Showing posts with label புலம்பல். Show all posts
Showing posts with label புலம்பல். Show all posts

Monday, May 21, 2012

லூசுத்தனமான வாழ்க்கை #4

வீட்டில் சில மாதங்களுக்கு முன் ஃபிரிட்ஜ் சாவியை தேடிக்கொண்டிருந்தார்கள். அப்போது கிடைக்கவில்லை. கொஞ்ச நாள் கழித்து வாஷிங்மெஷின் வாங்கியதற்கான பில்லைத் தேடும் போது ஃபிரிட்ஜ் சாவி கிடைத்துவிட்டது. வாஷிங்மெஷின் பில் இன்னும் கிடைக்கவில்லை. வேறு ஏதாவது தேடும் போது கண்டிப்பாகக் கிடைத்துவிடும். எதையாவது தொலைக்க வேண்டும். பொருட்களை பத்திரமாக வைக்கும் போதே, அவற்றை தொலைத்துவிடுகிறோம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். ஒரு புத்தகத்தில் படித்த விஷயத்தை நினைவில் விஷுவலாக வைத்துக் கொண்டு, பின் தேடும் போது ஒரு வார்த்தை கூட நினைவில் இல்லையென்றாலும் ‘இந்தக் கதையில், ஏதோவொரு வலதுபக்க பக்கத்தில் மேலிருந்து இரண்டாவது பத்தியில் பார்த்தேன்’ என்று தேடிப்பிடித்துவிட முடிகிறது. இணையத்திலோ மின் புத்தகங்களிலோ, மிகச் சரியான கீவோர்ட் இல்லையென்றால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதிரஷ்டமிருந்தால், இணையத்தில் முன்பு பயணித்த வழியிலேயே வந்தால் கண்ணில் படக்கூடும். இது கிட்டத்தட்ட கர்சீஃபை எங்கோ போட்டுவிட்டு, நாம் போன இடத்திற்கெல்லாம் போய் எங்காவது விழுந்திருக்கிறதா என்று தேடுவதைப் போன்றது தான். இப்போது தான் புக்மார்க், ஃபேவரைட், விஷ்லிஸ்ட் போன்றவற்றின் அருமை புரிந்திருக்கிறது.

விவாதங்களில் பங்கேற்கும் போது ரொம்பக் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் நாம் சொல்லாத கருத்தை டிஃபண்ட் செய்ய வைத்துவிடுவதோடு, பொருத்தமில்லாத, நீங்கள் விரும்பாத, மட்டமான ஒரு பட்டத்தையும் வாங்கிக் கொடுத்துவிடுகிறார்கள். 'உனக்கு எல்லா விஷயமும் தெரிந்த மாதிரி பேசிக் கொண்டிருக்காதே’ என்று மூளைக்குச் சொல்லிப் புரிய வைக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. கொஞ்சம் கடினம் தான். ஆனால், செய்யவில்லையென்றால் தர்ம அடி நிச்சயம். "உன்னை யாராவது முட்டாள் என்று சொன்னால், ‘எனக்கே அந்தச் சந்தேகம் உண்டு’ என்று சொல்லிவிடு” என்று கண்ணதாசன் சொன்னதைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

அலுவலகத்தில் ஒரு நாள் என் சகா தன்னுடைய கணிணியில் ஏதோ காண்பிப்பதற்காக கூப்பிட்டார். எழுந்து போய், அவருடைய தோளைத் தொட்டேன். ‘பட்’ என்று சத்தம். எனக்கு விரலில் சுள்ளென்ற வலி. அவருக்கு தோளில் வலி. அவர் கணிணியைத் தொட்டுக் கொண்டிருந்ததால், அதிலிருந்து தான் ஷாக் அடித்திருக்க வேண்டும் என்று நினைத்தோம். பின் சோதனை செய்ததில் அப்படித் தெரியவில்லை. அதற்கு சில நாட்கள் கழித்து நான் இன்னொரு நண்பரைத் யதேச்சையாகத் தொட, மீண்டும் ‘பட்’. இந்த முறை அவருக்கு வலிக்கவில்லையாம். எனக்கு வலித்தது. பிறகு ஒரு நாள், ஒரு லாப்டாப்பைத் திறக்கும் போது, அதிலிருந்த உலோக ஃபீடிங்கில் என் கை பட்டு, மீண்டும் ‘பட்’. பின் அலுவலக அறையின் கதவில் இருக்கும் இரும்புக் கைப்பிடியைத் தொடும் போது ‘பட்’. அலுவலகத்திற்கு என்னைச் சந்திக்க வந்த ஒருவர்‘ஹலோ! நடராஜன், ஹவ் ஆர் யூ’ என்று கைகொடுத்தார். நான் ஷாக் கொடுத்தேன். எப்படியோ ஸ்டாடிக் மின்சாரம் பாய்கிறது ஆனால் எப்படி என்று தான் தெரியவில்லை. 

