Saturday, February 6, 2010

வேலையில் முன்னேற!




தலைப்பு: வேலையில் முன்னேற சக்ஸஸ் ஃபார்முலா
எழுத்தாளர்: டாக்டர் கேரன் ஓடாஸோ
தமிழில்: ஆக்குலர் ரவி
பதிப்பகம்: கிழக்கு பதிப்ப்பகம் 
விலை: ரூ.125
மேலும் விபரங்களுக்கு...

இது கார்பரேட் நிறுவனங்களின் காலம். மிகப் பிரம்மாண்டமான கட்டிடங்கள், அதிகமான ஊழியர்கள் இவை மட்டுமே கார்பரேட்களின் அடையாளம் இல்லை. அவர்களின் தொழில்முறை, செயல்முறை, அணுகுமுறை, போன்ற பலவும் முறைப்படுத்தப்பட்டவை. எல்லோருக்குமே ஒரு கார்பரேட் கனவு இருக்கிறது. அரசியல் கட்சிகள் முதல் அப்பள வியாபாரிகள் வரை தங்கள் நிறுவனங்களை ஒரு கார்பரேட் போல நடத்தவே முனைகிறார்கள். சந்திரபாபு நாயடு, தனது கட்சியையும் ஆட்சியையும் ஒரு கார்பரேட்டின் தலைமை அதிகாரி போன்றே நடத்தினார் என்பார்கள் (இரண்டுமே மோசமாக வீழ்ந்தன). இந்தியாவில் மென்பொருள் கார்பரேட் நிறுவனங்களில் வேலை பார்க்க அத்தனைப் போட்டி.
இப்போது கார்பரேட் என்பது ஒரு கனவுக் கூடாரம், உள்ளே நுழைய பலரும் பிரியப்படுகிறார்கள். ஆனால், உள்ளே பல கனவுகள் அடையாளமற்றுப் போகின்றன. ஆனால், பல கனவுகளை, முதற்க் கனவான நிறுவனத்தின் லட்சியத்தோடு இணையச் செய்வதில் தான் கார்பரேட்களின் வெற்றி அடங்கியுள்ளது.
டாக்டர் கேரன் ஓடாஸோ எழுதிய The Truth About Managing Your Career என்ற புத்தகத்தை கிழக்கு பதிப்பகம் 'வேலையில் முன்னேற சக்ஸஸ் ஃபார்முலா' என்ற தலைப்பில் தமிழில்  வெளியிட்டுள்ளது; ஆக்குலர் ரவி மொழி பெயர்த்துள்ளார். புதிதாக வருபவர்கள் தங்கள் நிறுவனங்களைப் பற்றி அறிந்துகொள்ளவும், அவர்களின் தயக்கத்தைப் போக்கவும் 'Corporate Induction' என்று ஒரு பயிலரங்கம் நடத்துவார்கள். கல்லூரி முடித்து நிறுவனங்களில் சேர்பவர்கள் தங்களை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்று பேருரையே நிகழ்த்துவார்கள். என்ன உடை உடுத்த வேண்டும்? எப்படி உடுத்த வேண்டும்? டை கட்டுவது எப்படி? பெல்ட் போடுவது எப்படி? என்று புறத் தோற்றத்தைப் பற்றி சொல்லுவதோடு, மற்றவர்களிடம் நீங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் கற்பிப்பார்கள். சுருக்கமாகச் சொல்லுவதானால் "இத்தனை நாள் நீ மனுசனா இருந்துட்ட, இனிமே அப்படி இருக்காத",  இதை சுற்றிவளைத்து மண்டையில் ஏற்றுவார்கள்.
அனுபவங்கள் கற்றுத்தரும் விசயங்களை வேறெதுவும் தர முடியாது. இன்று எதை எதை எப்படிச் செய்வது என்ற தலைப்பில் பல கட்டுரைகளும் புத்தகங்களும் வெளிவருகின்றன (Type 'how to' in google search bar and wait 2 secs). எப்படி வேலை செய்வது? என்றே பல புத்தகங்கள் உள்ளன. புதிய வேலைக்கு போகும் ஆர்வத்தில் இந்த புத்தகத்தைப் படித்தேன். பல விசயங்கள் தெரிந்ததுதான்; அனாலும், கேரன் சில சாதாரண விசயங்கள் கூட எப்படி உங்களை மேலேற்றும் என்று விளக்குகிறார். குறிப்பாக உங்கள் மேசையை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு ஃபார்முலாவில் விளக்குகிறார்.
மொத்தம் 60 ஃபார்முலாக்கள் இப்புத்தகத்தில் தரப்பட்டுள்ளது. புது வேலையில் எப்படி இருக்க வேண்டும், சக ஊழியர்களிடம் எப்படி இருக்க வேண்டும், தொடர்புகளை எப்படி உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் விரிவாக தந்துள்ளார். என்றுமே தொடர்புகள் தமாக உருவாவதில்லை, நீங்கள் தான் உருவாக்குகிறிர்கள். மற்றவர்களை வேலைவாங்குவது எப்படி, கூட்டங்களில் எப்படி பேச வேண்டும், விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது என்றும் சொல்கிறார்.
60 ஃபார்முலாக்களும் உங்களுக்கு பயன் தருபவையே. உங்கள் வேலையில் பல்வேறு கட்டங்களில் கடைபிடிக்க வேண்டியவையே. ஆனால், ஒரு சேர படித்தால் அசதி தான் வருகிறது. ஒரே மாதிரி வார்த்தைகளே அனைத்திலும் பயன்படுத்தியிருக்கிறார்கள். அங்கங்கே சில எழுத்துப் பிழைகளும் உள்ளன. வழக்கமாக கிழக்கு பதிப்பகத்தின் சிறப்பான அட்டை வடிவமைப்பு இதில் இல்லை. மொத்தமாக எதோ 'Rule Book' போல உள்ளது.