Thursday, September 2, 2010

முத்தொள்ளாயிரம் - என். சொக்கன்



தலைப்பு: முத்தொள்ளாயிரம்
ஆசிரியர்: பெயர் தெரியவில்லை
புரியும்படி: என். சொக்கன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம்
 விலை: ரூ. 150




தமிழ் செய்யுள்களையும் இலக்கியங்களையும் பள்ளியில் மட்டுமே படித்திருக்கிறேன். அதுவும் கோனார் தமிழ் உரை உதவியதில் சீர் பிரித்துப் படிக்கக் கூட கற்றுக்கொள்ளவில்லை. கோனாரைச் சொல்லிக் குற்றமில்லை. எல்லாம் என்னுடைய சோம்பேறித்தனம். சரி சுயபுராணத்தை விட்டுவிட்டு இந்த மூவேந்தர் புராணத்தைப் பார்க்கலாம்.

முத்தொள்ளாயிரம், இந்த தமிழ் நூலைப் பற்றி ஏராளமான தகவல்கள் இணையம் முழுதும் கிடைக்கின்றன. மொத்தம் 110 வெண்பாக்கள் உள்ளன (சிலர் 109 வெண்பாக்கள் என்கிறார்கள்). அனைத்தும் சேர, சோழ, பாண்டியரைப் பற்றிய வெண்பாக்கள். ஒரு புலவரே மூன்று அரசர்களைப் பற்றியும் எழுதியிப்பாரா என்பது சந்தேகமே. வேறு வேறு புலவர்கள் வெவ்வேறு காலங்களில் எழுதியிருக்காலாம். இந்தப் பாடல்கள் புறத்திரட்டு என்னும் தொகுதியில் இருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. (மேற்ப்படி தகவல்களூக்கு சில சுட்டிகளை பதிவின் இறுதியில் தந்திருக்கிறேன்.)

பெரும்பாலான பழந்தமிழ் நூல்களைப் போல இதுவும் அரசர்களின் சிறப்புகளை பல உவமைகளைக் கொண்டு சொல்லியிருக்கிறார்கள். முத்தொள்ளாயிரத்தில் பெரும்பாலும் காதற் பாடல்களே உள்ளன. புலவர்கள் தங்களை ஒரு பெண் போல பாவித்துக் கொண்டு இந்தப் பாடல்களை எழுதியுள்ளார்கள். இப்படி எழுதுவதை கைக்கிளை என்கிறார்கள். இந்தப் புத்தகத்தின் காலம் தெரியாவிட்டாலும், அக்காலத்தில் இருந்த பழக்கவழக்கங்களை இந்நூல் மூலம் அறிய முடிகிறது. என் மூளைக்கு எட்டிய சில விஷயங்களை சுருக்கமாக பகிர்ந்து கொள்கிறேன்.

பெரும்பாலும் அனைத்துப் பாடல்களுமே உவமையோடு தான் எழுதியிருக்கிறார்கள். அவற்றில் பல ஆச்சரியங்கள். எனக்கு பிடித்த ஒரு உவமை. சோழன் வீதியில் வருவதைக்காண பெண்கள் தங்கள் வீட்டு சன்னல் அருகே நிற்கிறார்கள். சோழனைத் தேடும் அவர்களின் கண்கள், வலையில் சிக்கிய மீன்கள் அலைபாய்வதைப் போல் பாய்கிறதாம்.

முத்தொள்ளாயிரக் காலத்தில் கடவுள் வழிபாடு இருந்திருக்கிறது. சிவபெருமானைப் பற்றிய பாடல் இதில் உள்ளது. அரசர்களை முருகனுக்கு ஒப்பாகச் சொல்லியிருக்கிறார்கள். ஒரு பாடலில் இந்திரனும் வருகிறான். ஒரு பாடலில் கடவுளுக்கு விலங்குகளை பலி கொடுக்கும் வழக்கம் சொல்லப்பட்டிருக்கிறது. முருகனைப் பற்றிக் கூறுகையில் ஒரு பாடலில் கோழிக்கொடி ஏந்தியிருப்பவன் என்று வருகிறது. நமக்குத் தெரிந்தவரை முருகன் ஏந்திக்கொண்டிருப்பது சேவற்க் கொடி. ‘கோழி’ என்ற சொல் ஆண்பாலையும் குறிக்கிறதா? இல்லை முருகனின் வேல் மாறிவிட்டதா? தெரியவில்லை.

இந்தக் காதலில் விழுவது என்பது எல்லாக் காலங்களிலும் துன்பம் தான் போலும். எனக்கு அதில் எந்த அனுபவமும் இல்லை. ஆனால், முத்தொள்ளாயிரம் படித்தவுடன் அவர்கள் சொல்வது சரிதானா என்று சோதிக்கத் தோன்றுகிறது. அந்தந்த ஊர்ப் பெண்கள், அவர்களின் அரசர்களின் மீது அநியாயத்திற்கு ஆசை கொள்கிறார்கள் (அந்த ஊர் ஆண்கள் அய்யோ பாவம்!). அரசனைக் கண்டவுடன் அவர்கள் நெஞ்சம் அவன் பின்னாலேயே போய்விடுகிறது. இல்லை இவர்களே நெஞ்சைத் தூதாக அனுப்பிவிடுகிறார்கள். அப்படிப் போன ஒரு நெஞ்சம், பாண்டியனின் வாயிலில், தன் இடுப்பில் கை வைத்துக்கொண்டு அவனிடம் பேச காத்து நிற்கிறதாம். இன்னொருத்தியின் நெஞ்சம், யாருக்கும் போக வர வழி கொடாமல் பாண்டியனின் வாயிலில் நிற்கிறதாம். (என்னுடைய மூளை தான் சில நேரங்களில் வேலை செய்வது போல் தெரியவில்லை. எங்காவது போய் வருகிறதோ?)

