Tuesday, December 9, 2008

சலாம் காஷ்மீர்!


"... அரசியல்வாதிகளின் மீது எங்களுக்கு நம்பிகை போய்விட்டது. இனி ராணுவம் இத்தேசத்தை ஆளட்டும்..."

இது மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலை ஒட்டி மும்பைவாசிகள் அனுப்பிய குறுந்தகவல் (SMS). இதை ஏதோ ஒரு சிறந்த கருத்தினைப் போல் அனைத்து தொலைக்காட்சிகளிலும் திரும்பத் திரும்பக் காண்பித்தார்கள். உண்மையில் எனக்கு அப்படித்தோன்றவில்லை.

இக்குறுஞ்செய்தியில் ராணுவ ஆட்சி கோரப்படுகின்றது. "எங்களால் தேர்வு செய்யப்பட்ட அரசியல்வாதிகளால் அமையப்பெற்ற அரசால், இந்நாட்டைக் காக்க முடியவில்லை..." என்று தேரிவு செய்த மக்கள் கூறுகிறார்கள். இக்குறுஞ்செய்தி வருத்தம், பயம், ஜனநாயகத்தின் மீது பற்றின்மை மற்றும் ராணூவ ஆட்சியின் புரிதல் இல்லமை ஆகியவற்றை வெளிக்காட்டுகின்றது.

ராணுவ ஆட்சியென்பது, ஒரு சர்வாதிகாரியின் பிடியில் நிகழ்த்தப்படும் ஒரு வன்முறை. ஜனநாயகமென்பது, மக்களாலேயே உருவாக்கப்படுவது. தங்களால் உருவாக்கப்பட்ட ஒன்றில் நம்பிக்கையில்லாதிருப்பது தங்கள் மீதே நம்பிக்கையில்லாதிருப்பதாகும். நம்முடைய அண்டை நாடுகளில் நடக்கும் ராணுவ ஆட்சியினைப் பார்த்தால் புரியும். மியான்மரை எடுத்தக்கொள்வோம். ராணுவத்தின் வன்முறையை எதிரிக்கும் பெண் தலைவருக்கு வீட்டுச்சிறை. சமீபத்தில் அங்கு வீசிய புயல், அதனால் ஏற்ப்பட்ட வெள்ளம், இதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் கணக்குப்படி 1,00,000. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சர்வதேச அமைப்புகள் முன்வந்தபோதும் மியான்மரின் ராணுவ அரசு அவர்களை அனுமதிக்கவில்லை. இது ஒர் எடுத்தக்காட்டுதான். ஆனால், ராணுவ ஆட்சி நன்மைபயக்கும் என்று கூற ஒரு எடுத்துக்காட்டு கூட இல்லை.

மும்பையிலிருந்து காஷ்மீருக்குப் போவோம். காஷ்மீர், உலகத்தில் ஒரு அழகான இடம். அழகான மக்கள். அவர்களுடுத்தும் அழகான அடர் நிற ஆடைகள். ஆனால், அவர்கள் இதை அனுபவிக்கவில்லை. அவர்களை அனுபவிக்க விடவில்லை என்பதே சரி. ராணுவக் கட்டுப்பாடுகள், தீவிரவாத அச்சுறுத்தல், கந்தக வாசனை,வேலைவாய்ப்பின்மை, இப்படி எத்தனையோ துன்பங்கள். அவர்களுக்கு நல்வாழ்க்கை அமைத்துக் கொடுக்க எந்த ஆட்சியினாலும் முடியவில்லை. ஆனால், மக்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை இழக்கவில்லை. இதற்கு அங்கு நடந்துகொண்டிருக்கும் சட்டசபைத் தேர்தலே சாட்சி.

இதுவரை நடைபெற்ற நான்கு கட்ட தேர்தலில் வாக்குப் பதிவின் சதவிகிதம் வியக்கவைக்கிறது. முதற்கட்டத்தில் 64%, இரண்டாவதில் 65.9%, மூன்றாவதில் 61.32%, நான்காவதில் 55%, வாக்குகள் பதிவாகியுள்ளன.(இவை தோராய மதிப்பிடுதான். இச்சதவிகிதம் மேலும் உயரும் என்று கூறப்படுகின்றது). இத்தேர்தல் சாதாரண சூழ்நிலையில் நடத்தப்படவில்லை. அங்கு நடந்த சமீபத்திய கலவரங்கள், பிரிவினைவாதிகளின் தேர்தல் புறக்கணிப்பு அழைப்பு, தீவிரவாத அச்சுறுத்தல், கடும்குளிர் போன்ற பல இன்னல்களையும் தாண்டி அவர்கள் வாக்களித்திருக்கிறார்கள்.

குளிரெல்லாம் ஒரு பிரச்சனையா? ஆம். சாதாரண குளிரில்லை இரண்டு டிகிரிக்கு மேல் வெப்பநிலை அந்த மாநிலத்திலேயே இல்லை. லடாக்கின் சில பகுதிகளில் வெப்பநிலை மைனஸில் சென்றது. அங்கும் வாக்குப்பதிவு நடந்தது. அங்கு பணியாற்றிய தேர்தல் அதிகாரிகளையும் பாராட்ட வேண்டும். இத்தனை துன்பங்களிலும் அவர்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ளனர். இதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

காலங்கள் மாறும்! காட்சிகளும் மாறும்!