Showing posts with label பொருளாதாரம். Show all posts
Showing posts with label பொருளாதாரம். Show all posts

Monday, February 23, 2009

சில்லறை


சிறுவயதில் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும்போது ஏதோ ஒரு புரியாத ஆர்வம் உருவானதுண்டு. அஞ்சல் அட்டை, சிகரேட் போன்ற சிலவற்றின் விலை உயர்வைத் தவிர வேறெதுவும் அப்போது மூளைக்கு எட்டியதில்லை. லொட்டு-லொசுக்கு வரிகள், அந்நிய முதலீடுகள், வளர்ச்சி விகிதம் இதெல்லாம் எண்களாகமட்டுமே புரிந்தன.

இப்போது பட்ஜெட் உரை, ஏதோ அரசியல் சொற்பொழிவு போலவே இருக்கிறது. பெரிய தொழிலதிபர்கள், வலமும் இடமும் தலையாட்டிக் கொண்டே பட்ஜெட்டைக் காண்கிறார்கள். அவர்களுக்கு திருப்தியில்லை. ஆம்! யானைகள் பொறி உருண்டைகளில் திருப்தியடைவதில்லை.

சாதாரண மக்களின் வாழ்க்கையில் இந்த பட்ஜெட் தாக்கத்தை ஏற்ப்படுத்துமா?

சமீபகாலத்தில் (தோராயமாக இரண்டு வருடம்) இரண்டு மாறுதல்கள் மிகவும் வெளிப்படையாகவே தெரிகிறது. திருநெல்வேலியில் வசிக்கும் போதும், சிலமுறை பெங்களூருவுக்கும் சென்னைக்கும் சென்று வந்ததில் பெருநகரங்களிலும் சிறுநகரங்களிலும் ஏற்ப்பட்டுள்ள மாறுதல்களை ஒப்பிட முடிகிறது.

சிறுநகரங்களில் இப்போது உணவுக் கடைகள் பெருகிவருகின்றன. மக்கள் குடும்பமாகவே வியாபாரத்தில் ஈடுபடுகிறார்கள். பெரும்பாலும் வடையும் இட்லியும் விற்க்கிறார்கள். பெண்கள் சமயலை கவனித்துக்கொள்ள, ஆண்கள் வாடிக்கையாளரைக் கவனிக்கிறார்கள். லாபம் பெரிதாக இல்லையென்றாலும், அவர்கள் கூலி வேலைக்குப் போனபோது கிடைத்ததைவிடச் சற்று கூடுதலாகவே கிடைக்கிறது. பெண்களும் சமையல் வேலையென்பதால் எளிதாக ஈடுபடுகிறார்கள். மேலும் சிலர், மளிகைச் சாமான்களை மொத்தமாக வாங்கி, வீட்டிலேயே விற்க்கிறார்கள். ஏற்கனவே இருக்கும் பெட்டிக்கடைகளும் தற்போது விஸ்தரிப்பு செய்யப்பட்டுள்ளன. இச்சிறுவணிகர்கள், தற்போது கூடுதல் தெம்போடு இருக்கிறார்கள்.

பெருநகரங்களிலும் இதைப்போன்று கடைகளும் உணவகங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இந்நகரங்களில் குவியும் மக்களைக் குறிவைத்து பெரிய நிறுவனங்கள் சில்லறை வியாபாரத்தில் இறங்கியுள்ளன. சுண்டியிழுக்கும் விளம்பரங்கள், குளிருட்டப்பட்ட வெளிகள், மற்ற கடைகளைவிட மலிவு விலை போன்ற பல விசயங்களால் மக்கள் அவர்கள் பக்கம் குவிகிறார்கள். அவர்களை குற்றம் சொல்ல முடியாது. லாபம் உள்ள இடத்தில் வாங்குவது தானே புத்திசாலித்தனம்.

இப்போது, சில்லறை வியாபாரத்தில் அந்நிய முதலீட்டை அதிகரிக்கப்போகிறார்கள். Walmart போன்ற சர்வதேச சில்லறை வியாபாரிகள் இந்தியாவின் நகரங்களை நோக்கி படையெடுக்கிறார்கள். இவர்களிடம் தாக்குப்பிடிக்கமுடியாமல் சாதாரண சில்லறை வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். பெருநகரங்களில் பிழைப்புக்காக சென்று கடைகள் நடத்துபவர்களுக்கும் அங்குவேலைக்குச் சென்றவர்களுக்கும் இவர்களின் வரவால் கஷ்டகாலம்தான்.

இடையில் ஒரு மாற்றுச்சிந்தனை:

இவ்விசயத்தை நண்பர் ஸ்டீபன் தங்கராஜிடம் விவாதித்துக் கொண்டிருந்தபோது அவர் வேறொரு கோணத்தில் பதிலளித்தார்.

"இந்தியாவின் மக்கள்தொகை அதிகம். அந்நிய நிறுவனங்கள் எவ்வளவு முயன்றாலும் அவர்களால் வெகு சிலரையே போய்ச் சேர முடியும். அதிலும் சாதாரண குடும்பங்கள், பெருபாலும் பற்றுவரவுக் கணக்கு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது அந்நிய நிறுவனங்களில் முடியாது. மேலும் அந்நிறுவனங்கள் பெருநகரங்களைத் தாண்டிவரத் தயங்குகிறார்கள். இதனால் சிறுவணிகர்களுக்கு பாதிப்புகள் மிகவும் குறைவு."

ஸ்டீபனின் கருத்தை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நம்மால் முடிந்த ஒரு விசயம், சிறுவணிகர்களை ஆதரிப்பது. நாம் மாதாமாதம் வாங்கும் பொருட்களில் ஒரு பகுதியை இச்சிறுவணிகர்களிடம் வாங்கினால், அவர்களுக்கு உதவியாக இருக்கும். இதனால், நமக்கு எந்த நஷ்டமுமில்லை.