சிறுவயதில் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும்போது ஏதோ ஒரு புரியாத ஆர்வம் உருவானதுண்டு. அஞ்சல் அட்டை, சிகரேட் போன்ற சிலவற்றின் விலை உயர்வைத் தவிர வேறெதுவும் அப்போது மூளைக்கு எட்டியதில்லை. லொட்டு-லொசுக்கு வரிகள், அந்நிய முதலீடுகள், வளர்ச்சி விகிதம் இதெல்லாம் எண்களாகமட்டுமே புரிந்தன.
இப்போது பட்ஜெட் உரை, ஏதோ அரசியல் சொற்பொழிவு போலவே இருக்கிறது. பெரிய தொழிலதிபர்கள், வலமும் இடமும் தலையாட்டிக் கொண்டே பட்ஜெட்டைக் காண்கிறார்கள். அவர்களுக்கு திருப்தியில்லை. ஆம்! யானைகள் பொறி உருண்டைகளில் திருப்தியடைவதில்லை.
சாதாரண மக்களின் வாழ்க்கையில் இந்த பட்ஜெட் தாக்கத்தை ஏற்ப்படுத்துமா?
சமீபகாலத்தில் (தோராயமாக இரண்டு வருடம்) இரண்டு மாறுதல்கள் மிகவும் வெளிப்படையாகவே தெரிகிறது. திருநெல்வேலியில் வசிக்கும் போதும், சிலமுறை பெங்களூருவுக்கும் சென்னைக்கும் சென்று வந்ததில் பெருநகரங்களிலும் சிறுநகரங்களிலும் ஏற்ப்பட்டுள்ள மாறுதல்களை ஒப்பிட முடிகிறது.
சிறுநகரங்களில் இப்போது உணவுக் கடைகள் பெருகிவருகின்றன. மக்கள் குடும்பமாகவே வியாபாரத்தில் ஈடுபடுகிறார்கள். பெரும்பாலும் வடையும் இட்லியும் விற்க்கிறார்கள். பெண்கள் சமயலை கவனித்துக்கொள்ள, ஆண்கள் வாடிக்கையாளரைக் கவனிக்கிறார்கள். லாபம் பெரிதாக இல்லையென்றாலும், அவர்கள் கூலி வேலைக்குப் போனபோது கிடைத்ததைவிடச் சற்று கூடுதலாகவே கிடைக்கிறது. பெண்களும் சமையல் வேலையென்பதால் எளிதாக ஈடுபடுகிறார்கள். மேலும் சிலர், மளிகைச் சாமான்களை மொத்தமாக வாங்கி, வீட்டிலேயே விற்க்கிறார்கள். ஏற்கனவே இருக்கும் பெட்டிக்கடைகளும் தற்போது விஸ்தரிப்பு செய்யப்பட்டுள்ளன. இச்சிறுவணிகர்கள், தற்போது கூடுதல் தெம்போடு இருக்கிறார்கள்.
பெருநகரங்களிலும் இதைப்போன்று கடைகளும் உணவகங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இந்நகரங்களில் குவியும் மக்களைக் குறிவைத்து பெரிய நிறுவனங்கள் சில்லறை வியாபாரத்தில் இறங்கியுள்ளன. சுண்டியிழுக்கும் விளம்பரங்கள், குளிருட்டப்பட்ட வெளிகள், மற்ற கடைகளைவிட மலிவு விலை போன்ற பல விசயங்களால் மக்கள் அவர்கள் பக்கம் குவிகிறார்கள். அவர்களை குற்றம் சொல்ல முடியாது. லாபம் உள்ள இடத்தில் வாங்குவது தானே புத்திசாலித்தனம்.
இப்போது, சில்லறை வியாபாரத்தில் அந்நிய முதலீட்டை அதிகரிக்கப்போகிறார்கள். Walmart போன்ற சர்வதேச சில்லறை வியாபாரிகள் இந்தியாவின் நகரங்களை நோக்கி படையெடுக்கிறார்கள். இவர்களிடம் தாக்குப்பிடிக்கமுடியாமல் சாதாரண சில்லறை வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். பெருநகரங்களில் பிழைப்புக்காக சென்று கடைகள் நடத்துபவர்களுக்கும் அங்குவேலைக்குச் சென்றவர்களுக்கும் இவர்களின் வரவால் கஷ்டகாலம்தான்.
