையும் விட்டுவிடலாம்.

பின் ஐநூறு கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் ஒரு அனுபவசாலி தொலைபேசியில் அழைத்து, ஒருவேளை எண்ணையிலிருந்து வாடை வந்திருக்கலாம் என்று எண்ணையை சோதிக்கச் சொன்னார். எண்ணெய் புதிய எண்ணெய் தான்; நல்லெண்ணெய் தான்; அதாவது நல்ல ரீபைண்டு சூரியகாந்தி எண்ணெய் தான். அதே பாக்கில் இருந்து எடுத்த எண்ணையில் முந்தா நாள் பொறித்த அப்பளத்திலும் அன்றைக்கு தாளித்துக் கொட்டிய குழம்பிலும் எந்த பிரச்னையும் இல்லை. அதனால் இது எண்ணையால் விளைந்தது அல்ல. இதில் சோதனைக்குறிய விஷயம், உடன் சாப்பிட்ட ஒருவர் 'நீ நறுக்கியதால் தான் இப்படி ஆகிவிட்டதோ' என்று ஆரம்பித்தார்.

எனக்குப் புரிந்துவிட்டது. இத்தனை நாள் மனிதர்கள் மூலம் என்னை இம்சித்துக் கொண்டிருந்த கடவுள், இப்போது கத்திரிக்காய்களையும் ஏவிவிடத் தொடங்கியிருக்கிறார்.

கடவுளே! அடுத்தது என்ன? காத்திருக்கிறேன்.

Wednesday, May 11, 2011

தொலைக்காட்சி தொடர் காணும் உரிமைச் சட்டம்


மேலே படிக்கும் முன் உங்களைக் கொஞ்சம் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

கண்ணை மூடிக் கொள்ளுங்கள். சட்டசபையில் இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். சட்டசபையை அப்படியே மனத்தில் காட்சியாய் ஓட விடுங்கள்.

தற்சமயம் முதல்வராக இருவரை மட்டுமே நம்மால் நினைத்து பார்க்க முடியும் என்பதால், அந்த இருவரில் உங்களுக்கு பிடித்தவர் அல்லது பிடிக்காதவர் இங்கு முதல்வாராக சட்ட வரைவை வாசிப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.

காலை மணி 10.10.

ஆளுங்கட்சி சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்துவிட்டார்கள். தான் எந்தக் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்று தெரியாத ஒரு உறுப்பினர் ஒரு ஓரமாக நின்று கொண்டிருக்கிறார்.

சபாநாயகர்: தொலைக்காட்சி தொடர் காணும் உரிமைச் சட்டத்தை சபையில் தாக்கல் செய்ய மாண்புமிகு முதல்வரை அழைக்கிறேன்.

ஓவர் டூ முதல்வர்:

பெண்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் எனது அரசு எப்போதும் பாடுபட்டுவந்திருக்கிறது. அதற்காக நான் சந்தித்த எதிர்ப்புகளும் சோதனைகளும் அதிகம். ஆனால் இந்த எதிர்ப்புக்கு பயப்படாமல், சதாசர்வகாலமும் மக்களுக்காகவே சேவை செய்து வருகிறேன். அதிலும் குறிப்பாக பெண்களுக்காக இந்த அரசு வகுத்திருக்கும் திட்டங்களும் சட்டங்களும் எதிர்கால வரலாற்றில் கூட யாராலும் செய்ய முடியாதது.

பெண்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் எனது அரசு எப்போதும் பாடுபட்டுவந்திருக்கிறது. அதற்காக நான் சந்தித்த எதிர்ப்புகளும் சோதனைகளும் அதிகம். ஆனால் இந்த எதிர்ப்புக்கு பயப்படாமல், சதாசர்வகாலமும் மக்களுக்காகவே சேவை செய்து வருகிறேன். அதிலும் குறிப்பாக பெண்களுக்காக இந்த அரசு வகுத்திருக்கும் திட்டங்களும் சட்டங்களும் எதிர்கால வரலாற்றில் கூட யாராலும் செய்ய முடியாதது.

(ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேசையை தட்டுகிறார்கள்)

சட்டத்தின் முக்கிய அம்சங்களை இந்த சபையில் பட்டியலிடுகிறேன்.

