Wednesday, January 9, 2013

லூசுத்தனமான வாழ்க்கை #6

That was a very fast year.

நடந்த நல்ல விஷயம், ஆம்னிபஸ்ஸில் சேர்ந்தது. இப்போது வாரத்திற்கு ஒரு புத்தகம் என்ற அளவிலாவது படிக்க முடிகிறது. ட்விட்டரிலிருந்து ஆம்னிபஸ் போய் அரட்டை அடிக்க முடிகிறது. சில புத்தகங்களைப் படிக்கும் போதே அதைப் பற்றி ஏதாவது தோன்றுகிறது. சில புத்தகங்களைப் பற்றி ஒன்றுமே தோன்றுவதில்லை. ஆனால், மூளையை மிரட்டி உருட்டி ஏதாவது யோசிக்கச் செய்து எழுத வேண்டியிருக்கிறது. படிக்கும் போது நிறைய விஷயங்கள் தோன்றினாலும் கூட எழுதும்போது அவற்றில் பாதி கூட மனதில் வந்து தொலைக்காது. மொத்தத்தில் ஆம்னிபஸ்ஸால் என்னுடைய நேரம் கொஞ்சம் உபயோகமாக பயன்படுகிறது.

போன வருடம் நிறைய பேருடன் (மெய் மற்றும் மெய் நிகர் வாழ்க்கையில்) சண்டை போட்டிருக்கிறேன். சிலர் என்னிடம் பேச்சை குறைத்துக் கொண்டுவிட்டார்கள். சிலர் பேசுவதையே நிறுத்திவிட்டார்கள். அவர்கள் எல்லோருடனுமே ஏண்டா சண்டை போட்டோம் என்றிருக்கிறது.

போன வருடத்தின் முதற்பாதியில் அருமையாகத் தூங்கினேன். சனிக்கிழமை மதியம் சாப்பிட்டுவிட்டு மூன்று மணிநேரம் தூங்குவது தான் அந்த வாரத்தின் மிகச் சிறந்த தூக்கமாக இருந்தது. வருடத்தின் பிற்பாதியில் இந்தத் தூக்கமென்பது மிகக் குறைந்துவிட்டது. இப்போதெல்லாம் ஏதாவது சிறிய ஒலி கூட தூக்கத்தைக் கலைத்துவிடுகிறது. ஆனால், முன்னைப் போல் தூங்க வேண்டும் என்கிற எண்ணமேயில்லை.

போன வருடச் சாதனையென்பது, IRCTCல் டிக்கெட் கணக்கு துவக்கி, சில பல தட்கால் டிக்கெட்டுகள் புக் பண்ணியது தான்.

சனி ஞாயிறுகளில் பொழுது போக்குவது சிரமமாக இருக்கிறது. சில பல சனிக்கிழமைகள் வங்கிக்குச் சென்று வந்தேன்; என்னமாகப் பொழுது போகிறது தெரியுமா? பாஸ்புக்கில் எண்டரி போட ஒரு க்யூ. புதிய அக்கவுண்ட் ஓப்பன் பண்ண ஒரு க்யூ. அப்புறம் பணம் எடுக்க, பணம் செலுத்த ஒரு க்யூ. இப்படி ஏதாவது ஒரு க்யூவில் நின்று கொண்டால் அரைமணி நேரம் கியாரண்டியாக போய்விடும். இடையே வயதானவர்கள், அழகானவர்கள் என்று வேண்டியவர்களுக்கு வழிவிட்டு தேவைக்கேற்ப நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம். ஒருநாள் நின்னா போதும் வங்கிக்குள்ளேயே ஒரு டூரிஸ்டு கைடு மாதிரி செயல்படலாம்.

சில இடங்களில் பிரச்சனை நடக்கப்போவது போல் தெரிந்தால், அங்கு போய் பிரச்சனை வராமல் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்திருக்கிறது. சில இடங்களுக்கு சரியான நேரத்துக்கு போய், பிரச்சனை துவங்க அறிகுறியேதும் இல்லையென்றால், வெறுத்துப்போய் ஏதாவது சொல்லி நானே ஒரு பிரச்சனையை உண்டு பண்ணிவிடுகிறேன். “இவன், நாளக்கழிச்சு வர்ற பிரச்சனைய இன்னிக்கே கொண்டு வந்திருவான்”ன்னு எங்கப்பா கூட சொல்ல ஆரம்பிச்சுட்டார்.

இந்த ப்ளாக் சொந்தக் கதை எழுதுவதற்காக ஆரம்பிக்கவில்லை. ஆனால் ஒருவருடமாக அது தான் மட்டும் தான் நடக்கிறது.