Tuesday, December 9, 2008

சலாம் காஷ்மீர்!


"... அரசியல்வாதிகளின் மீது எங்களுக்கு நம்பிகை போய்விட்டது. இனி ராணுவம் இத்தேசத்தை ஆளட்டும்..."

இது மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலை ஒட்டி மும்பைவாசிகள் அனுப்பிய குறுந்தகவல் (SMS). இதை ஏதோ ஒரு சிறந்த கருத்தினைப் போல் அனைத்து தொலைக்காட்சிகளிலும் திரும்பத் திரும்பக் காண்பித்தார்கள். உண்மையில் எனக்கு அப்படித்தோன்றவில்லை.

இக்குறுஞ்செய்தியில் ராணுவ ஆட்சி கோரப்படுகின்றது. "எங்களால் தேர்வு செய்யப்பட்ட அரசியல்வாதிகளால் அமையப்பெற்ற அரசால், இந்நாட்டைக் காக்க முடியவில்லை..." என்று தேரிவு செய்த மக்கள் கூறுகிறார்கள். இக்குறுஞ்செய்தி வருத்தம், பயம், ஜனநாயகத்தின் மீது பற்றின்மை மற்றும் ராணூவ ஆட்சியின் புரிதல் இல்லமை ஆகியவற்றை வெளிக்காட்டுகின்றது.

ராணுவ ஆட்சியென்பது, ஒரு சர்வாதிகாரியின் பிடியில் நிகழ்த்தப்படும் ஒரு வன்முறை. ஜனநாயகமென்பது, மக்களாலேயே உருவாக்கப்படுவது. தங்களால் உருவாக்கப்பட்ட ஒன்றில் நம்பிக்கையில்லாதிருப்பது தங்கள் மீதே நம்பிக்கையில்லாதிருப்பதாகும். நம்முடைய அண்டை நாடுகளில் நடக்கும் ராணுவ ஆட்சியினைப் பார்த்தால் புரியும். மியான்மரை எடுத்தக்கொள்வோம். ராணுவத்தின் வன்முறையை எதிரிக்கும் பெண் தலைவருக்கு வீட்டுச்சிறை. சமீபத்தில் அங்கு வீசிய புயல், அதனால் ஏற்ப்பட்ட வெள்ளம், இதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் கணக்குப்படி 1,00,000. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சர்வதேச அமைப்புகள் முன்வந்தபோதும் மியான்மரின் ராணுவ அரசு அவர்களை அனுமதிக்கவில்லை. இது ஒர் எடுத்தக்காட்டுதான். ஆனால், ராணுவ ஆட்சி நன்மைபயக்கும் என்று கூற ஒரு எடுத்துக்காட்டு கூட இல்லை.

மும்பையிலிருந்து காஷ்மீருக்குப் போவோம். காஷ்மீர், உலகத்தில் ஒரு அழகான இடம். அழகான மக்கள். அவர்களுடுத்தும் அழகான அடர் நிற ஆடைகள். ஆனால், அவர்கள் இதை அனுபவிக்கவில்லை. அவர்களை அனுபவிக்க விடவில்லை என்பதே சரி. ராணுவக் கட்டுப்பாடுகள், தீவிரவாத அச்சுறுத்தல், கந்தக வாசனை,வேலைவாய்ப்பின்மை, இப்படி எத்தனையோ துன்பங்கள். அவர்களுக்கு நல்வாழ்க்கை அமைத்துக் கொடுக்க எந்த ஆட்சியினாலும் முடியவில்லை. ஆனால், மக்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை இழக்கவில்லை. இதற்கு அங்கு நடந்துகொண்டிருக்கும் சட்டசபைத் தேர்தலே சாட்சி.

இதுவரை நடைபெற்ற நான்கு கட்ட தேர்தலில் வாக்குப் பதிவின் சதவிகிதம் வியக்கவைக்கிறது. முதற்கட்டத்தில் 64%, இரண்டாவதில் 65.9%, மூன்றாவதில் 61.32%, நான்காவதில் 55%, வாக்குகள் பதிவாகியுள்ளன.(இவை தோராய மதிப்பிடுதான். இச்சதவிகிதம் மேலும் உயரும் என்று கூறப்படுகின்றது). இத்தேர்தல் சாதாரண சூழ்நிலையில் நடத்தப்படவில்லை. அங்கு நடந்த சமீபத்திய கலவரங்கள், பிரிவினைவாதிகளின் தேர்தல் புறக்கணிப்பு அழைப்பு, தீவிரவாத அச்சுறுத்தல், கடும்குளிர் போன்ற பல இன்னல்களையும் தாண்டி அவர்கள் வாக்களித்திருக்கிறார்கள்.

