தலைப்பு: ரத்தன் டாடா
எழுத்தாளர்: என்.சொக்கன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ.75/-
மனிதர்கள் விசித்திரமானவர்கள். சிறிது பலம், சிறிது பணம், சிறிது கல்வி இருந்தாலே அவர்களைக் கையில் பிடிக்க முடியாது. ஆனால், பெரிய தொழில் நிறுவனத்தின் தலைவர், சிறந்த கல்வி, புகழ் சேர்க்கும் விருதுகள் அனைத்தும் கொண்ட பிறகும் கடுகளவும் கர்வம் இல்லத ஒருவரைக் காண்பது அரிது. பொதுவாக எழுத்தாளர்கள், சாதனையாளர்கள் போன்ற பலருக்கு கர்வம் இருக்கும்; சிலருக்கு இன்னும் அதிகமாக தலைக்கனமே இருக்கும். இவை இல்லாத உயர்ந்த மனிதர்கள் உண்டா?
சிறுவயதில் டாடா-பிர்லா என்றால் இருவரும் ஏதோ சகோதரர்கள் எனவும், இருவரும் இணைந்து தொழில் செய்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். விவரம் புரிய பல வருடங்கள் எடுத்தது. சரி டாடா வேறு; பிர்லா வேறு. ஆனால் யார் இந்த டாடா? கச்சிதமான முகவெட்டும் ஊடுருவும் புன்னகையும் கொண்ட இந்த மனிதர் யார்? இவர் தான் டாடா நிறுவனங்கள் அனைத்தையும் நிறுவினாரா?
அந்த திறமை வாய்ந்த மனிதர் ரத்தன் நவல் டாடா. சுருக்கமாக ரத்தன் டாடா. இந்தியத் தொழிற் துறையின் பீஷ்மர். ஆனால், ஒட்டுமொத்த டாடா குழுமத்தை உருவாக்கியது அவரில்லை. நூற்றாண்டு கண்ட நிறுவனமான டாடா குழுமத்தின் தற்போதைய தலைவர். ஆனால், 1962 ஆம் ஆண்டு அவர் டாடா ஸ்டீலில் ஒரு பயிற்சிபெறும் ஊழியர். ஒரு கடை நிலை ஊழியர், அந்நிறுவனத்தின் தலைவரா? எப்படி? இதை சுவாரசியமான ஒரு புத்தகமாக தந்துள்ளார், என்.சொக்கன்.
1868 -ல் ஜாம்ஷெட்ஜி டாடா தொடங்கிய ஒரு வர்த்தக நிறுவனம் தான் இன்று பல லட்சம் கோடி மதிப்புள்ள டாடா நிறுவனம். மிகத் திறமையான நிர்வாகிகளாலும் கடுமையான உழைப்பினாலும் உயர்த்தப்பட்டதே டாடா நிறுவனம். டாடா குடும்பத்தில் ஒரு நல்ல பழக்கம், அவர்கள் தங்கள் பிள்ளைகளை பொன் குஞ்சாகக் கருதவில்லை. மாறாக திறமையானவருக்கே வாய்ப்புகள் வழங்கப்பட்டது. அமெரிக்கவில் பட்டம் பெற்ற ரத்தன் டாடாவைக் கூட ஒரு பயிற்சியாளராகவே டாடா ஸ்டீலில் சேர்த்துக் கொண்டனர். பல வருடம் தலைவராக இருந்த ஜே.ஆர்.டி டாடா கூட கடை நிலை ஊழியராகவே பணியில் சேர்ந்தார்.
புத்தகம் எதோ ரத்தன் டாடாவைப் பற்றி இருந்தாலும், நூறாண்டு கண்ட டாடா நிறுவனத்தின் வரலாற்றையே விவரமாகத் தருகிறது. இதற்கு எழுத்தாளர் என்.சொக்கனைப் பாராட்டியே தீர வேண்டும். கவனத்தைக் குவித்துப் படித்தால், இரண்டு மணிநேரத்திலேயே புத்தகம் முழுவதையும் படித்துவிடலாம். சொக்கனின் எழுத்து நடை அப்படி..
ஆனால், ரத்தன் டாடா எதிர்கொண்ட பிரச்சனைகளின் தீவிரம் மற்றும் அதை அவர் கையாண்ட விதம் ஆகியவற்றைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அவரே ஒரு புத்தகம் எழுதினால்தான் உண்டு. நிறுவனப் பொறுப்புகளிலிருந்து ஓய்வு பெற்ற பின், ரத்தன் டாடா, வருங்கால நிர்வாகிகளுக்கு வழிகாட்டியாக ஒரு புத்தகம் எழுதுவார் என்று நம்புகிறேன்.
விமர்சனத்துக்கு நன்றி நண்பரே
ReplyDelete- என். சொக்கன்,
பெங்களூர்.
thank you very much Mr.Chokkan
ReplyDelete