இதை ஒரு நண்பரிடம் சொல்ல, அவர் நாற்காலியில் இருக்கும், கிழிக்கப்படாத ப்ளாஸ்டிக் உறையினால் தான் இப்படி நடக்கிறது என்றார். பள்ளி வகுப்புகளில், சீப்பையும் காதிதத் துண்டுகளையும் வைத்துச் செய்த பயிற்சியைக் கொண்டு இதை விளக்கவும் செய்தார். உடனடியாக எல்லா பிளாஸ்டிக் உறைகளையும் கிழித்துப் போட்டுவிட்டோம். ஒரு மாதம், ஒரு பிரச்சனையும் இல்லை. போன வாரத்திலிருந்து மீண்டும் ஷாக் அடிக்கத் தொடங்கியிருக்கிறது. இப்போது யாரையும் தொடுவதில்லை. கதவின் கைப்பிடியை ஒரு விரலால் கவனமாக இரண்டொரு முறை தொட்டுப் பார்த்துவிட்டுத்தான் கைவைக்கிறேன்.இது என்னவென்று கண்டுபிடிக்க வேண்டும். இல்லை, இதைவைத்து ஏதாவது ஒன்றிரண்டு சித்து வேலைகள் தேற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

அம்மாவிடம் வாக்குவாதம் செய்யும் போதெல்லாம், கடைசியில், ‘கொஞ்சமாவது சொன்ன பேச்சக் கேளேண்டா. பொண்ணாப் பொறந்திந்திருந்தேன்னா இந்நேரத்துக்கு கல்யாணத்தையாவது பண்ணிக் கொடுத்திருப்பேன், இப்படிப் உயிர வாங்கறையேடா!’ என்றே பல சமயம் முடிக்கிறார். இதையே, சில வருடங்களுக்கு முன் ஒரு நண்பனோடு எம்ப்ளாய்மெண்ட் நியூஸை புரட்டிக் கொண்டிருக்கும் போது 'இப்படிப் பொரட்டறதுக்கு, பொண்ணாப் பொறந்திருந்தா இந்நேரத்துக்கு செட்டில் ஆகியிருக்கலாமேடா’ன்னு சொல்லியிருக்கேன். மேலே சொன்னது உங்களுக்கு ‘ஆணாதிக்கத்தனமாகத்’ தெரியலாம். தப்பில்லை. ஆனால் அந்நாளைய நிலைமை அப்படித்தான் இருந்தது.

Thursday, March 15, 2012

லூசுத்தனமாக வாழ்க்கை #3

எங்கள் வீட்டில் நாற்காலியை நகர்த்தினால் (இழுத்தால்) கீழ் வீட்டில் இருப்பவர்களுக்கு தூக்கம் கெடுகிறது. சீனத் தொழில்நுட்பத்தாலும், அவர்களின் பொருள் பரப்பும் மேன்மையாலும் பெங்களூரு வரை வந்துவிட்ட அதிபயங்கர சத்தம் எழுப்பும் தொலைப்பேசியை காலை 4 மணிக்கே பயன்படுத்தும் கடைத் தெரு பூக்காரரால் குறைந்தது நாலைந்து வீட்டிலிருப்பவர்களுக்காவது தூக்கம் கெடும் என்று நம்புகிறேன். அதிகாலை 2 மணிக்கு கத்தத் துவங்கி, என்ன செய்தும் நான்கு மணிவரை அடங்காத சுவர்க்கோழி என் தூக்கத்தை கெடுத்தது. தன் வாயால் கெட்டது. செத்தது. ஆக இந்த உலகத்தில் ஒவ்வொரு உயிரினமும் ஏதாவது ஒரு உயிரினத்தின் தூக்கத்தைக் கெடுக்கவே படைக்கப்பட்டிருக்கிறது. நாம் யாருடைய தூக்கத்தையெல்லாம் கெடுக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறதோ, அதைச் செய்து முடித்துவிட்டால் பரமபதம் நிச்சயம்.