இடையில்ஒருமாற்றுச்சிந்தனை:
இவ்விசயத்தை நண்பர் ஸ்டீபன்தங்கராஜிடம் விவாதித்துக் கொண்டிருந்தபோது அவர் வேறொரு கோணத்தில் பதிலளித்தார்.
"இந்தியாவின் மக்கள்தொகை அதிகம். அந்நிய நிறுவனங்கள் எவ்வளவு முயன்றாலும் அவர்களால் வெகு சிலரையே போய்ச் சேர முடியும். அதிலும் சாதாரண குடும்பங்கள், பெருபாலும் பற்றுவரவுக் கணக்கு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது அந்நிய நிறுவனங்களில் முடியாது. மேலும் அந்நிறுவனங்கள் பெருநகரங்களைத் தாண்டிவரத் தயங்குகிறார்கள். இதனால் சிறுவணிகர்களுக்கு பாதிப்புகள் மிகவும் குறைவு."
ஸ்டீபனின் கருத்தை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நம்மால் முடிந்த ஒரு விசயம், சிறுவணிகர்களை ஆதரிப்பது. நாம் மாதாமாதம் வாங்கும் பொருட்களில் ஒரு பகுதியை இச்சிறுவணிகர்களிடம் வாங்கினால், அவர்களுக்கு உதவியாக இருக்கும். இதனால், நமக்கு எந்த நஷ்டமுமில்லை.
இப்புத்தகம் ஒரு நாவலாக மட்டும் இல்லை, வாழ்வியல் தத்துவங்கள் சிதறிக் கிடக்கும் ஒரு நூல். வோல்ட்டேர், ஒருவரையும் விட்டுவைக்கவில்லை. அரசர்கள், பாதிரியார்கள், ஜமீந்தார்கள், மக்கள் என அனைவரின் குரூரபுத்தியையும் போட்டுடைக்கிறார். கேண்டீட் என்ற இளைஞனின் தேடலின் கூடவே மனிதர்களின் மடத்தனத்தையும் பேராசையையும் அதன் விளைவுகளையும் கூறும் வோல்ட்டேர், இறுதியில் வாழ்வைத்தாங்கும் தத்துவத்தையும் கூறுகிறார்.
துரத்தப்படுகிறான் கேண்டீட். போகும் இடமெல்லாம் விதி அவனைச் சக்கையாய் பிழிந்தெடுக்கிறது. தன் காதலி, குரு போன்றவர்களை மாறி மாறிப் பிரிகிறான். காதலிக்காகவே பயணப்படுகிறான். செல்லும் இடமெல்லாம் போர், மதப்பேய்கள், பேராசை கொண்ட மக்கள் என்று பலரையும் அவன் எதிர்கொள்ளும் போது நமக்கும் கொஞ்சம் கொஞ்சமாக உலகத்தை புரியவைக்கிறார் வோல்ட்டேர். வாழ்க்கையில் நண்பர்களின் தேவையை ககாம்போவும் மார்டினும் உணரச்செய்கிறார்கள். அறிவுரைகளைத் தருவதற்கு பாங்க்லாஸ்சும் கிழவியும் இருக்கிறார்கள்.
போர்களைப்பற்றிப் படித்திருக்கிறோம். மன்னர்களின் ஆளுமை, அவர்களின் படைபலம், தளபதிகளின் தோள்பலம், வீரர்களின் வாள்பலம், மந்திரிகளின் குள்ளநரித்தனம், வாரிசுகளின் கையாலாகாத்தனம், என்று பலவற்றை படித்திருக்கின்றேன். ஆனால் போர்களின் போது அந்நாட்டுப் பெண்களின் நிலைபற்றி படித்ததில்லை. இந்நாவலில் வோல்ட்டேர் பெண்களின் நிலையை விரிவாகக் கூறுகிறார். பேரழகி குனிகொண்டெயும் கிழவியும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைக் கூறும்போது, ஆண்களின் மோகவெறி எத்தனைக் கொடுமையென்பது புரிகிறது. பணக்காரர்களும் மதத்தின் பெயரால் மக்களை ஆள்பவரும் பேரழகி குனிகொண்டெயை அடையத்துடிக்கிறார்கள். வோல்ட்டேர், இவர்களின் முகத்திரைக் கிழித்தெரிகிறார்.
