Sunday, April 4, 2010

யானைக் காதல்

உண்மைதான். காதல், எப்போது? எப்படி? தொடங்கும் என்பதை அறியவே முடியாது. தொடங்கியதாகவே தெரியவில்லை;ஆனால், என் கூடவே காதலும் வளர்ந்திருக்கிறது. அப்போது எனக்கு ஐந்துவதிருக்கும், யானையை நேரில் பார்த்திருக்கவில்லை. ஆனால், அவர்கள் வீட்டு மரயானை ஏனோ பிடித்திருந்தது. அழுகையின் பலம் எல்லையற்றது. காலமும் இடமும் கைக்கொடுத்தால் அழுகை வரலாறுகள் படைக்கும். அழுதேன், அடம்பிடித்தேன் அவர்கள் மரயானை என்னுடையதானது.

எழுத்தாளர் எஸ்.ரா  சொல்வது போல் யானைகள் ஒரு மகாமெளனம் ஊர்வது போலவே இருக்கின்றன. யானைகள் எப்போதும் ஒரு ஆழ்ந்த தியானத்தை கொள்கின்றன. தெய்வத்தின் குரலில் மகாபெரியவர் யானைகள் எத்தனை பார்த்தாலும் அலுக்காது என்கிறார். பாரதிக்கு யானைதான் நண்பனே. குழந்தைகள் முதல் முதியவர் வரை யானை என்று சொன்னலே சிலிர்க்கிறார்கள். தெய்வத்தின் படைப்பில் காய்கறி முதல் கரப்பான்பூச்சி வரை நமக்கு ஏதாவது பிடிக்காமல் போகின்றன. விதிவிலக்கு, நிலவும் யானையும்.

தொருவில் யானை வரும்போது, ஏதோ ஒரு பழைய நண்பன் வருவதைப் போலவே உணர்கிறேன். சிறு வயதில் யானையின் சாணத்தை மிதித்து விளையாடுவோம். அதன் நார்நாரன சாணம் பாதத்தில் ஒரு குறுகுறுப்பை ஏற்ப்படுத்தும். நாங்கள் தூங்கினால் எழுப்புவதற்கு நெல்லையப்பர் கோயில் யானைதான் வரவேண்டும் என்று எங்கள் தந்தை விளையாட்டாய்ச் சொல்வதுண்டு. சமீபத்தில் குருவாயூர் ஆநத்தாவளத்திற்கு சென்றுவந்தோம். ஒரே இடத்தில் அத்தனை யானைகளைப் வெவ்வேறு வயதில், வண்ணத்தில் பார்த்தோம். அவை ஏதோ ஒரு இசைக்கு ஆடிக்கொண்டே இருக்கின்றன.

யானையை ஆனை என்னும் போது எதோ ஒரு குழந்தைகள் குறிப்பதுபோல் அழகாக உள்ளது. ஆனைகள் ஏதாவது சுட்டித்தனம் செய்துகொண்டே இருக்கின்றன; கொஞ்சம் பெரிய குழந்தைகள். அவை எதையோ நினைத்து சிரித்துக்கொண்டிருக்கின்றன. ஆனைகள் அழகான படைப்பு; எந்தப் பக்கம் பார்த்தாலும் ஒருவித முழுமை தெரியும். எனக்கு யானையின் பின் அழகுதான் பிடிக்கும். யானைகளின் ஆட்டம் அலாதியானது. அத்தனை பெரிய உடம்பை லாவகமாக அசைப்பது அவற்றுக்கு மட்டுமே சாத்தியம்.

புனிதமாகக் கொண்ட பொருட்களை நம்மிடமிருந்து ஏதோ ஒரு தொலைவிலேயே வைத்துவிடுகிறோம். முதற்கடவுளாகவும் புத்தனாகவும் காண்பதால்தான் என்னவோ அதனழகை பலரும் கவனிப்பதில்லை. எங்கள் தொருவுக்கு யானை வந்தபோது, எதிர் வீட்டுப் பாட்டி அதன் ரோமத்தை மழித்துத் தரமுடியுமா? என்று பாகனிடம் கேட்டுக்கொண்டிருந்தாள். அத்தனை பெரிய யானைக்கு எப்படிச் சவரம் செய்வார்கள் என்று யோசித்தேன். பின்பு பேரம் படியாததால் யானை போய்விட்டது. பல வருஷமாக எங்கள் பாட்டி ஒரு யானைப் பல் வைத்திருந்தாள்; தலைவலி, பல்வலிக்கு தேய்த்துக்
கொள்வதற்கு. அப்பல்லிற்கு குறைந்தது ஐம்பது வயதிருக்கும். பார்ப்பதற்கு ஒரு பாறைத் துண்டம் போலவே இருக்கும்.

அத்தனை மகாஜந்துவையே ஆட்டிவைக்கிறான் மனிதன் என்கிறார்கள். யானைகள் எட்டணாவை வாங்கிக்கொண்டு சலாம் போடும் அர்ப பிராணி இல்லை. உண்மையில் அவை ஒரு பண்டிதனைப் போல் நடந்துகொள்கின்றன. அதன் வால் பலத்திற்குக்கூட நம் பலம் ஈடாகுமா என்பது சந்தேகம்தான். அகந்தை சிறிதும் இல்லாமல் மிகப் பொறுமையுடன் தன்னைவிட தாழ்ந்த மனிதன் சொல்கேட்டு நடக்கின்றன. அவை கோபம் கொண்டால் என்ன நடக்கும் என்பது நமக்கு நன்றாகவே தெரியும்.

யாரையாவது வாழ்த்த வேண்டுமானால் 'யானையைப் போல் வாழ்' என்றாலே போதும். நெல்லைப் பக்கங்களில் காத்திகை தினத்தன்று பெண்கள் யானை விளக்கு ஒன்று ஏற்றுவார்கள். தன்னுடைய சகோதரன் யானைக்கு நிகரான பலம், அறிவு, வாழ்நாள் போன்றவை கொண்டு வாழ வேண்டியே யானை விளக்கை ஏற்றுகிறார்கள்.

புண்ய அத்மாக்கள் எல்லாம் யானையாய் பிறக்குமோ என்று ஒரு சந்தேகம்.

எனக்கும் கூட ஒரு நாள் ஆனையாய் மாறிவிட ஆசைதான்.

குருவாயூரிலும் திருச்செந்தூரிலும் என் அண்ணன்(கிஷோர்) எடுத்த வீடியோ.
4 comments:

 1. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

  ReplyDelete
 2. யானை ஒரு ஆனந்த வஸ்து. ஈரோட்டில் நாங்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் மற்று அந்த தெருவின் முனையில் இருந்த ஒரு வீட்டிற்கும் யானை வரும். இரண்டு மூன்று நாட்கள் தங்கியிருக்கும். பள்ளிக்குச் செல்லவே மாட்டேன்.

  சமீபத்தில் காஞ்சி சென்றிருந்த போது கூட, கதவைப்பெரியதாகத் திறக்கும் ஓசை, யானை வந்தது. அந்த யானை அருகில் வந்தது. துதிக்கையால் வீல் சேரை தடவி முகர்ந்து விட்டு, என் பின்னே உரசினார்ப்போல் சென்று, ஒரு தேங்காய் நாரை எடுத்து தின்னத் தொடங்கியது.

  ReplyDelete
 3. Watched the videos. Feels heavy now. If I had not known the fact behind, I would have insanely said cute :(:(

  ReplyDelete
 4. அதுங்களுக்கு வேற வழியில்லை... என்ன செய்யும் சொல்லுங்க..

  ReplyDelete