இங்கே ஒரு மனிதர் இருக்கிறார். கொஞ்சம் வயதானவர். காலை ஏழு மணிக்கெல்லாம் கீழிருக்கும் ஏதாவது ஒரு கடையில் அவரைப் பார்க்கலாம். பெரும்பாலும் புகைத்துக் கொண்டு இருப்பார். மருந்துக் கடையில் கொஞ்ச நேரம். தையல் கடையில் கொஞ்ச நேரம். பின் எதிர் வரிசையில் இருக்கும் பல்பொருள் கடை. பிறகு அதற்கு அடுத்துள்ள சலூன் பெஞ்ச். இரவு கடையடைக்கும் வரை இப்படி சுற்றிச் சுற்றி வந்து கொண்டேயிருக்கிறார். கடைக்காரர்கள் வீட்டுக்குப் போகச் சொன்னாலும் போவதில்லையாம். அவருக்கு வீடெல்லாம் இருக்கலாம். அங்கு போக பிடிக்காமல் இருக்கலாம். அல்லது இந்தக் கடைத்தெரு பிடித்திருக்கலாம். அல்லது மனிதர்களை தள்ளி இருந்து வேடிக்கை பார்ப்பது பிடித்திருக்கலாம். அவருடைய அனுபவம் எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. ஆனால், அவர் முகத்தப் பார்த்தால் ரொம்ப கஷ்டப்பட்டு பொழுதைக் கடத்துவது மாதி்ரியிருக்கிறது. அந்த மனுஷருக்கு என்ன பிரச்சனையோ?

காலையிலேயே எரிச்சலோடு இருந்தால், அன்று நீங்கள் சந்திக்கும் அனைவரையும் எரிச்சல்படுத்திவிட முடியும். எரிச்சலடைவதற்கு முக்கியக் காரணம், ஒழுங்காக சோறு திங்காதது. அல்லது சரியாகத் தூங்காதது. அல்லது உடம்பில் எங்காவது ஒரு வலி. சின்ன வலியாக இருந்தால் கூடப் போதும். குறிப்பாக கழுத்து வலி முழங்கால் வலி. இதெல்லாம் என்னுடைய வெட்டியாராய்சசின் முடிவுகள். அதனால் எல்லாவற்றுக்கும் எரிச்சல் வந்தால், யார் காரணம் என்று யோசிக்காதீர்கள், நேரே போய் ஒரு மசால் தோசை சாப்பிட்டுவிடுங்கள். அடுத்தது முகத்தை தூக்கி வைத்துக் கொள்பவர்கள் பற்றிய ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.
Come to the edge.
We might fall.
Come to the edge.
It's too high!
Come to the edge!
And they came
And he pushed
And they flew.
- Chirstopher Logue

தைரியம் வந்த சிலர் குதித்துவிடுகிறார்கள; சிலருக்கு இறக்கை முளைத்துவிடுகிறது, பறந்துவிடுகிறார்கள். சிலர், இறக்கை முளைக்கும் முன்பாகவே தரை தொட்டுவிடுகிறார்கள். தைரியம் இல்லாத சிலர், தாமும் ஒரு நாள் குதிப்போம் என்ற நம்பிக்கையில், குதிப்பவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், அல்லது ‘லூசுத்தனமான வாழ்க்கை’ என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

Tuesday, February 14, 2012

லூசுத்தனமான வாழ்க்கை #2

பிப்ரவரி 14 2012                                                                                                    கர மாசி 2

பெங்களூரில் நாளுக்கு நாள் வெய்யில் அதிகமாகிக் கொண்டே போகிறது. நேற்று திருநெல்வேலிலும் பெங்களூரிலும் அதிகளவு வெப்பம் என்பது ஒரே அளவில் பதிவாகியிருக்கிறது. ஆபீஸ் காண்டீனில் சாப்பிட்டுவிட்டு, போட வேண்டிய இடத்தில் போடாமல், எச்சுத்தட்டை தூக்கிக் கொண்டு படியிறங்கும் வரை எனக்கு முத்தியிருக்கிறது.