எல் டொராடோ என்று ஒரு நாட்டுக்கு கேண்டீடும் ககாம்போவும் செல்கிறார்கள். ஆங்கிலத்தில் Utopia என்று கூறுவார்கள். Utopia என்பது ஒரு கற்பனை நகரம். Utopia - வில் அனைத்துமே மிகச் சரியாக இருக்கும். அதேபோல் எல் டொராடோவிலும் எல்லாம் மிகச் சரியாக உள்ளது. எல் டொராடோவின் அமைப்பையும் அழகையும் விவரிக்கும் போதே நமது கற்பனை விரிகிறது. தெருவில் கிடக்கும் வைரங்கள், இலவச ராஜபோக விருந்து, பிரிவினை இல்லாமை இப்படி ஒரு நாடா? ஆச்சரியம்தான். "எங்கள் மஞ்சள் களிமண் உங்கள் ஐரோப்பியர்களுக்கு என்ன சந்தோஷத்தை தருகிறது என்று எனக்குக் கொஞ்சம் கூடப் புரியவில்லை" என்று எல் டொராடோவின் மன்னர் கூறுகிறார். அவர் கூறும் மஞ்சள்மண் வேறொன்றுமில்லை தங்கம் தான். இப்படி ஆங்காங்கே சந்தோஷதையும் துக்கத்தையும் மாறி மாறி கேண்டீட் அனுபவிக்கிறான்.
இந்நாவலில் பல விஷயங்கள் மனதைப் பதற வைக்கின்றன. கேண்டீட் பல்கேரியர்களிடம் அனுபவிக்கும் கொடுமை, குனிகொண்டே, கிழவி அனுபவிக்கும் கொடுமை, பாங்க்லாஸ் அனுபவிக்கும் கொடுமை போன்று பல விஷயங்கள் இருந்தாலும் என்னை மிகவும் பதறவைத்தது இதுதான். தங்கள் கரும்பு ஆலைகளில் வேலைபார்க்கும் கறுப்பர்களுக்கு ஆங்கிலேயர்கள் கொடுக்கும் தண்டணை. அந்தக் கறுப்பன் "ஐரோப்பாவில் நீங்கள் சர்க்கரையைச் சாப்பிடுவதற்கான விலை இதுதான்" என்பான். என்ன கொடுமை இது?
இந்நாவலில் இரண்டு தத்துவவாதிகள் வருகிறார்கள். ஒருவர் பாங்க்லாஸ், மற்றோருவர் மார்டின். பாங்க்லாஸ் 'எதுவும் இப்போது இருப்பதைவிடச் சிறப்பானதாக இருக்க முடியாது' என்பார். ஆனால், மார்டினோ இதற்கு நேர்மாறான கொள்கயைக் கொண்டவர். என்னால் பாங்க்லாஸை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் பாங்க்லாஸோ தான் துன்பப்படும் போதுகூட தன்னுடைய கொள்கையை விடவில்லை. முதலில் பாங்க்லாஸின் தத்துவத்தை ஏற்கும் கேண்டீட், ஒரு கட்டத்தில் அவரது கொள்கையை துறக்கிறான். காதலியும் செல்வமும் தன்னைவிட்டுப் போன சமயத்தில் கேண்டீட் மார்ட்டினைச் சந்திக்கிறான்.
மனத் தடுமாற்றத்துடன் இருக்கும் கேண்டீடுக்கு ஆதரவாகவும் உற்ற நண்பனாகவும் மார்டின் அமைகின்றான். குனிகொண்டேயைக் காண அவர்கள் பயணிக்கும் போது ஒரு தத்துவ விவாதமே நடத்துகிறார்கள். மார்டின் கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது. வோல்ட்டேர் தன்னுடைய கருத்துக்களை மார்டின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் என்றே தோன்றுகிறது. மார்டின் கேண்டீடிடம் பிரான்ஸைப் பற்றிக் கூறும்போது, 'பிரான்ஸில் ஒரே குழப்பம். அது அனைத்து குப்பைகளும் நிறைந்த இடம்' என்கிறான். இவ்வளவு கடுமையான விமர்சனத்தை தன் நாட்டின்மீது வைக்கிறார் வோல்ட்டேர். (அவரை எப்படி விட்டுவைத்தார்களென்று தெரியவில்லை. நம் நாட்டில் இப்போது இப்படியெல்லாம் சொன்னால் புடைத்துவிடுவார்கள்).