 • இந்த சட்டம் ஒவ்வொரு வீட்டிலும் பெண்களுக்கு குறைந்தது 10 மணிநேரம் தொலைக்காட்சி நேரத்தை உறுதி செய்கிறது. அதிலும் ப்ரைம் டைம் என்று அழைக்கப்படும் மாலை 6 மணி முதல் 11 மணி முழுவதும் அவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.
 • இந்த நேரத்தில் அவர்களை சமையல் செய்யச் சொல்லுதல், சாப்பாடு பரிமாறச் சொல்லுதல் போன்றவை குற்றமாகக் கருதப்படும். இடையிடையே கிரிக்கெட் ஸ்கோர் பார்க்க அவர்களை தொந்தரவு செய்வது, விளம்பர இடைவேளையின் போது ரிமோட்டை கைப்பற்றுவது போன்றவை இனிமேல் குற்றமாக பதிவு செய்யப்படும்.
 • இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சம் மூன்று நாள் சிறைத் தண்டனையும் தண்டனை காலத்தின் போது நாளொன்றுக்கு 10 மணி நேர தொலைக்காட்சி தொடர்களும் காண்பிக்கப்படும்.
(இப்போது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இன்னும் பலமாக மேசையை தட்டுகிறார்கள்.)
 • குற்றவாளிகளை அரசு போஷிக்கிறது என்ற அவப்பெயரை என் அரசு தாங்காது. அதனால் சிறையில் இருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் குற்றவாளிகளிடமிருந்தே சிறை வாடகை வசூலிக்கப்படும்.
 • நல்ல கதை புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பது, கைவினைக் கலைகள், இசை, மொழி போன்றவற்றை கற்க ஆர்வத்தை தூண்டுவது, இதனால் மரியாதை, மதிப்பு, அறிவு எல்லாம் உயரும் என்று ஆசை வார்த்தை கூறி, தொலைக்காட்சி தொடர்கள் பார்க்கும் பழக்கத்தையும் உரிமையையும் வேரோடு அழிக்க நினைப்பவர்களை இந்த அரசு தயவுதாட்சன்யம் இன்று தண்டிக்கும்.
 • இத்தகைய குற்றங்களில் ஒருவர் ஈடுபட்டார் என்பது நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கப்படும். அதற்கான சிறைவாடகையும் வசூலிக்கப்படும்.
 • மேலும் தண்டனை காலம் முடிந்தபின் தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்கு அருகிலுள்ள காவல் நிலையத்தில் தினமும் மாலை 7 மணிக்கு ஆஜராகி, 7 மணி முதல் 9 மணி வரை அதிகாரி ஒருவரின் மேற்பார்வையில் தொலைக்காட்சி தொடர்களை கட்டாயம் பார்க்க வேண்டும்.
 • இவ்விதமான ஏற்பாடுகள் குற்றவாளிகள், மீண்டும் குற்றம் புரிவதையும் மற்றவர்களின் உரிமையில் தலையிடுவதையும் தடுக்கும்.
 • இந்த சட்டத்தின் கீழ் குற்றங்களை பதிவு செய்ய, காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் தங்கள் அலைபேசியில் இருந்து TV <பெயர்> <குற்றம் சாட்டப்படுபவரின் பெயர்> <அவர் முகவரி> என்று டைப் செய்து பூஜ்யம் பூஜ்யம் பூஜ்யம் பூஜ்யம் பூஜ்யம் (00000) என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாலே போதும். மற்றவற்றை எனது அரசு இயந்திரம் பார்த்துக் கொள்ளும். 
(தொடர்ந்து இரண்டு நிமிடம் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேசையைத்      தட்டுகிறார்கள்.)                                                       


Wednesday, May 4, 2011

எழுத்து எங்கிருந்து வருகிறது?

எலிசபெத் கில்பர்ட்டை பலருக்கும் தெரிந்திருக்கும்; Eat Pray Love என்ற புத்தகத்தை எழுதியவர். பல வருடங்கள் பல நாடுகளில் பெஸ்ட் செல்லராக இருந்த புத்தகம் அது. கற்பனைத் திறனைப் பற்றி அவர் அளித்த Ted Talkல் இரு கலைஞர்களை பற்றிக் குறிப்பிடுகிறார். ஒருவர் 95 வயதாகும் அமெரிக்க கவிஞர் ரூத் ஸ்டோன். மற்றொருவர் டாம் வெயிட்ஸ் (ஆம் Tom Waits தான். ஏதோ வாக்கியம் போல் இருக்கிறது தானே). வெயிட்ஸ் ஒரு பாடகர் மற்றும் இசையமைப்பாளர்.