இந்த வருடம் தொடங்கி ஒன்றரை மாதம் ஆகிவிட்ட பின்னும் உருப்படியாக எதுவும் செய்ததாக நினைவில்லை. தாயார் சன்னதி படிக்கத் தொடங்கியிருக்கிறேன். கிட்டத்தட்ட இருபத்தியிரண்டு வருடங்கள் அந்த நாசமாய்போன ஊரில் சுற்றியிருக்கிறேன். எனக்குத் திருநநேலின்னா அது சுலோச்சன முதலியார் பாலத்துக்கு இந்தப் பக்கம் தான். அப்பப்போ ஆரெம்கேவிக்காக அந்தப் பக்கம் போவதுண்டு. இப்போ ஆரேம்கேவியும் பாலத்துக்கு இந்தப் பக்கம் வந்தாச்சு. இந்த புக்க இன்னும் ரெண்டு மூணுவாட்டி படிச்சா நானும் பிரத்யேக திருநேலி வார்த்தையெல்லாம் பேச ஆரம்பிச்சிடுவேன். அப்புறம் என்னத் திட்டக்கூடாது. அண்ணாச்சி சுகா இருக்கார். அவரை திட்டவும்.

பிப்ரவரி 14, என்றாலே என் நினைவுக்கு வருவது எங்கள் கணிதப் பேராசிரியர் சுந்தரராஜன் சார் தான். கல்லூரியின் ஒரு கட்டிடத்தில் அவர் பாடம் எடுக்கிறார் என்றால், மற்ற எந்த கட்டிடத்திலிருந்தும் துல்லியமாக கேட்கலாம். அடிவயிற்றிலிருந்து அவர் கத்திக் கத்திப் பாடம் எடுக்கும் போது, அது மத்தியானமே ஆனால் கூட தூக்கம் வராது. பாடத்தை எடுத்து முடிப்பதில் அவர் காட்டும் அக்கறையும், ஒவ்வொரு தலைப்புக்கு அவர் தரும் நோட்ஸும் மறக்கவே முடியாதது. அவருக்காக ஒரு orkut communityபிரசன்னா உருவாக்கினான்.

ஒரு பிப்ரவரி 14ஆம் நாள் பாடம் எடுக்க வந்தவர், கரும்பலகையில் எழுத கையை உயர்த்தினார், பின் ஏதோ நியாபகம் வந்தவராக திரும்பி எங்களைப் பார்த்துச் சொன்னார்,

"காண்டாமிருகத்த மனசுக்குள்ள நுழைய விடவேகூடாது. நொழைஞ்சிடுச்சுன்னா.. அவ்ளோதான்”

Friday, October 14, 2011

லூசுத்தனமான வாழ்க்கை

காலைல எழுந்த உடனே ஒரே எரிச்சல். எத்தனை மணிக்கு தூங்கி எத்தனை மணிக்கு எழுந்தாலும் அதே எரிச்சல். பல் தேச்சு சில்லறையத் தேடிப் பிடிச்சு பால வாங்கி காப்பி போட்டு, அத நானே குடிச்சு. என்ன வாழ்க்கைடா இது!

எவ்வளவு நேரம் தூங்கினாலும் சோர்வா தான் இருக்கு. அதுல இந்த டாக்டர் பத்ராவோட தொந்தரவு வேற. காலங்காத்தால மூணு மணிக்கு SMS. 'Don't Take your hair fall Easy' யாம். அது இருந்தா என்ன போனா என்ன. காலங்காத்தால மூணு மணிக்கா இதுக்கெல்லாம் கவலைப்பட முடியும்.

எடுத்த வேலையெல்லாம் முடிக்காம அப்படியே இருக்கு. எந்த வேலையையும் சொன்ன தேதியில முடிச்சு கொடுத்ததே இல்ல. தெரிஞ்சவன் தெரியாதவன் எல்லாரும் கேட்டாச்சு ‘ஏன் எப்போதும் சீரியஸாவே இருக்க?’ நான் நார்மலா இருந்தாலே அப்படித்தான் இருப்பேன்னு எத்தன பேர்கிட்ட தான் விளக்கம் கொடுக்க? ஒரு தடவ பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்க போனேன். அந்த போட்டோ கிராஃபர் தொடர்ந்து மூணு தடவ திரும்பத் திரும்ப ‘smile sir' னு சொல்லிக்கிட்டே இருந்தார். அவர் மூணாவது தடவ சொல்லும் போது எனக்கு கோவம் வந்திடுச்சு. ‘இவ்ளோ தான் எடுங்க எடுங்க’. நியாயமா அந்தாளுக்குத் தான் கோவம் வந்திருக்கணும்.