அப்புறம் சொக்கனைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். அட! இவர் எந்த ஊர் ராஜாவா? இவர் தான் முத்தொள்ளாயிரத்திற்கு ‘புரியும் படி’ உரை எழுதியிருக்கிறார். நம்மை மூன்று நாடுகளூக்கும் தோளில் கைப்போட்டுக் கொண்டு அழைத்துச் செல்கிறார். ஒவ்வொரு வார்த்தைக்கும் நம் மண்டையில் ஏறும் படி விளக்கம் தருகிறார்; சப்பரம் தெரியாமல் தவிக்கும் குழந்தைகளை தோளில் தூக்கிக் காண்பிக்கும் அப்பாமார்கள் போல (ஆகா! எனக்கும் கூட உவமை எழுத வருகிறதே!). சொக்கன் ஒருவரையும் விடுவதில்லை. வீட்டில் அடைபட்டுக் கிடக்கும் மகளுக்கும் அவள் தாய்க்கும் என்ன பிரச்சனை என்று விசாரிக்கிறார். காதல் வயப்பட்டிருக்கும் பேதைகளிடம் போய் விசாரிக்கிறார். யானைகளிடம் கூட பேச்சுக் கொடுக்கிறார். சரி மனிதர் ஏதோ நல்லது செய்கிறார் என்று அவர் பின்னால் போனால், போர்களத்திற்குள் இழுத்துக் கொண்டு போய் பேய்களையும் பிணங்களையும் அறிமுகப்படுத்தி வைக்கிறார். முத்தொள்ளாயிரத்தைப் பற்றிய ஒரு முன்னுரையை மட்டும் எழுத மறந்துவிட்டார் போலும். அதை விரைவில் வரப்போகும் இரண்டாம் பதிப்பில் சேர்த்துவிடுவார் என்று நம்புவோம்.

இந்தப் புத்தகம் மற்ற பழந்தமிழ் நூல்களையும் படித்து புரிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை ஏற்ப்படுத்தியிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் சொக்கனின் நகைச்சுவை கலந்த எழுத்துக்கள் தான். புத்தகத்தை வடிவமைத்தவருக்கு தாராளான மனம் போலும். எழுத்துக்களை கொட்டி அடைக்காமல், விசாலமாக வடிவமைத்திருக்கிறார்.

மேற்படி தகவல்களுக்கு:

Friday, August 13, 2010

நொட்டாங்கை


இந்தா, இத அவர்கிட்ட கொடு...
இந்தாங்க...
ஏல! எப்பவும் இடதுகைதானா? வலது கையால கொடுடா...
என்னங்க, தம்பிக்கு இடதுகை பழக்கமா? எனக்கு கூட இடதுகை பழக்கம் தான் (அவருக்கு அவ்வளவு சந்தோஷம்)... தம்பிக்காக அஞ்சு ரூபா குறைச்சுக்கறேன்.
ஐம்பது ரூபா ஜால்ராவுக்கு அஞ்சு ரூபா தள்ளுபடி; நம்ம லேண்ட்மார்க் மாதிரி 10% தள்ளூபடி. அந்த தம்பி நாந்தேன், அப்புறம் அந்த கடை மதுரையில் எதோ ஒரு ரத வீதியில் இருக்கு. அதுவரைக்கும் எனக்கு மட்டும் தான் அப்படி ஒரு பழக்கம் இருக்குன்னு நினைத்திருந்தேன். ஒவ்வொரு வருஷமும் ஆகஸ்ட் 13ம் தேதி இடதுகை பழக்கமுடையவர்கள் தினம் கொண்டாடுகிறார்கள் (யார் கொண்டுகிறார்கள் என்பது தெரியவில்லை, யாராவது நல்ல புத்திசாலி வியாபாரியா இருக்கலாம்). அந்த வாய்ப்பை நானும் பயன்படுத்திக்கிறேன். அதுக்காகத்தான் இந்த பதிவு.
நான் முதலில் குச்சி பிடிச்சு எழுத ஆரம்பிச்ச அப்போ, இடது கையால் எழுத ஆரம்பிச்சேன். அம்மா குச்சியை பிடுங்கி வலது கையில் கொடுத்தாங்க. கொஞ்ச நேரம் வலது கையில் எழுதிட்டே இருப்பேன்; எப்படித்தான் மாறுமோ தெரியாது, ஆனா இடதுகைக்கு குச்சி மாறிடும். எங்க மைதிலி டீச்சர், அதான் எங்க எல்.கே.ஜி டீச்சர், முதல்ல திட்டினாங்க; அப்புறம் அடிச்சாங்க. ஆனா என்னால மாத்திக்கவே முடியல. சரி எப்படியோ தொலைஞ்சு போன்னு எல்லாரும் விட்டுட்டாங்க.
இந்த இடதுகை பழக்கம் எதனால் வருதுன்னு ஏகப்பட்ட பேர் ஆராய்ச்சி பண்ணியிருக்காங்க. ஒரு பிரபலமன தியரிப்படி, நம்ம மண்டைக்குள்ள மூளை மூளை அப்படின்னு ஒன்னு இருக்குமாம். அது வலது பக்கம் இடது பக்கம்னு இரண்டு பிரிவா இருக்குமாம். இடது பக்க ஆதிக்கம் அதிகமா இருந்தா வலதுகை பழக்கமும், வலது பக்க ஆதிக்கம் அதிகம் இருந்தா இடதுகை பழக்கமும் வருமாம். இதனால எனக்கு மூளை இருக்குங்கிறதையும், அதுல ஒரு பகுதியாவது வேலை செய்யுதுங்கறதையும் நீங்க மறுக்க முடியாது.
இன்னொரு தியரிப்படி அம்மாவோட தொப்பைகுள்ள இருக்கும் போது எந்த கை நம்ம வாய்க்கு பக்கத்தில் இருக்குகோ அந்த கை பழக்கம் வருதாம். இன்னொருவர் கரு உருவாகும் போது  அதிக டெஸ்டோஸ்டீரோன் சுரந்தால்  இடது மூளை அவ்வளவா வளராதுன்னு சொல்றார். அதனால வலது மூளை ஆதிக்கம் அதிகமாயிடுமாம். அப்புறம் வழக்கமா சொல்லற ஒரு பதில். எல்லாமே டி.என்.ஏ-க்கு ள்ள தான் இருக்குனு சொல்லிட்டு, இப்போ இருக்கா  இல்லையான்னு  ஆராய்ச்சி  பண்ணறாங்க. (நன்றி: விக்கிபீடியா)
நான் சுமார் 99% வேலைகளை இடதுகையால் தான் செய்கிறேன்; சாப்பிடுவது தவிர. சிலர் சாப்பாட்டையும் இடதுகையால் சாப்பிடுவதை பார்த்திருக்கிறேன். சிலர் சில வேலைகளுக்கு மட்டும் இடதுகையை பயன்படுத்துவார்கள். ஓர் எளிய உதாரணம், சச்சின். சச்சின் இடதுகையால் எழுதுவார்; ஆனால், வலதுகையால் தான் பந்துவீசுவார். சிலர் வேண்டுமென்றே இடதுகை பழக்கத்திற்கு மாறுவார்கள். டென்னிஸ் வீரர் ரபேல் நாடல், அப்படி மாறியவர் தான். பெரும்பாலும் அனைத்து வீரர்களும் வலதுகை வீரர்களை எதிர்த்தே பயிற்சி செய்வார்கள். அப்படி பயிற்சி செய்தவர்களுக்கு எதிராக இடதுகையில் ஆடுவது லாபம்.
இடதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு சங்கடங்கள் இருக்கிறது. பெரும்பாலும் எல்லா உபகரணங்களும் வலதுகை பழக்கத்தை மட்டுமே மனதில் கொண்டு அமைக்கப்படுகின்றன. கத்திரிக்கோல், கம்ப்யூட்டர் மவுஸ்,  கதவு தாழ்பாழ், இப்படி நிறைய சொல்லலாம். இதெல்லாம் மற்றவர்கள் சொல்லி எனக்கு தெரிய வந்ததே தவிர, எனக்கு ஒரு போதும் இவை சங்கடமாக தெரியவில்லை. எல்லா பொருட்களும் வலதுகை பழக்கத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்படுவதால், இடதுகை பழக்கம் உள்ளவர்கள் அதிகமாக விபத்தில் சிக்குகிறார்கள்.
ஆனால், இந்த பழக்கம் ஒரு நல்ல அடையாளம். எங்க வகுப்பில் ஒரே உயரத்தில், கிட்டதட்ட ஒரே நிறத்தில் இரண்டு நடராஜன் இருந்தபோது நான் லெப்ட்நடராஜன் ஆனேன். அதற்கு முன்னால் சிறிய வகுப்பில் என் பேர் நொட்டாங்கை (இந்த நொட்டாங்கையும் பீச்சாங்கையும் எப்படி எங்கிருந்து வந்ததுன்னு தெரிஞ்சவங்க கண்டிப்பா சொல்லுங்க!). நான் இடதுகையில் எழுதுவதை ரொம்ப ஆச்சரியமா பார்த்தவங்க, நிறைய பேர். சிலர் நான் இடதுகையில் எழுதுவேன்னு சொன்னதும் அப்படியா? நீ வலமிருந்து இடம் எழுதுவியா?’ ன்னு கேப்பாங்க; அதாவது உருது எழுதற மாதிரி. எழுதிக்காமிச்ச பிறகுதான் அவங்களுக்குச் சந்தேகமே தீரும்.
இடதுகையால் எழுதுவதில் எந்த ஒரு கஷ்டமும் இல்ல. ஆனா, சில சூழ்நிலைக் கஷ்டங்கள் மட்டும் இருக்கு. என் வகுப்பில் ஒருவரோ இருவரோ தான் அப்படி இருப்பார்கள். சராசரியா நூறு பேர் இருக்கற வகுப்பில் அதுவே அதிகம். ஒரு பெஞ்சில் ஆறு பேர் உட்கார வேண்டும். நான் இடதுபக்க ஓரத்தில் உட்காரவில்லை என்றால், கண்டிப்பா பக்கத்தில் உள்ளவனின் (வலதுகையால் எழுதுபவர்) முழங்கையும் என் முழங்கையும் இடிக்கும். இரண்டு பேரும் சரியா எழுத முடியாது. அரசியலில் நாற்காலி போல, பள்ளிக்கூடத்தில் பெஞ்சு ஓரத்துக்கு அத்தனை போட்டி இருக்கும். அதை அடைய அதிக சாமர்த்தியம் வேணும். நான் எழுதும் போது ஒவ்வொரு வரியும் எனக்கு செங்குத்தா தான் எழுதுவேன்; அதுக்கு ஏத்தாப்புல காகிதத்தை திருப்பி வச்சுப்பேன்.
ஒரு முறை பரீட்டையில் நான் வலது பக்க ஓரமா உட்கார்ந்திருந்தேன், இடதுபக்கம் இன்னொருத்தன். மேற்பார்வைக்கு வந்தவர், அவர் பெயர் என்னமோ இருந்துட்டு போகுது. நாங்க அவரை செல்லமா சதுக்க பூதம்னு தான் கூப்பிடுவோம் (சதுக்க பூதம், சிலப்பதிகாரத்தில் ஒரு பாட்டில் வருகிறது). அவருக்கு நான் அந்த பையனுக்கு உதவி செய்கிறேனோன்னு ஒரு சந்தேகம். மனுஷன் கேள்வியால் துளைத்துவிட்டார்; பரீட்டையே எழுதவிடவில்லை.
ஒரு தடவை ஏதோ கல்யானமோ காதுகுத்தோ? ஒரு வீட்டுக்கு போயிருந்தோம். அங்க, இடதுகையால பானையில் இருந்து தண்ணீர் எடுத்துக் குடிச்சேன். அங்க வந்த ஒரு அம்மா 'Don't you have manners?' அப்படின்னு கேட்டாங்க. அப்போ நான் அஞ்சாப்பு படிச்சிட்டிருந்தேன்; ‘manners’ அப்படின்னா என்னனு தெரியாது. எதோ அவங்ககிட்ட இல்லாதத கேக்கறாங்கன்னு நெனச்சுக்கிட்டேன். எனக்கு ரொம்ப பிடிச்ச வேலை, பந்தி பரிமாறுவது. சில பேர், இடதுகையால சாதம் போட்டா நான் சாப்பிட மாட்டேன்னு சொல்லியிருக்காங்க. சிலர், என்னோட இடதுகை பழக்கத்த சொன்னவுடன், ‘அப்படின்னா பரவாயில்லை! தாராளமா பரிமாறுன்னு சொல்லியிருக்காங்க.
கடைசியா ஒரு விஷயத்தோட முடிச்சுக்கறேன். இடதுகை பழக்கமுடைய நிறைய பிரபலங்கள், சாதனையாளர்கள் இருங்காங்க. அதனால், எல்லா இடதுகை பழக்கம் உள்ளவங்களும் அப்படித்தான் புத்திசாலியா, திறமைசாலியா இருப்பாங்கன்னு ஒரு நம்பிக்கை உலகம் பூராவும் பலருக்கு இருக்கு. என்னைப் பார்த்த பிறகு சிலர் அந்த நம்பிக்கையை மாத்திகிட்டிருக்காங்க. நீங்க எப்படி?