பிரான்ஸில் நடக்கும் நாடகங்களையும் மக்களையும் அவர் சாடியிருக்கிறார். பிரான்ஸில் கேண்டீட் சந்திக்கும் மனிதர்களை பணத்துக்காக அலைபவர்களாகவும் ஏமாற்றுக்காரர்களாகவும் சித்தரித்துள்ளார். பிரான்ஸில் கேண்டீட் ஏமாற்றப்படுவதாகவே வோல்ட்டேர் சித்தரித்துள்ளார். அப்போதெல்லாம் அவனுக்கு மார்டினின் அறிவுரையே உதவுகின்றன. பிரான்ஸிலிருந்து அவர்கள் இங்கிலாந்துக்குச் செல்கிறார்கள். வோல்ட்டேர் ஆங்கிலேயர்களையும் முட்டாகள் என்கிறார்.
பொகோகுராண்டே பிரபு. கேண்டீட் உலகில் சந்தோஷமாக இருப்பவர்களைக் காண என்னுகிறான். அப்படியொருவர் தான் பொகோகுராண்டே பிரபு. வெனீஸ் நகரின் பணக்காரர். அவரிடம் எல்லமே இருக்கின்றன. ஆனால் அவருக்கு எதிலும் திருப்தியில்லை, எதுவும் சந்தோஷம் அளிக்கவில்லை. அவரிடமுள்ள ஓவியங்களை விமர்சித்தார். பிரபுவிடம் மிகச் சிறந்த நூல்கள் இருந்தன. அவை எதுவுமே தன்னை மகிழ்விக்கவில்லை என்றார் அவர். அனைத்தையும் விமர்சிப்பதில் தான் அவருக்கு மகிழ்ச்சியே. இக்கதாபாத்திரமும் வோல்ட்டேரின் கருத்துக்களையே கூறுவதுபோல் தோன்றுகிறது.
இறுதியில் கேண்டீட், தன் காதலி, ககாம்போ, கிழவி, பாங்க்ஸால், மார்டின் அனைவருடனும் கான்ஸ்டாண்டிநோபிளில் குடியேறுகிறான். ஆயினும் அவர்களது தத்துவ விவாதங்கள் முடியவில்லை. உலகில் நடக்கும் விஷயங்கள் அவர்களைக் கவலை கொள்ளச் செய்கின்றன. இறுதியில் ஒரு வயதானவரின் மூலமாக அவர்கள் சந்தோஷத்தின் மூலத்தை காண்கிறார்கள்.
இப்புத்தகத்தை மொழிபெயர்ப்பு செய்த பத்ரிக்கு பாரட்டுக்கள். ஒர் சிறந்த இலக்கியத்தை மிகவும் அவசியமான நேரத்தில் வெளிக்கொண்டு வந்திருக்கிறார். இப்புத்தகத்தின் அட்டைகளையும் அறிமுகத்தையும் எடுத்துவிட்டு, ஒருவரிடம் படிக்கக் கொடுத்தால், இது மொழிபெயர்க்கப்பட்டது என்று அவர் நம்புவது கடினம். எளிதான சொற்கள், நறுக்கென்று வசனங்கள் போன்றவை வாசிப்பதற்கு நெருடலை ஏற்படுத்தாமல் உள்ளது. சுவாரசியமான விஷயங்களைக் (மூலத்திலிருந்து) குறைக்காமலும் மற்ற இடங்களில் சுருக்கியும் அளித்திருப்பது படிப்பதற்கு விறுவிறுப்பாக உள்ளது.