இந்த self-control விஷயத்துல ரொம்பவே மோசம். ஏதாவது ஒன்னு செய்யணும்னு நினச்சுப்பேன் ஆனா செய்யமாட்டேன். மறதியெல்லாம் இல்லை. முழுச் சோம்பேறி ப்ளஸ் மனம் போன போக்குல போறது. இதைச் சொன்னா 'மனத்தை ஏன் அடக்கணும். தும்மல அடக்குவியா? விக்கல அடக்குவியா? அத அடக்குவியா? இத அடக்குவியா? அதே மாதிரி மனசையும் அடக்க கூடாது. அதுபாட்டுக்கு அலையவிட்டு வேடிக்கை பாரு'ங்கறாய்ங்க. 

ஐயா சாமி மனச அடக்கணும்னு யாரு சொன்னா? கவனத்தை குவிக்கணும்னு தான சொல்றாங்க. அனுஷ்கா பத்தி நினைக்கும் போது அனுஷ்கா நினைவு வந்தா தப்பில்லை. ஆஞ்சநேயர் கோயிலுக்கு போயி ‘கடவுளே! எனக்கு மட்டுமாவது நல்ல புத்திய கொடு’ன்னு ஒரு முக்குல உக்காந்து உருகும் போது அனுஷ்கா நினைப்பு வந்தா எரிச்சல் வருமா வராதா? இல்ல, உங்க மேனேஜர் சீரியஸா ஒரு விஷயம் பேசறார், ஒரு வார்த்த ‘ட்விட்டர்’னு சொல்லிட்டார். உடனே உங்க மனம் உங்க ட்விட்டர் ஐகான நினைவுல கொண்டுவந்து, அதுலேர்ந்து முந்தின நாள் ட்விட்டர்ல படிச்ச ஜோக்குக்கு போயி, அதுக்கு நீங்க இப்போ சிரிச்சு, அத உங்க மேனேஜரும் பார்த்தா எரிச்சல் வருமா வராதா? இதுக்கு தான் சொல்றேன் மனச கட்டுப்படுத்தணும். ஆனா என்னால முடியல.

அதுக்கடுத்தது அறிவுப் பிரச்சனை. பதினாறாம் வாய்ப்பாடு வரை தெரிஞ்சா போதாதா. இதப் படிப்போமோ அதப் படிப்போமான்னு சதா எதையாவது தேடிக்கிட்டு. யாருக்கு யாரு மகாகவியா இருந்தா எனக்கென்னனு சும்மாயிருக்கா. சில சமயம் தேவையானத படிக்கிறத விட தேவையில்லதத தான் அதிகமா படிக்கிறேன். 

இந்த Time Sheet எல்லாம் போட்டுப் பார்த்தா எவ்வளவு நேரம் வீணடிக்கிறேன்னு தெரிஞ்சுக்கலாம்தான். தெரிஞ்சு என்ன செய்ய? சரி கூடவே ஒரு டுடு லிஸ்ட் வெச்சுகிட்டா நல்லாயிருக்கும்ல? இருக்கும் தான். தொடர்ந்து ரெண்டு நாளைக்கு மேல அத ஃபாலோ பண்ணுவேன்ற நம்பிக்கை எனக்கில்லை.

இதப்பத்தி மத்தவங்க கிட்ட பேசினா சிலர், ‘இந்த வயசுல உனக்கென்னைய்யா என்ஜாய் பண்ணு’ன்றாங்க. இன்னும் பலர் ‘கல்யாணம் பண்ணிக்கோ கவலையெல்லாம் போயிடும்’னு சொல்றாங்க. கொஞ்சம் வயசு குறைஞ்சவங்ககிட்ட கேட்டா ‘Go get a girlfriend'டாம். அதுக்கெல்லாம் இந்த மூஞ்சிய வெச்சுகிட்டு நானெங்கே போறது. தெருத்தெருவா அலைய வேண்டியது தான்.

இந்தப் பதிவு மாதிரி என்னென்வோ பண்றேன், ஏதாவது நடந்து உள்ளொளியோ உள்ளெலியோ பட்டுனு ரெண்டுல ஒன்னு வெளியே வந்துட்டா பரவாயில்ல. ம்ம்... பாப்போம்.