ரூத் ஸ்டோன், "கவிதை பூமி அதிர என்னை நோக்கி ஓடி வரும்; அதோடு போட்டி போட்டுக்கொண்டு ஓடிப் போய் ஒரு தாளையும் பென்சிலையும் எடுத்து எழுதிவிடவேண்டும். சில நேரங்களில் கவிதையின் வேகத்திற்கு என்னால் ஈடு கொடுக்க முடியாது; பேப்பரையும் பென்சிலையும் அடையும் முன்பே கவிதை வேறு ஒரு கவிஞரைத் தேடி ஓடிவிடும். வேறு சில சமயம் கவிதை என்னைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கும்; ஒரு கையில் பென்சிலை எடுத்துக் கொண்டு இன்னொரு கையால் கவிதையின் வாலைப்பிடித்து எழுத்து அப்படியே பேப்பரில் எழுதிவிடவேண்டும். கவிதை முழுமையாக கச்சிதமாக வந்துவிடும்; ஆனால், வலைப்பிடித்து இழுத்ததால் கடைசி வார்த்தையிலிருந்து தொடங்கி முதல் வார்த்தையில் முடியும்.”

அடுத்தது டாம் வெயிட்ஸ், ” ஒரு நாள் காரில் போய்க் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு அந்த மெலடி கேட்கிறது. நான் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறேன். எனக்கு அது வேண்டும். ஐயோ! அதை தான் இழக்கப்போகிறேன்! இதை விட்டுவிட்டால் என்றென்றும் அந்த வருத்தம் என்னை குத்திக் கொண்டே இருக்கப்போகிறது” இதைத் தொடர்ந்து அவர் செய்தது தான் க்ளாசிக், காரிலிருந்து இறங்கி, மேலே பார்த்து “ஏய்! நான் வண்டி ஓட்டிக் கொண்டிருப்பது உனக்குத் தெரியவில்லையா? இப்போ நான் பாட்டு எழுதும் நிலையிலா இருக்கிறேன். போ! உனக்கு வாழ்வு வேண்டுமானால் வேறு ஒரு சரியான சந்தர்ப்பத்தில் வா. இல்லை இன்றைக்கு வேறு யாரையாவது போய் தொந்தரவு செய். போய் லியோனார்ட் கோகனை தொந்தரவு செய்.”

பதிவுன் கடைசியில் இருக்கும் ஒளித்துண்டைப் பாருங்கள். மிக நல்லதொரு Ted Talk.

எலிசபெத் சொல்வது, ‘எழுத்து என்பது நமக்கு உள்ளே உருவாவதில்லை, அது நமக்கு வெளியில் இருக்கிறது. அதோடு நாம் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்” என்பதே.

இதே போன்ற கருத்தைதான் தமிழின் முதன்மை எழுத்தாளர்களான லா.ச.ராவும் தி.ஜானகிராமனும் சொல்கிறார்கள்.

முதலில் லா.ச.ரா...

''ஒரு கதை உங்களுக்குள் உருவாகும் புள்ளியிலிருந்து, ஒரு முழுமையான வடிவத்தை அடைவது வரைக்கும் உள்ள செயல் பற்றிச் சொல்லமுடியுமா?''

