Thursday, March 15, 2012

லூசுத்தனமாக வாழ்க்கை #3

எங்கள் வீட்டில் நாற்காலியை நகர்த்தினால் (இழுத்தால்) கீழ் வீட்டில் இருப்பவர்களுக்கு தூக்கம் கெடுகிறது. சீனத் தொழில்நுட்பத்தாலும், அவர்களின் பொருள் பரப்பும் மேன்மையாலும் பெங்களூரு வரை வந்துவிட்ட அதிபயங்கர சத்தம் எழுப்பும் தொலைப்பேசியை காலை 4 மணிக்கே பயன்படுத்தும் கடைத் தெரு பூக்காரரால் குறைந்தது நாலைந்து வீட்டிலிருப்பவர்களுக்காவது தூக்கம் கெடும் என்று நம்புகிறேன். அதிகாலை 2 மணிக்கு கத்தத் துவங்கி, என்ன செய்தும் நான்கு மணிவரை அடங்காத சுவர்க்கோழி என் தூக்கத்தை கெடுத்தது. தன் வாயால் கெட்டது. செத்தது. ஆக இந்த உலகத்தில் ஒவ்வொரு உயிரினமும் ஏதாவது ஒரு உயிரினத்தின் தூக்கத்தைக் கெடுக்கவே படைக்கப்பட்டிருக்கிறது. நாம் யாருடைய தூக்கத்தையெல்லாம் கெடுக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறதோ, அதைச் செய்து முடித்துவிட்டால் பரமபதம் நிச்சயம்.

இங்கே ஒரு மனிதர் இருக்கிறார். கொஞ்சம் வயதானவர். காலை ஏழு மணிக்கெல்லாம் கீழிருக்கும் ஏதாவது ஒரு கடையில் அவரைப் பார்க்கலாம். பெரும்பாலும் புகைத்துக் கொண்டு இருப்பார். மருந்துக் கடையில் கொஞ்ச நேரம். தையல் கடையில் கொஞ்ச நேரம். பின் எதிர் வரிசையில் இருக்கும் பல்பொருள் கடை. பிறகு அதற்கு அடுத்துள்ள சலூன் பெஞ்ச். இரவு கடையடைக்கும் வரை இப்படி சுற்றிச் சுற்றி வந்து கொண்டேயிருக்கிறார். கடைக்காரர்கள் வீட்டுக்குப் போகச் சொன்னாலும் போவதில்லையாம். அவருக்கு வீடெல்லாம் இருக்கலாம். அங்கு போக பிடிக்காமல் இருக்கலாம். அல்லது இந்தக் கடைத்தெரு பிடித்திருக்கலாம். அல்லது மனிதர்களை தள்ளி இருந்து வேடிக்கை பார்ப்பது பிடித்திருக்கலாம். அவருடைய அனுபவம் எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. ஆனால், அவர் முகத்தப் பார்த்தால் ரொம்ப கஷ்டப்பட்டு பொழுதைக் கடத்துவது மாதி்ரியிருக்கிறது. அந்த மனுஷருக்கு என்ன பிரச்சனையோ?

காலையிலேயே எரிச்சலோடு இருந்தால், அன்று நீங்கள் சந்திக்கும் அனைவரையும் எரிச்சல்படுத்திவிட முடியும். எரிச்சலடைவதற்கு முக்கியக் காரணம், ஒழுங்காக சோறு திங்காதது. அல்லது சரியாகத் தூங்காதது. அல்லது உடம்பில் எங்காவது ஒரு வலி. சின்ன வலியாக இருந்தால் கூடப் போதும். குறிப்பாக கழுத்து வலி முழங்கால் வலி. இதெல்லாம் என்னுடைய வெட்டியாராய்சசின் முடிவுகள். அதனால் எல்லாவற்றுக்கும் எரிச்சல் வந்தால், யார் காரணம் என்று யோசிக்காதீர்கள், நேரே போய் ஒரு மசால் தோசை சாப்பிட்டுவிடுங்கள். அடுத்தது முகத்தை தூக்கி வைத்துக் கொள்பவர்கள் பற்றிய ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.
Come to the edge.
We might fall.
Come to the edge.
It's too high!
Come to the edge!
And they came
And he pushed
And they flew.
- Chirstopher Logue

தைரியம் வந்த சிலர் குதித்துவிடுகிறார்கள; சிலருக்கு இறக்கை முளைத்துவிடுகிறது, பறந்துவிடுகிறார்கள். சிலர், இறக்கை முளைக்கும் முன்பாகவே தரை தொட்டுவிடுகிறார்கள். தைரியம் இல்லாத சிலர், தாமும் ஒரு நாள் குதிப்போம் என்ற நம்பிக்கையில், குதிப்பவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், அல்லது ‘லூசுத்தனமான வாழ்க்கை’ என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

6 comments:

  1. அடி பின்னிட்டீங்க பாஸ்!

    ReplyDelete
    Replies
    1. நான் அடிக்கல பாஸ்! நல்லாப் பாருங்க வேறயாராவது உங்கள அடிச்சிருக்கப் போறாங்க :-)

      Delete
  2. நமக்கு தான் சரியில்ல, அன்று சந்திக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கலாமே

    ReplyDelete
    Replies
    1. அதான் சொல்ட்டேனே மசால் தோசை சாப்டா எல்லாம் சரியாயிடும் :-)

      Delete
  3. மசால் தோசை சாப்பிட்டு ரொம்ப நாள் ஆயிற்று. ஆமாம் ட்விட்டர் 'போர்' ல எங்க உங்கள காணும்?

    ReplyDelete
    Replies
    1. ட்விட்டர்ல வி.ஆர்.எஸ் வாங்கியாச்சு. :-)

      Delete