Wednesday, October 21, 2009

தினம் தினம் தீபாவளி...



இந்த முறை தீபாவளி நன்றாகவே முடிந்தது. கொஞ்சம் பயணம்; நிறைய பலகாரம். குறைவில்லாமலே முடிந்தது பண்டிகை. ஒரு காலத்தில் அப்பா எவ்வளவு வெடி வாங்கிவந்தாலும் மனம் திருப்தியடைந்ததில்லை. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வெடிப்பதில் நாட்டமில்லை. அது ஏதோ ஹிம்சையாகபடுகிறது. சாஸ்திரத்துக்காக வெடிக்க வற்புறுத்துகிறார்கள், ஆனாலும் வெடிக்கத் தோன்றுவதில்லை.
எத்தனைபேர் தீபாவளியைக் கொண்டாடினார்கள்? சிலருக்கு அது வெடிகளோடு முடிந்துவிடுகிறது; சிலருக்கு மங்கல இசையில் தொடங்கி, சிறப்புத் திரைப்படத்தோடு முடிகிறது. சிலருக்கு பண்டம், சிலருக்கு உடை. ஆனால், சிலரது தீபாவளிகள் என்றுமே முடிவதில்லை. அவர்கள் வாங்கும் கடன்கள் அவர்களுக்கு பண்டிகையை நினைவூட்டிக்கொண்டே இருக்கின்றன. தீபாவளிக்கு முதல்நாள், வெடிக்கடைகளில் உள்ள கூட்டம், அடகு கடைகளிலும் இருந்தது. இவர்களுக்கு, தீபாவளி கடன்களில் தொடங்கி வட்டியில் தொடர்கின்றது.
இவர்களின் வாழ்க்கையில் என்று வரும், வசந்தம். எப்படி வரும் சந்தோஷம்? தெரியவில்லை. 


யாரைக் குறை சொல்வது? ஒருவரைச் சொல்லிக் குற்றமில்லை. கடன் வாங்கியே காலத்தை செலுத்தும் இவர்களின் வாழ்க்கை மாறவேண்டுமானால் என்ன செய்வது? டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை உயர்த்தாலாமா?(அமெரிக்காவில் வறுமை உண்டா?) சீனாவிலிருந்து குறைந்த விலையில் ஜவுளி, பட்டாசு, இனிப்பு எல்லாம் இறக்குமதி செய்யலாமா? திருநெல்வேலியில் கிலோ ரூ.120விற்கும் அல்வாவை சீனா ரூ.15க்கு தரலாம். இல்லை மக்களின் கவலையைப் போக்க 'இலவச சினிமா சீட்டு' திட்டத்தின் மூலம் பண்டிகையன்று ஒரு திரைப்படத்தை பார்க்க வாய்ப்பு தராலாம் (இலவசமா கொடுத்துட்டு டாஸ்மாக்ல விலைய ஏத்திரலாம். கணக்கு கரக்டா வந்துரும்).
இல்லை இந்த மக்களெல்லாம், சோப்பேறிகளா? சம்பாதிப்பதை சேமிக்காமல், தகுதிக்கு மீறி ஆசைப்படுகிறார்களா  ?  இல்லை முட்டாள்களா ? இல்லை இவர்களிடம் மாற்றத்தை கொண்டுவர முடியாத மற்ற அனைவரும் முட்டாள்களா ? தெரியவில்லை.
ஆனால் யோசிக்கிறேன். சில நூறு பேர் அப்படி இருக்கலாம். ஆனால் கோடிக்கணக்கான மக்கள், எப்படி இப்படியே இருக்கிறார்கள்? எங்கோ இடிக்கிறது. இதையெல்லாம் புரிந்து கொள்ள எனக்கு அறிவு போதவில்லை என்றே நினைக்கிறேன்.
நீங்களும் யோசியுங்கள்.மன்மோகன் சிங்கும் சோனியா காந்தியூமே எல்லவற்றையும் யோசித்துக் கொண்டிருக்கமாட்டார்கள். அவர்களுக்கு இதற்கு நேரமில்லாமல் கூட இருக்கலாம்.
யோசியுங்கள்! கண்டிப்பாக ஒரு வழி கிடைக்கும்.


No comments:

Post a Comment