Wednesday, July 28, 2010

22 வருடங்கள்

இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவீர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்
தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா.
                                                       - மகாகவி சுப்பிரமணிய பாரதியார்


இன்னிக்கி பிறந்த நாள்; எனக்கு தான். போஸ்டர் ஒட்டி கொண்டாடற அளவுக்கு தம்பிப் படையெல்லாம் இல்லாததால நானே அறிவிச்சுக்கறேன். நான் பொறந்து இருபத்தி ரெண்டு வருஷம் முடிஞ்சாச்சு. இது ஏழு கழுத வயசா, இல்ல எட்டு கழுத வயசான்னு தெரியல. யாருக்காவது தெரிஞ்சா கண்டிப்பா சொல்லுங்க.

22 வயசுல எதைப் பண்ணினாலும் உலகமே உத்துப்பாக்கற அளவுக்கு சாதிச்சவங்க மத்தியில நான் ஒன்னும் பண்ணிடல (அதான் எல்லாருக்கும் தெரியுமே). என்னிக்காவது ஒரு நாள் இந்த உலகம் என்னையும் மதிச்சு திரும்பி பார்க்கும்னு ஒரு நம்பிக்கை மட்டும் இருக்கு. ஒன்னாங்கிளாஸ் படிச்சப்ப கோமாளி வேஷம் போட்டேன், எனக்கு ரொம்ப பொறுத்தமா இருந்ததுன்னு முதல் பரிசு கொடுத்தாங்க. ஒரு திருக்குறள் போட்டில பரிசு கிடைச்சுது. அப்புறம், ஒன்னுத்துக்கும் பிரயோஜனம் இல்லாத சான்றிதழ்கள், சில ப்ளாஸ்டிக் டப்பாக்கள் சம்பாதித்தேன் (எல்லாம் பரிசா கிடைச்சது தான்!).

இதுவரைக்கும், இது எனக்கு வேணும்னு ஒரு விஷயத்துக்கு கூட உழைச்ச நினைவில்லை. எல்லாம் அதுவா அமைஞ்சது தான். ஒடிப் போய் ஒரு பஸ் கூட பிடிச்சதில்லை. இந்த பஸ் இல்லாட்டி அடுத்த பஸ்; இந்த முறை இல்லாட்டி அடுத்த முறை. இது ஒரு தாரக மந்திரமாவே ஆயுடுச்சு.  கோட்டையைப் பிடிக்கும் ஆசை மட்டும் இன்னமும் இருக்கிறது. கூடவே நிறைய கவலையும் (எல்லாம் இந்த உலகத்தப் பற்றிதான்). நானே எதிர்பார்க்காம நடந்த சில விஷயங்கள், +2ல ஸ்கூல் பர்ஸ்ட் வந்தது; இயந்திரவியல் படிச்சது.

சின்ன வயசுல யாரவது கேட்டா, 'நான் டாக்டர் ஆகப் போறேன்'ன்னு சொல்லுவேன். கம்ப்யூட்டர் பார்த்து வாய் பொளந்த நாளில் 'கம்ப்யூட்டர் எஞ்சினியர் ஆவேன்'ன்னு பிதற்றிக் கொண்டிருந்தேன். பிளஸ் 2 படிக்கும் போது பயோடெக்னாலஜி படிக்கனும்னு ஆசை வந்தது. அண்ணா பல்கலைகழக கவுன்சிலிங்கில் உட்கார்ந்த பிறகுதான் நான் இயந்திரவியல் படிக்கப்போறேன்னு தெரிஞ்சது. இப்போ யாராவது என்கிட்ட வந்து ' நீ அடுத்து என்ன செய்யப் போற?'ன்னு கேட்டா கண்டிப்பா நான் முழிக்கத்தான் செய்வேன்.

இது கால்-வாழ்க்கை குழப்பமா கூட இருக்கலாம் (அதான் Quarter-Life Crisis). ஒரு சமயம் எல்லாமே சாத்தியமா தெரியுது. அடுத்த சமயம் எதோ பொந்துக்குள்ள இருப்பது போல இருக்கு. வெளில வந்துடலாம்னு ஒரு நம்பிக்கையும் கூடவே இருக்கு. அதனால் பிரச்சனையில்லை.

அடுத்த வருடம் பார்க்கலாம் எவ்வளவு மாறியிருக்கிறேன் என்று.

Sunday, May 9, 2010

புத்துணர்ச்சியில் மூழ்கிடுங்கள் - லிம்கா புதிய விளம்பரம்



கள்ளத்தனமாய் கண்கள் பேச
ஏதேதோ செய்து என்னை வீழ்த்த
குளிர்ந்து போனேன்
சிலிர்த்து நின்றேன்
மீண்டும் என்னை சீண்ட வாயேன்
உள்ளிருக்கும் ஆசைகள்
உடைந்து கொண்டு பாயாதோ?
சாரல் தொட்ட பூவைப் போல
காலைப் பனியின் கனவுக்குள்ளே
கலந்து நாமும் கரைந்து போவோம் வா
சின்ன சின்ன சீண்டல்களில்,
என்னைக் கொஞ்சம் கொல்வாயா?

Sunday, April 4, 2010

யானைக் காதல்

உண்மைதான். காதல், எப்போது? எப்படி? தொடங்கும் என்பதை அறியவே முடியாது. தொடங்கியதாகவே தெரியவில்லை;ஆனால், என் கூடவே காதலும் வளர்ந்திருக்கிறது. அப்போது எனக்கு ஐந்துவதிருக்கும், யானையை நேரில் பார்த்திருக்கவில்லை. ஆனால், அவர்கள் வீட்டு மரயானை ஏனோ பிடித்திருந்தது. அழுகையின் பலம் எல்லையற்றது. காலமும் இடமும் கைக்கொடுத்தால் அழுகை வரலாறுகள் படைக்கும். அழுதேன், அடம்பிடித்தேன் அவர்கள் மரயானை என்னுடையதானது.