குளிரெல்லாம் ஒரு பிரச்சனையா? ஆம். சாதாரண குளிரில்லை இரண்டு டிகிரிக்கு மேல் வெப்பநிலை அந்த மாநிலத்திலேயே இல்லை. லடாக்கின் சில பகுதிகளில் வெப்பநிலை மைனஸில் சென்றது. அங்கும் வாக்குப்பதிவு நடந்தது. அங்கு பணியாற்றிய தேர்தல் அதிகாரிகளையும் பாராட்ட வேண்டும். இத்தனை துன்பங்களிலும் அவர்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ளனர். இதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

காலங்கள் மாறும்! காட்சிகளும் மாறும்!

Friday, November 14, 2008

புதியமுகம்??

நம் ஊரில், அலுவலகங்களில் யாரவது புது அதிகாரி வந்தால் காரியம் சாதிக்க வேண்டி அனைவரும் எலுமிச்சைப்பழத்தோடு வாழ்த்த வரிந்துவிடுவார்கள். ஆனால் உலகமே ஒருவரை தலையில் வைத்து ஆடிக்கொண்டிருக்கிறது. அறிக்கைகள், கட்டுரைகள், கவிதைகள், சித்திரங்கள், என அனைத்திலும் அவரே நிறைந்திருக்கிறார். தங்கள் ஊர் மாமன்ற உறுப்பினர் (Councilor) யாரென்ரே தெரியாதவர்கள் கூட இவரைத் தெரிந்து வைத்துத்ள்ளார்கள். அவரும் உலத்தலைவனைப் போல் அனைத்து விசயங்களைப்பற்றியும் பேசி வருகிறார்.

அவர், பாரக் ஒபாமா.

அமெரிக்காவின் அடுத்த அதிபர். முதல் கருப்பின அதிபர். அவர் சாதித்தது இதுதான். அவர் அதிபராக வரவேண்டும் என்று எத்தனை அமெரிக்கர்கள் ஆசைப்பட்டார்களென்று தெரியவில்லை. இந்தியத் தொலைக்காட்சிகள் இந்தியர்களிடயே நடத்திய அனைத்துக் கருத்துக்கணிப்பிலும் ஒபாமாவுக்கே ஆதரவு அதிகம். ஏன்? அவருக்கு எப்படி இத்தனை ஆதரவு? அவர் நமக்கென்ன செய்தார்? எதிர் வேட்பாளர் ஜான் மெக்கெயின் மீது என்ன பகை? ஒன்றுமில்லை. இவர்கள் இருவரையும் சில மாதங்களுக்கு முன் நமக்கு தெரியவே தெரியாது. ஆனாலும், ஒபாமா அதிபராவதில் நமக்கு அவ்வளவு அக்கறை. சென்னையில் ஒரு பள்ளியில் மாதிரி அமெரிக்க தேர்தல் நடத்தியுள்ளார்கள். இப்படியொரு மாதிரி தேர்தலை இந்தியப் பிரதமரைத் தேர்தெடுக்க கண்டிப்பாக நடத்தமாட்டார்கள்.

சனவரியில் அதிபராகிரார் ஒபாமா. அவர் விளையாடுவதற்கு காஷ்மிர், இராக், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீன் போன்று நிறைய இருக்கின்றன. இப்போது, அவர் குழந்தைகள் விளையாடுவதற்கு ஒரு நாய்க்குட்டியைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். பலநாட்டு அதிபர்களும், பிரதமர்களும், முதல்வர்களும் வாழ்த்துக்களை அனுப்பி தங்கள் விசுவாசத்தைக் காட்டிக்கொண்டிருக்கின்றார்கள். அவரின் அழைப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.என்ன செய்யப் போகிறார் ஒபாமா? அவரின் முன்னுரிமை ராணுவத்திற்கா? வறுமை ஒழிப்பிற்கா? அவர் இந்தியாவுக்கு நண்பனா? எதிரியா? பயங்கரவாதம் தூண்டப்படுமா? தடுக்கப்படுமா? விடைகாணப் பொறுமையில்லாமல் விவாதங்கள் தொடங்கிவிட்டன.