'' கதை எங்கேத் தோன்றுகிறது, கரு எங்கே தோன்றுகிறது? எனக்குத் தெரியவில்லை. ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமலும் இருக்கும். 'அஞ்சலி' என்று ஒரு கதை, ஐந்து பூதங்களையும் உருவகப்படுத்தி எழுதினேன். நான்கு கதைகள் வந்துவிட்டது. காயத்தைப் பற்றி எழுத வரவில்லை. அதற்காக எட்டு வருடம் காத்துக் கொண்டிருந்தேன். அது வரும் என்று எனக்குத் தெரியும். எனவே காத்துக் கொண்டிருப்பது பற்றி, நான் கவலைப்படுவதில்லை. ஒரு நாள் குமுட்டியில் கனல் தகதகவென்றிருந்தது. நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். 'ஏக்கா', என்று ஒரு வார்த்தை அப்போது மனதில் ஓடியது. ஏகாம்பரி, ஏகாம்பரம் என்று உருக்கொண்டு, கொண்டே போய்க் கொண்டிருக்கிறது. இப்படித்தான் கதை உருவாகிறது என்று வைத்துக் கொள்ளுங்களேன். மனது தளர்ந்துபோய், எங்கே நெகிழ்ச்சி ஏற்படுகிறதோ, அங்கே கவித்துவம் ஏற்படுகிறது. 'சிந்காநதி'யில் ஒரு அத்தியாயம், 'my dark Gazzle of the night' என்று ஆரம்பிக்கிறது. ஏன் இப்படி ஆரம்பித்தீர்கள் என்று என்னைக் கேட்டால், எனக்குத் தெரியாது. என்னமோ தோன்றியது, அப்படி தொடங்குகிறேன். தொடங்கிய பிறகு, அதன் பாட்டுக்கு, அது போய்க்கொண்டே இருக்கிறது. ஒரு கதையில் ஒருவன், எதையோ, இப்படி கையில் தூக்கிக்கொண்டு போகிறான். உடனே, 'பறவையின் ஒடிந்த சிறகு போல்' என்று எழுதினேன். ஏன் இப்படி வந்தது என்று என்னைக் கேட்டால், எனக்கு எப்படித் தெரியும்! அது வந்துவிட்டது, அவ்வளவுதான். 'symbathy.'


தி.ஜா...

எப்படி அதை எழுதினேன் என்று கேட்டால் பதில் சொல்ல முடியவில்லை. அந்த எல்லா ஞாபகங்களும் உள்ளே கிடந்தன. ஒருநாள் ஒரு வாரப் பத்திரிகையிலிருந்து மூன்று பேர்கள் வந்து ‘ஒரு தொடர்கதை எழுதுங்களேன்’ என்றார்கள். நாலைந்து தடவை வந்தார்கள். இந்த ஞாபகங்கள், என் ஆசைகள், நப்பாசைகள், நான் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தேனோ, பார்த்த மனிதர்கள் பாத்திரங்களாக எப்படி மாறவேண்டும் என்று விரும்பினேனோ, எல்லாமாகச் சேர்ந்து நாவலாக உருவாயின. மறுபடியும் எப்படி என்றால் அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை. ஏதோ உட்கார்கிறோம், எழுதுகிறோம். சில சமயம் தரதரவென்று எழுதமுடிகிறது. சில நாளைக்கு ஒரு வரிகூட எழுதமுடியவில்லை. நாட்கணக்கில் எழுதவே முடிவதில்லை. எழுத வந்தால்தானே! நாலு நாட்கள் வந்து நாட்கள் மண்டையை உடைத்துக் கொண்டு, கடைசியில் அழாத குறையாக, படுத்து விடுகிறது. காலையில் எழுந்திருக்கும் பொழுது பளிச்சென்று கோவில், சினிமாவுக்குப் போகிற ஸ்திரீகள் ‘குக்’கரில் வைத்துவிட்டுப் போகிற அரிசி மாதிரி, எல்லாச் சிரமங்களும் விடிந்து, தானாக எண்ணங்கள் பக்குவமாகி இருக்கும். வேகமாக, பேனா அதை எழுதிவிடுகிறது. அவ்வளவுதான்.


எலிசபெத் கில்பர்ட்டின் பேச்சு...

Saturday, January 22, 2011

மைசூர்பாகின் தற்கால நிலை...


இது உத்தமம்!
காகாசுர மாதப்பா எந்த நேரத்தில் முதலில் மைசூர்பாகை செய்தாரோ தெரியவில்லை. நேரம் காலம் தெரிந்திருந்தால், நவாம்ஸம், ராசி கட்டம் போட்டு, சனி, ராகு, கேது மேலும்  இடமிருந்தால் அவர்கள் பிள்ளைகளுக்கும் கட்டத்தில் ஒவ்வோர் இடத்தை பட்டா போட்டு குடியமர்த்தியிருக்கலாம். ஆனால், மைசூர்பாகின் இப்போதையை நிலைமையை சொல்ல, சோளி உருட்ட தேவையில்லை, கோல் வேண்டாம், நாடி பிடிக்க அவசியமில்லை, கடவுளர்கள் நம்மீது இறங்கி டான்ஸ் ஆட வேண்டுமென்பதில்லை, புளியமரத்தடி ஜோசியரிடம் கேட்கவேண்டாம்; நானே சொல்லிவிடுவேன் மைசூர்பாகிற்கு இப்போது நேரம் சரியில்லை.

