"நான் ஏன் பிறந்தேன்?"
இந்தக் கேள்வியை நீங்கள் எத்தனை முறை உங்ககிட்டயே கேட்டிருப்பீங்க. நான் சண்ட போடும் போதெல்லாம் அம்மாகிட்ட "என்ன ஏன் பெத்த?”ன்னு கேட்பேன்; ரொம்ப முட்டாள்தனமான கேள்வி. ஒங்க வாழ்க்கை சரியா போறவரைக்கும் இந்த கேள்வியெல்லாம் தோனாது. சிலருக்கு எப்பவுமே தோனாது. வாழ்க்கை நீங்க நெனச்ச மாதிரி போலைனா, அப்ப வர்ற முதல் கேள்வியே இதுதான்.
அந்த கேள்விக்கு பதில் கடைக்கறதுக்குள்ள வேற கேள்வியெல்லாம் தோணும். "ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது?", "என்ன ஒருத்தரும் மதிக்க மாட்டேங்கறாங்களே ஏன்?", இப்படியே கேட்டுட்டே போய் கடைசியா "இப்படி ஒரு வாழ்க்க வாழறதுக்கு செத்துபோலாமா?" -ன்னு தோனும். இதுக்கெல்லாம் பதில்?
கடவுள் உங்கள, இங்கவுள்ள இடத்த நிரப்பரதுக்காக படைக்கல. இங்கவுள்ள சொத்து சுகத்தையெல்லாம் அனுபவிக்க மட்டும் படைக்கல. அப்பறம் எதுக்கு, இந்த ஊரில, இந்த தெருவுல, நீங்க பிறக்கனும்? உங்கள சுத்தியுள்ள யாரோ ஒருத்தருக்கோ இல்ல பலருக்கோ உதவி செய்யதான் உங்கள படைச்சிருக்கனும். அது உங்க அப்பா அம்மாவா இருக்கலாம்; உங்க பக்கத்து வீட்டுகாரரா இருக்கலாம்; உங்க கூடபிறந்தவங்களா இருக்கலாம்; வந்த இல்ல வரப்போற துணையா இருக்கலாம்; உங்க குழந்தையாகூட இருக்கலாம்.
எனக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கை என்னும் விளக்கை பாதுகாத்து;
இன்னும் பிரகாசமாக அடுத்த தலைமுறைக்கு அளிப்பதற்கே நான் உழைக்கிறேன்.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
இதையெல்லாம் யோசிக்கத் தூண்டினது ஒரு சிறுகதையும் அதை தழுவி வந்த ஒரு திரைப்படமும். 1943ல பிலிப் வான் டோரன் (Philip Von Doren) எழுதிய The Greatest Gift ங்கற சிறுகதை தான் அது. பின்னர் 1946ல Frank Capra அதை தழுவி It’s A Wonderful Life ன்னு ஒரு படம் இயக்கினார்.
ஜார்ஜுக்கு மேற்படிப்ப முடிச்சிட்டு உலகத்த சுத்தனும் ஆசை. ஆனா, கிளம்பும்போது அவனோட அப்பா இறந்துவிடுகிறார். குடும்ப தொழில ஜார்ஜ் பார்த்துக்கனும்; இல்லாட்டி சொத்தெல்லாம் ஒரு பேராசைக்காரன்ட போயிடும். எப்படியாவது இந்த தொழில இருந்து விடுபடனும் ஜார்ஜ் நினைக்கிறான். ஆனா, முடியல. அதுக்குள்ள அவன் விரும்பின பெண்னையே கல்யாணம் செய்துக்கறான். குடும்பத்தோடு அதே ஊரில வளமா இருக்கான்.
ஒரு நாள் தொழில்ல நஷ்டம் ஏற்பட்டதால வாழ்க்கையை வெறுத்து தற்கொலை பண்ணிக்கப்போறான். அப்ப ஒரு தேவதை அவனை தடுத்து என்ன ஏதுன்னு விசாரிக்குது. தன்னோட கஷ்டத்த சொல்லி "நான் ஏன் பிறந்தேன்?"ன்னு தேவதைகிட்ட சண்டை போடறான். தேவதை அவன் பிறக்காமலே இருந்தால் அவனைச் சுற்றியுள்ளவங்க எப்படி கஷ்டப்படறாங்கன்னு காமிக்குது. அப்பதான் ஜார்ஜ் தான் எவ்வளவு அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கோம்ன்னு புரிஞ்சிக்கரான்.
It’s A Wonderful Life ஒரு நல்ல திரைப்படம். மிக எளிமையான, அதேநேரம் நேர்த்தியான திரைக்கதை; படம் முழுதாகவே இழையோடும் நகைச்சுவை இருப்பதோடு மட்டுமில்லாமல், வாழ்க்கை எவ்வளவு அற்புதமானது என்று புரியவைக்கிறது. முடிந்தால் நீங்களும் இந்தப் படத்தைப்பாருங்கள்.
நம்முடைய வாழ்க்கையும் அற்புதமானதுதான்.