"We Can Change" என்ற கோஷத்துடன் பதவிக்கு வந்திருக்கின்றார் ஒபாமா. மாறாத ஒன்று அமெரிக்காவின் ஆதிக்க அரசியல். எத்தனை முகங்கள் மாறிமாறி வந்தாலும் அது மாறப்போவதில்லை. என்ன செய்யப் போகின்றது ஆதிக்கத்தின் புதியமுகம்?

Sunday, August 31, 2008

மின்சார விடுமுறை

மின் தடை, மின்வெட்டு, மின்சார விடுமுறை. எத்தனை வார்த்தைகள் ஆனா அர்த்தம் எல்லாம் ஒன்னு தான்.
பள்ளிக்கூடம் போற வயசுல கரண்ட் போனா எவ்வளவு சந்தோசம். கரண்ட் போன ஒடனே "எனக்கு படிக்க வேண்டியது எவ்வளவு இருக்கு. பாவிபசங்க கரண்ட கட் ப்ண்ணிடாங்களே."-ன்னு பில்டப் கொடுத்துட்டு ஊர்மேய கெளம்பிடுவோம். இருட்ல, தெருல மேற்குலேந்து கெழக்குபாத்து பேய் மாதிரி ஒடுவோம். ஒரு தடவ கண்ணாம்பூச்சி விளையாடி, ஒரு ஆட்டோமேல மோதி, அந்த டிரைவருக்கு யாருன்னு தெரியாம மண்ட காஞ்சுபோச்சு. எம்புட்டு சந்தோசம்.
நம்ம சந்தோசமா இருந்தா பொறுக்காதே. என்னவோ Emergency Light-டாம்ல ('எமன்'ஜெர்சி லைட்டு) அத வாங்கிட்டாக. கரண்ட் போனானும் அதுல போகாதுல்ல.(மொதல்ல கரண்ட் போனாலும் வேல செய்யர டி.வி. வாங்கனும்.) ஆட்டம் பாட்டமெல்லாம் நின்னுபோச்சு. இப்போ நிலைம மாறிப்போச்சு.
இப்போ கரண்ட் போனா, மெகா சீரியல் போச்சேன்னு பெரியவங்க ரொம்ப வருத்தப்படறாங்க. இவ்வளவுக்கும், அந்த சீரியல்ல, ஊர் உலகத்துலே ஒரு ரொம்ப நல்ல பொண்ணு நாலே நாலு வார்த்தபேசும்.
இந்த தடவ நெலம ரொம்ப மோசம். மின்சார விடுமுறைனா சும்மவா. ஒரு நாளைக்கு அஞ்சாறு மணிநேரம் கரண்ட இருக்கிறதில்ல. விட்டுக்கு நல்ல தண்ணி வரதில்லை. கடைல இட்லி வாங்கப்போனா, சட்னி இல்லை. ஏன்னா, கரண்ட் இல்ல. கடைல வருமானமும் இல்ல. மக்களுக்கு சந்தோசமும் இல்ல.
ஆனா, மெயின் ரோட்ல ஆடிக்கழிவு விளம்பரம் மட்டும் பிரகாசமா இருக்கு. ஏழைங்க வாழ்க்கை எப்போ பிரகாசமாகுமோ?

Tuesday, July 8, 2008

வாரணம்

"சும்மா யோசிச்சுண்டே இருந்தா மட்டும் போதாது, நல்லவிதமா யோசிக்கனும், நாலுபேருக்கு நல்லதை யோசிக்கனும்."

படிப்பு முடிச்சுட்டு சும்மா வெட்டியா இருக்கற நேரத்துல ஏதாவது எழுதலாம்னு தோனித்து, அதான் ப்ளாக் ஆரம்பிச்சாசு.

வாரணம்னா யானைனு அர்த்தம் (வாரணம் ஆயிரம்னு பாசுரம் இருக்கு). யானைக் காதல் சின்ன வயசிலே ஆரம்பமாச்சு. யார் ஆத்துலேயோ ஒரு மர யானை தூக்கிண்டு வந்தேன். யானைனா யாருக்குதான் பிடிக்காது. அதான் ப்ளாகுக்கும் அதே பேர்.

இந்த ப்ளாக்குல எல்லாத்த பத்தியும் எழுதப்போரேன்.