ஜாங்கிரி, ஜிலேபி, லட்டு, குலோப் ஜாமூன், அல்வா என்று எல்லா இனிப்புமே கொஞ்சம் சவுக்கு சவுக்கு தான். விதிவிலக்கு மனோகரமும், மைசூர்பாகும்; முரட்டு இனிப்புகள். கல்யாணத்திற்கு பெண் வீட்டில் பக்க்ஷனம் லிஸ்ட் கேட்கும் போது, மாப்பிள்ளைக்கு ஒன்னுவிட்ட ரெண்டுவிட்ட பாட்டியெல்லாம் வந்து, இத்தனை சுற்று முறுக்கு அத்தனை கேள், அத்தனை சுற்று முறுக்கு இத்தனை கேள், என்று ஏற்றிவிட்டுப்போவார்கள். சரி, இனிப்பு? நிறைய வைத்தாலும் பெரிதாக இருக்க வேண்டும். மேடையில் எங்கிருந்து பார்த்தாலும், வெட்டிக் கதை அளந்து கொண்டிருக்கும் மாமா மாமிகளுக்கு பெரியதாகத் தெரிய வேண்டுமே! ஜாங்கிரி, ஜிலேபி எல்லாம் அத்தனை பெரிதாக செய்வது  இன்றைய சமையல் தொழில்நுட்பத்தில் சாத்தியமே இல்லை. லட்டுவும் மாலாடும் (பொட்டுகடலை பொடி + சர்க்கரை பொடி சேர்த்த்ச் செய்வது) பெரிதாய் பிடிக்கலாம் தான். ஆனால் அவை எந்த நேரத்திலும் cohesivenessஐ இழந்து, தரைமட்டத்திற்கு வந்து தகுதி இழந்துவிடும் அபாயம் உண்டு. ஆனால், இந்த மைசூர்பாகு இருக்கிறதே அது அப்படிப்பட்டதில்லை. சுலபத்தில் உடைந்துவிடாது, அதே நேரத்தில் ஒரு குழவியை எடுத்து ஒரே போடு! துண்டம் துண்டமாக உடைந்துவிடும். பார்க்கவும் சும்மா ஜம்மென்று இருக்கும்.

இது அதமம்!
 மைசூர் பாகு செய்வது இரும்பை காய்ச்சி ஊற்றுவதற்குச் சமம். ஒருமுறை அது நன்றாக வந்துவிட்டால் அம்மா முகத்தில் இரண்டு நாளைக்கு அந்த சாதனை மின்னிக் கொண்டிருக்கும். இரும்பை காய்ச்சி வார்க்கும் போதும், பின் அதைக் குளிர்விக்க வைப்பதிலும் நிறைய நுணுக்கங்கள் இருக்கின்றன. அது உருகி ஓடும் பதம் வரும் வரை சூடாக்க வேண்டும். உருக்கி மண்வார்ப்பில் ஊற்றும் போது, வெளியாகும் வாயுக்கள் உலோகத்தோடே தங்கிவிடாமல் வெளியேற வசதிகள் இருக்க வேண்டும். அப்படி உலோகத்தோடே வாயுக்கள் தங்கிவிட்டால், அதற்கு பெயர் blow holes. இப்படி blow holes இருக்குமானால் அந்த இரும்பின் தரம் கீழ்தரம் தான். அது பெரும்பாலும் dynamic பயன்பாடுகளுக்கு லாயக்கில்லை.

சரி இந்த ஓட்டைகள் இல்லாமல் ஊற்றியாகிவிட்டது. அப்படியே இயற்கையாக குளிர்விக்க வைத்துவிடலாமா? அதிலும் இந்த நணுக்கம் வந்து படுத்துகிறது. இரும்பை எந்த வேகத்தில் குளிர்வித்தால் என்னென்ன அளவில் அதன் கடினத்தன்மை மாறும் என்று இருக்கிறது. வேண்டிய கடினத்திற்கு ஏற்ப தான் குளிர்விக்க வேண்டும். இரும்பில் கார்பன் சேர்த்தால் அது தான் ஸ்டீல். இரும்பில் இருக்கும் கார்பன் அளவைப் பொறுத்து அது ductile ஆகவோ brittle ஆகவோ இருக்கும். ஆனால் இந்த கார்பன், எடைவிகிததில் 2.1% மேல் போய்விட்டால் அது cast iron ஆகிவிடும். Cast iron is brittle. சுரண்டினால் பொடிப்போடியாக வரும். கையெல்லாம் கரி ஒட்டிக் கொள்ளும். கீழே போட்டால் உடைந்துவிடும். Compressionஐ சமத்தாக தாங்கிக் கொள்ளும் ஆனால் tensileஐ அதனால் தாங்கிக் கொள்ளமுடியாது.