எழுத்தாளர் எஸ்.ரா  சொல்வது போல் யானைகள் ஒரு மகாமெளனம் ஊர்வது போலவே இருக்கின்றன. யானைகள் எப்போதும் ஒரு ஆழ்ந்த தியானத்தை கொள்கின்றன. தெய்வத்தின் குரலில் மகாபெரியவர் யானைகள் எத்தனை பார்த்தாலும் அலுக்காது என்கிறார். பாரதிக்கு யானைதான் நண்பனே. குழந்தைகள் முதல் முதியவர் வரை யானை என்று சொன்னலே சிலிர்க்கிறார்கள். தெய்வத்தின் படைப்பில் காய்கறி முதல் கரப்பான்பூச்சி வரை நமக்கு ஏதாவது பிடிக்காமல் போகின்றன. விதிவிலக்கு, நிலவும் யானையும்.

தொருவில் யானை வரும்போது, ஏதோ ஒரு பழைய நண்பன் வருவதைப் போலவே உணர்கிறேன். சிறு வயதில் யானையின் சாணத்தை மிதித்து விளையாடுவோம். அதன் நார்நாரன சாணம் பாதத்தில் ஒரு குறுகுறுப்பை ஏற்ப்படுத்தும். நாங்கள் தூங்கினால் எழுப்புவதற்கு நெல்லையப்பர் கோயில் யானைதான் வரவேண்டும் என்று எங்கள் தந்தை விளையாட்டாய்ச் சொல்வதுண்டு. சமீபத்தில் குருவாயூர் ஆநத்தாவளத்திற்கு சென்றுவந்தோம். ஒரே இடத்தில் அத்தனை யானைகளைப் வெவ்வேறு வயதில், வண்ணத்தில் பார்த்தோம். அவை ஏதோ ஒரு இசைக்கு ஆடிக்கொண்டே இருக்கின்றன.

யானையை ஆனை என்னும் போது எதோ ஒரு குழந்தைகள் குறிப்பதுபோல் அழகாக உள்ளது. ஆனைகள் ஏதாவது சுட்டித்தனம் செய்துகொண்டே இருக்கின்றன; கொஞ்சம் பெரிய குழந்தைகள். அவை எதையோ நினைத்து சிரித்துக்கொண்டிருக்கின்றன. ஆனைகள் அழகான படைப்பு; எந்தப் பக்கம் பார்த்தாலும் ஒருவித முழுமை தெரியும். எனக்கு யானையின் பின் அழகுதான் பிடிக்கும். யானைகளின் ஆட்டம் அலாதியானது. அத்தனை பெரிய உடம்பை லாவகமாக அசைப்பது அவற்றுக்கு மட்டுமே சாத்தியம்.

புனிதமாகக் கொண்ட பொருட்களை நம்மிடமிருந்து ஏதோ ஒரு தொலைவிலேயே வைத்துவிடுகிறோம். முதற்கடவுளாகவும் புத்தனாகவும் காண்பதால்தான் என்னவோ அதனழகை பலரும் கவனிப்பதில்லை. எங்கள் தொருவுக்கு யானை வந்தபோது, எதிர் வீட்டுப் பாட்டி அதன் ரோமத்தை மழித்துத் தரமுடியுமா? என்று பாகனிடம் கேட்டுக்கொண்டிருந்தாள். அத்தனை பெரிய யானைக்கு எப்படிச் சவரம் செய்வார்கள் என்று யோசித்தேன். பின்பு பேரம் படியாததால் யானை போய்விட்டது. பல வருஷமாக எங்கள் பாட்டி ஒரு யானைப் பல் வைத்திருந்தாள்; தலைவலி, பல்வலிக்கு தேய்த்துக்
கொள்வதற்கு. அப்பல்லிற்கு குறைந்தது ஐம்பது வயதிருக்கும். பார்ப்பதற்கு ஒரு பாறைத் துண்டம் போலவே இருக்கும்.

அத்தனை மகாஜந்துவையே ஆட்டிவைக்கிறான் மனிதன் என்கிறார்கள். யானைகள் எட்டணாவை வாங்கிக்கொண்டு சலாம் போடும் அர்ப பிராணி இல்லை. உண்மையில் அவை ஒரு பண்டிதனைப் போல் நடந்துகொள்கின்றன. அதன் வால் பலத்திற்குக்கூட நம் பலம் ஈடாகுமா என்பது சந்தேகம்தான். அகந்தை சிறிதும் இல்லாமல் மிகப் பொறுமையுடன் தன்னைவிட தாழ்ந்த மனிதன் சொல்கேட்டு நடக்கின்றன. அவை கோபம் கொண்டால் என்ன நடக்கும் என்பது நமக்கு நன்றாகவே தெரியும்.

யாரையாவது வாழ்த்த வேண்டுமானால் 'யானையைப் போல் வாழ்' என்றாலே போதும். நெல்லைப் பக்கங்களில் காத்திகை தினத்தன்று பெண்கள் யானை விளக்கு ஒன்று ஏற்றுவார்கள். தன்னுடைய சகோதரன் யானைக்கு நிகரான பலம், அறிவு, வாழ்நாள் போன்றவை கொண்டு வாழ வேண்டியே யானை விளக்கை ஏற்றுகிறார்கள்.

புண்ய அத்மாக்கள் எல்லாம் யானையாய் பிறக்குமோ என்று ஒரு சந்தேகம்.

எனக்கும் கூட ஒரு நாள் ஆனையாய் மாறிவிட ஆசைதான்.

