இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவீர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்
தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா.
- மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
இன்னிக்கி பிறந்த நாள்; எனக்கு தான். போஸ்டர் ஒட்டி கொண்டாடற அளவுக்கு தம்பிப் படையெல்லாம் இல்லாததால நானே அறிவிச்சுக்கறேன். நான் பொறந்து இருபத்தி ரெண்டு வருஷம் முடிஞ்சாச்சு. இது ஏழு கழுத வயசா, இல்ல எட்டு கழுத வயசான்னு தெரியல. யாருக்காவது தெரிஞ்சா கண்டிப்பா சொல்லுங்க.
22 வயசுல எதைப் பண்ணினாலும் உலகமே உத்துப்பாக்கற அளவுக்கு சாதிச்சவங்க மத்தியில நான் ஒன்னும் பண்ணிடல (அதான் எல்லாருக்கும் தெரியுமே). என்னிக்காவது ஒரு நாள் இந்த உலகம் என்னையும் மதிச்சு திரும்பி பார்க்கும்னு ஒரு நம்பிக்கை மட்டும் இருக்கு. ஒன்னாங்கிளாஸ் படிச்சப்ப கோமாளி வேஷம் போட்டேன், எனக்கு ரொம்ப பொறுத்தமா இருந்ததுன்னு முதல் பரிசு கொடுத்தாங்க. ஒரு திருக்குறள் போட்டில பரிசு கிடைச்சுது. அப்புறம், ஒன்னுத்துக்கும் பிரயோஜனம் இல்லாத சான்றிதழ்கள், சில ப்ளாஸ்டிக் டப்பாக்கள் சம்பாதித்தேன் (எல்லாம் பரிசா கிடைச்சது தான்!).
இதுவரைக்கும், இது எனக்கு வேணும்னு ஒரு விஷயத்துக்கு கூட உழைச்ச நினைவில்லை. எல்லாம் அதுவா அமைஞ்சது தான். ஒடிப் போய் ஒரு பஸ் கூட பிடிச்சதில்லை. இந்த பஸ் இல்லாட்டி அடுத்த பஸ்; இந்த முறை இல்லாட்டி அடுத்த முறை. இது ஒரு தாரக மந்திரமாவே ஆயுடுச்சு. கோட்டையைப் பிடிக்கும் ஆசை மட்டும் இன்னமும் இருக்கிறது. கூடவே நிறைய கவலையும் (எல்லாம் இந்த உலகத்தப் பற்றிதான்). நானே எதிர்பார்க்காம நடந்த சில விஷயங்கள், +2ல ஸ்கூல் பர்ஸ்ட் வந்தது; இயந்திரவியல் படிச்சது.
சின்ன வயசுல யாரவது கேட்டா, 'நான் டாக்டர் ஆகப் போறேன்'ன்னு சொல்லுவேன். கம்ப்யூட்டர் பார்த்து வாய் பொளந்த நாளில் 'கம்ப்யூட்டர் எஞ்சினியர் ஆவேன்'ன்னு பிதற்றிக் கொண்டிருந்தேன். பிளஸ் 2 படிக்கும் போது பயோடெக்னாலஜி படிக்கனும்னு ஆசை வந்தது. அண்ணா பல்கலைகழக கவுன்சிலிங்கில் உட்கார்ந்த பிறகுதான் நான் இயந்திரவியல் படிக்கப்போறேன்னு தெரிஞ்சது. இப்போ யாராவது என்கிட்ட வந்து ' நீ அடுத்து என்ன செய்யப் போற?'ன்னு கேட்டா கண்டிப்பா நான் முழிக்கத்தான் செய்வேன்.
இது கால்-வாழ்க்கை குழப்பமா கூட இருக்கலாம் (அதான் Quarter-Life Crisis). ஒரு சமயம் எல்லாமே சாத்தியமா தெரியுது. அடுத்த சமயம் எதோ பொந்துக்குள்ள இருப்பது போல இருக்கு. வெளில வந்துடலாம்னு ஒரு நம்பிக்கையும் கூடவே இருக்கு. அதனால் பிரச்சனையில்லை.
அடுத்த வருடம் பார்க்கலாம் எவ்வளவு மாறியிருக்கிறேன் என்று.