மைசூர்பாகும் brittle தான். இப்போது அதைத் தான் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். Cast iron அளவிற்கு மைசூர் பாகு கடினமாக இருந்திருந்தால் இரண்டு மூன்று தலைமுறைக்கே பல் இல்லாமல் போயிருக்கும். இங்கு தான் அந்த blow holes விளையாடுகிறது. இரும்பில் blow holes இருந்தால் அதற்கு துரும்பு மதிப்புதான். மைசூர்பாகில் ஓட்டை இல்லையென்றால் அதை வைத்து கியாரண்டியாக வீடுகூட கட்டலாம். அந்தளவிற்கு ஸ்ட்ராங்.

சர்க்கரை, கடலைமாவு, நெய் மூன்றுமே போதும் மைசூர்பாகு செய்ய. கிண்டி ஊற்றியவுடன் காற்று உட்புகுந்து ஓட்டைகளை ஏற்படுத்தும். (இது அந்த ஓட்டைகள் எப்படி வருகிறது என்பதில் சில சந்தேகங்களும் இருக்கிறது. கொஞ்சம் அறிவும் பணமும் சேர்ந்த பிறகு இதை ஆராய்ச்சி செய்வதாக திட்டம்.) ஆனால் இப்போது செய்கிறார்களே ஒரு பாகு. அது திடப்பொருளே இல்லை. கிட்டதட்ட பற்பசை போன்றது. அறை வெப்பதில் கொழுக் கொழுக்கென்றே இருக்கும். அதில் ஓட்டையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. என்னமோ அடுத்த வீட்டு நெய்யை போட்டு செய்வது போல், எட்டு பாக்கெட் போட்டு சுற்றினாலும் ’நான் இந்தோ இருக்கேனே’ என்று எட்டிப்பார்க்கும் நெய்.  வேகாத கடலைமாவு. பிசுபிசுக்கும் சர்க்கரை. தெரியாத்தனமாக ஒருமுறை தொட்டுவிட்டால் கூட, ஒன்பது முறை ரின் சோப்பு போட்டு கழுவ வேண்டியிருக்கிறது.

எல்லாமே மாறிக் கொண்டுதான் இருக்கிறது. இது மாறினால் என்ன என்கிறீர்களா? அதெப்படி கடலைமாவும் நெய்யும் போட்டது எல்லாம் மைசூர்பாகாகிவிடுமா? ஆகிடுமா? சர்க்கரை போட்டதெல்லாம் இனிப்பாகிவிட முடியுமா? அதற்கு பின் இருக்கும் அறிவியலை புரிந்து கொள்ள வேண்டாமா.

சும்மா, உள்ளூர் ரவுடியை எல்லாம் போட்டு புரட்டி புரட்டி எடுக்க அடிக்கடி பேன்சி டிரெஸ்ஸில் வந்தபோன கடவுள், இதைப் பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. குறைந்த பட்சம் ஒரு தந்தி கூட அனுப்பவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஒரு வேளை அவர் பெயரையும் இதில் கோர்த்துவிட்டார்களே என்று அமைதியாய் இருக்கிறாரா? இல்லை ஏதும் கான்ஃபிளிக்ட் ஆப் இண்டெரஸ்ட் இருக்கிறதா?

கடவுள் இருக்கிறாரோ இல்லையோ? அப்படியே அவர் இருந்தாலும் அவர் வருவாரோ வரமாட்டாரோ? ஒன்று மட்டும் நிச்சயம், இப்படி போலி மைசூர்பாகு செய்பவர்களை எல்லாம் காகாசுர மாதப்பா மன்னிக்கவே மாட்டார்.

நன்றி: அதமம்! போட்டோ பம்பாய் அக்காவின் வலைதளத்திலிருந்து உரிமையோடு எடுத்துக் கொண்டேன்.