குருவாயூரிலும் திருச்செந்தூரிலும் என் அண்ணன்(கிஷோர்) எடுத்த வீடியோ.




Sunday, March 7, 2010

நீங்க பள்ளிகூடத்துக்கு போகும்போது அழுதிருக்கீங்களா?


நீங்க பள்ளிகூடத்துக்கு போகும்போது அழுதிருக்கீங்களா?
நான் ரொம்ப அழுத்தில்ல.
இன்னிக்கி காலேல ஒரு குட்டி பொண்ணு அழுதுட்டே பள்ளிக்கூடத்துக்குப் போச்சு. கூடவே ஒரு அம்மா ஒரு குச்சியோட; அடி விழுந்துறுக்கும்ன்னு நெனக்கிறேன். 
அனேகமா எல்லா குழந்தைக்கும் பள்ளிக்கூடம் பிடிக்கறதில்ல. என் அண்ணா பையன் பள்ளிக்கூடம் போகாம இருக்க என்னென்னமோ காரணம் சொல்லரான்.
எங்க வீட்ல நான் நல்லா படிக்கனும்னு ஆசை. ஏதோ என்னால முடிஞ்சவரைக்கும் படிச்சேன். எட்டு மணிநேரம் காத மட்டும் திறந்துவச்சுட்டு ஒக்காந்திருக்கனும். வரலாறு, அறிவியல், புவியியல் என்னென்னமோ மாறி மாறி வரும். எனக்கு கணக்கு மட்டும் தான் பிடிக்கும். பன்னிரென்டாம் வகுப்புலேந்து கல்லூரி வரைக்கும் புடிக்காத பாடம்னா தூங்கிடுவேன். ஆட்டு மூளை, தவளை இதயம்; இதெல்லாம் எதுக்கு படிக்கறேன்னு தெரியாமலெயெ படிச்சாச்சு.
பள்ளிக்கூடம் ஜெயில் மாதிரிதான்; என்ன மேஜை, கரும்பலகை, மாணவர்கள்(கைதிகள்), ஆசிரியர்(காவலர்) இதெல்லாம் இருக்கும். யோசிக்கவும் மாட்டாங்க, யோசிக்கவிடவும் மாட்டாங்க. அச்சிட்டதெல்லாம் உண்மை; ஆசிரியர் சொன்னா எல்லாமே சரி; ரெட்டகோடு நோட்ல பக்கம் பக்கமா எழுதனும் (எவ்வளவு எழுதியும் என் கையெழுத்து மாறவேயில்ல).
பேசக்கூடாது, சிரிக்ககூடாது, புன்னகைக்க கூடாது; இதெல்லாம் ரொம்ப தப்பு. தப்புபண்ணினா பிரம்பு பிஞ்சிரும். நான் சிரிச்சதுக்கெல்லாம் அடி வாங்கியிருக்கேன். லீடருக்கு உங்கள புடிக்கலைனா அவன் வேற போட்டுக்கொடுப்பான்.
பள்ளியில் ரொம்ப மோசமானது ஒப்பிடுதல். நம்மள எல்லாத்தோடும் எல்லாரோடும் ஒப்பிடுவாங்க. நீ குள்ளமா இருக்க; குண்டா இருக்க; நீ முட்டாள்; அவன் புத்திசாலி. சம்பந்தமே இல்லமா ஒப்பிடிவாங்க; சச்சினையும் உசேன் போல்டையும் ஒப்பிடற மாதிரி முட்டாள்தனம்தான் பள்ளியில நடக்குது.
உங்களுக்கு பள்ளியப் பத்தி சுகமான ஞாபகங்கள் இருக்கலாம். என்னோட பள்ளிப்பருவத்தில நான் அனுபவிச்சது ரொம்ப கம்மிதான். அந்த பருவத்தில குறுக்கப்பட்ட எண்ணங்களை மாற்றுவது கஷ்டமா இருக்கு. பள்ளிக்கூட நண்பர்கள் யாருடனும் இப்போ தொடர்பு அவ்வளவா இல்லாதது வருத்தமா இருக்கு.
பள்ளிக்கூடத்துக்கு போய்த்தான் கத்துக்கனும் ஒன்னும் இல்ல. உங்க குழந்தைகள் பள்ளிக்கு போக விரும்பலென்னா தயவுசெஞ்சு கட்டாயப் படுத்தாதீங்க.
வாழ்க்க நெறிய கத்துக்கொடுக்கும்...

Saturday, February 6, 2010

வேலையில் முன்னேற!




தலைப்பு: வேலையில் முன்னேற சக்ஸஸ் ஃபார்முலா
எழுத்தாளர்: டாக்டர் கேரன் ஓடாஸோ
தமிழில்: ஆக்குலர் ரவி
பதிப்பகம்: கிழக்கு பதிப்ப்பகம் 
விலை: ரூ.125
மேலும் விபரங்களுக்கு...