போர்களின் வக்கிரத்தையும் எல் டொராடாவின் அழகையும் விவரித்திருப்பது அருமை. கதாபாத்திரங்களின் உரையாடல்கள் அனைத்துமே சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. சில தத்துவ வசனங்களை மிக நன்றாக மொழிமாற்றம் செய்திருக்கிறார், பத்ரி. மார்டின் பேசுவதாகக் கூறப்பட்டுள்ள வசனங்கள் அனைத்துமே என்னைக் கவர்ந்தன. (விமர்சனத்தின் தொடக்கத்தில் தரப்பட்டுள்ளது கேண்டீடுக்கும் மார்டினுக்கும் நடக்கும் விவாதமே.) ஐரோப்பவிலுள்ள மத சம்பந்தமான பெயர்களுக்கான விளக்கங்களை அடிக்குறிப்பில் தந்திருக்கிறார்கள். சில ஐரோப்பிய பெயர்களை தமிழில் வாசிப்பதற்கு கடினமாக உள்ளது. அவற்றை ஆங்கிலத்திலும் தந்திருக்கலாமோ என்று எனக்கு தேன்றுகிறது. அளவுகளைக் குறிக்கும் சொற்களான பவுண்ட், லீக் போன்றவைக்குப் பதிலாக நாம் வழக்கத்தில் குறிக்கும் கிலோ, மீட்டர் போன்ற சொற்களைக் பயன்படுத்தியிருக்கலாம்.
கதையில் வரும் பாத்திரங்கள் அனைவருமே துன்பங்களை அனுபவித்துள்ளார்கள். யார் அதிகம்? யார் குறைவு? என்று ஆராய்ச்சி செய்யவேண்டியதில்லை. ஒரு நூலின் சிறப்பம்சமே அது எத்தனை பேரை பாதிக்கிறது என்பதில் தான் உள்ளது. 250 ஆண்டுகளுக்கு முன் ஒரு நல்ல நோக்கத்துடன் எழுதப்பட்ட இப்புத்தகம், எத்தனை பேரை பாதித்துள்ளது என்று தெரியவில்லை. ஆனால், அதே நோக்கம் சிறிதும் மாறாமல் பத்ரி மொழிமாற்றம் செய்துள்ளார்.
மனிதன் என்ற மிருகம், நாளுக்கு நாள் தன் ஆசைகளை வளர்த்துக் கொண்டு செல்கிறான். உலகிலுள்ள சிறந்தவை அனைத்தும் தனக்கே சொந்தமாக வேண்டும் என்று கனா வளர்க்கிறான். அவற்றை அடைவதற்காக சில கோமாளித்தனங்களையும் பல முட்டாள்தனங்களையும் செய்யத் துணிகிறான். சிலவற்றைச் செய்தும்விடுகிறான். அவற்றின் விளைவுகளைப் பற்றி அவன் சிந்திப்பதே இல்லை. இவற்றையெல்லாம் சரி செய்வதற்கு விஞ்ஞானமோ மருத்துவமோ தேவையில்லை. சக உயிர்களிடத்தில் அன்பும் கருணையுமே போதும்.
விவாதங்கள் எத்தகயை பயன்களை தரும்? ஒன்றுமேயில்லை என்கிறார், வோல்ட்டேர். சற்று சிந்தித்தால் அவரது கருத்திலுள்ள உண்மை புரியும். நம் நாட்டில் சர்ச்சைகள் ஏற்ப்படும் போதெல்லாம், தொலைக்காட்சிகளில் பல நூறு மணிநேரங்கள் விவாதங்கள் நடத்த்ப்படுகின்றன. காரசாரமான விவாதங்களை ஆர்வமுடன் நாமும் பார்க்கிறோம். ஆனால், பல விவாதங்கள் தீர்வுகளை நேக்கிச் செல்வதைவிட புதிய சர்ச்சைகளையே உருவாக்குகின்றன. அதனால் தான் வோல்ட்டேர் 'நாம் அனைவரும் விவாதம் செய்யாது, வேலை செய்வோம். அது ஒன்றுதான் வாழ்க்கையைத் தாங்கும்படி வாழ வழிவகுக்கும்' என்கிறார்.
ஆனால், உலகத்தைப் பற்றியும் மனிதர்களைப் பற்றியும் இவ்வளவு கவலைப்படும் வோல்ட்டேர், ஏன் அந்தக் கிழவரை இப்படி கூறவைத்தார் என்று தான் புரியவில்லை.