இது கார்பரேட் நிறுவனங்களின் காலம். மிகப் பிரம்மாண்டமான கட்டிடங்கள், அதிகமான ஊழியர்கள் இவை மட்டுமே கார்பரேட்களின் அடையாளம் இல்லை. அவர்களின் தொழில்முறை, செயல்முறை, அணுகுமுறை, போன்ற பலவும் முறைப்படுத்தப்பட்டவை. எல்லோருக்குமே ஒரு கார்பரேட் கனவு இருக்கிறது. அரசியல் கட்சிகள் முதல் அப்பள வியாபாரிகள் வரை தங்கள் நிறுவனங்களை ஒரு கார்பரேட் போல நடத்தவே முனைகிறார்கள். சந்திரபாபு நாயடு, தனது கட்சியையும் ஆட்சியையும் ஒரு கார்பரேட்டின் தலைமை அதிகாரி போன்றே நடத்தினார் என்பார்கள் (இரண்டுமே மோசமாக வீழ்ந்தன). இந்தியாவில் மென்பொருள் கார்பரேட் நிறுவனங்களில் வேலை பார்க்க அத்தனைப் போட்டி.
இப்போது கார்பரேட் என்பது ஒரு கனவுக் கூடாரம், உள்ளே நுழைய பலரும் பிரியப்படுகிறார்கள். ஆனால், உள்ளே பல கனவுகள் அடையாளமற்றுப் போகின்றன. ஆனால், பல கனவுகளை, முதற்க் கனவான நிறுவனத்தின் லட்சியத்தோடு இணையச் செய்வதில் தான் கார்பரேட்களின் வெற்றி அடங்கியுள்ளது.
டாக்டர் கேரன் ஓடாஸோ எழுதிய The Truth About Managing Your Career என்ற புத்தகத்தை கிழக்கு பதிப்பகம் 'வேலையில் முன்னேற சக்ஸஸ் ஃபார்முலா' என்ற தலைப்பில் தமிழில்  வெளியிட்டுள்ளது; ஆக்குலர் ரவி மொழி பெயர்த்துள்ளார். புதிதாக வருபவர்கள் தங்கள் நிறுவனங்களைப் பற்றி அறிந்துகொள்ளவும், அவர்களின் தயக்கத்தைப் போக்கவும் 'Corporate Induction' என்று ஒரு பயிலரங்கம் நடத்துவார்கள். கல்லூரி முடித்து நிறுவனங்களில் சேர்பவர்கள் தங்களை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்று பேருரையே நிகழ்த்துவார்கள். என்ன உடை உடுத்த வேண்டும்? எப்படி உடுத்த வேண்டும்? டை கட்டுவது எப்படி? பெல்ட் போடுவது எப்படி? என்று புறத் தோற்றத்தைப் பற்றி சொல்லுவதோடு, மற்றவர்களிடம் நீங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் கற்பிப்பார்கள். சுருக்கமாகச் சொல்லுவதானால் "இத்தனை நாள் நீ மனுசனா இருந்துட்ட, இனிமே அப்படி இருக்காத",  இதை சுற்றிவளைத்து மண்டையில் ஏற்றுவார்கள்.
அனுபவங்கள் கற்றுத்தரும் விசயங்களை வேறெதுவும் தர முடியாது. இன்று எதை எதை எப்படிச் செய்வது என்ற தலைப்பில் பல கட்டுரைகளும் புத்தகங்களும் வெளிவருகின்றன (Type 'how to' in google search bar and wait 2 secs). எப்படி வேலை செய்வது? என்றே பல புத்தகங்கள் உள்ளன. புதிய வேலைக்கு போகும் ஆர்வத்தில் இந்த புத்தகத்தைப் படித்தேன். பல விசயங்கள் தெரிந்ததுதான்; அனாலும், கேரன் சில சாதாரண விசயங்கள் கூட எப்படி உங்களை மேலேற்றும் என்று விளக்குகிறார். குறிப்பாக உங்கள் மேசையை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு ஃபார்முலாவில் விளக்குகிறார்.
மொத்தம் 60 ஃபார்முலாக்கள் இப்புத்தகத்தில் தரப்பட்டுள்ளது. புது வேலையில் எப்படி இருக்க வேண்டும், சக ஊழியர்களிடம் எப்படி இருக்க வேண்டும், தொடர்புகளை எப்படி உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் விரிவாக தந்துள்ளார். என்றுமே தொடர்புகள் தமாக உருவாவதில்லை, நீங்கள் தான் உருவாக்குகிறிர்கள். மற்றவர்களை வேலைவாங்குவது எப்படி, கூட்டங்களில் எப்படி பேச வேண்டும், விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது என்றும் சொல்கிறார்.
60 ஃபார்முலாக்களும் உங்களுக்கு பயன் தருபவையே. உங்கள் வேலையில் பல்வேறு கட்டங்களில் கடைபிடிக்க வேண்டியவையே. ஆனால், ஒரு சேர படித்தால் அசதி தான் வருகிறது. ஒரே மாதிரி வார்த்தைகளே அனைத்திலும் பயன்படுத்தியிருக்கிறார்கள். அங்கங்கே சில எழுத்துப் பிழைகளும் உள்ளன. வழக்கமாக கிழக்கு பதிப்பகத்தின் சிறப்பான அட்டை வடிவமைப்பு இதில் இல்லை. மொத்தமாக எதோ 'Rule Book' போல உள்ளது.