Thursday, September 2, 2010

முத்தொள்ளாயிரம் - என். சொக்கன்



தலைப்பு: முத்தொள்ளாயிரம்
ஆசிரியர்: பெயர் தெரியவில்லை
புரியும்படி: என். சொக்கன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம்
 விலை: ரூ. 150




தமிழ் செய்யுள்களையும் இலக்கியங்களையும் பள்ளியில் மட்டுமே படித்திருக்கிறேன். அதுவும் கோனார் தமிழ் உரை உதவியதில் சீர் பிரித்துப் படிக்கக் கூட கற்றுக்கொள்ளவில்லை. கோனாரைச் சொல்லிக் குற்றமில்லை. எல்லாம் என்னுடைய சோம்பேறித்தனம். சரி சுயபுராணத்தை விட்டுவிட்டு இந்த மூவேந்தர் புராணத்தைப் பார்க்கலாம்.

முத்தொள்ளாயிரம், இந்த தமிழ் நூலைப் பற்றி ஏராளமான தகவல்கள் இணையம் முழுதும் கிடைக்கின்றன. மொத்தம் 110 வெண்பாக்கள் உள்ளன (சிலர் 109 வெண்பாக்கள் என்கிறார்கள்). அனைத்தும் சேர, சோழ, பாண்டியரைப் பற்றிய வெண்பாக்கள். ஒரு புலவரே மூன்று அரசர்களைப் பற்றியும் எழுதியிப்பாரா என்பது சந்தேகமே. வேறு வேறு புலவர்கள் வெவ்வேறு காலங்களில் எழுதியிருக்காலாம். இந்தப் பாடல்கள் புறத்திரட்டு என்னும் தொகுதியில் இருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. (மேற்ப்படி தகவல்களூக்கு சில சுட்டிகளை பதிவின் இறுதியில் தந்திருக்கிறேன்.)

பெரும்பாலான பழந்தமிழ் நூல்களைப் போல இதுவும் அரசர்களின் சிறப்புகளை பல உவமைகளைக் கொண்டு சொல்லியிருக்கிறார்கள். முத்தொள்ளாயிரத்தில் பெரும்பாலும் காதற் பாடல்களே உள்ளன. புலவர்கள் தங்களை ஒரு பெண் போல பாவித்துக் கொண்டு இந்தப் பாடல்களை எழுதியுள்ளார்கள். இப்படி எழுதுவதை கைக்கிளை என்கிறார்கள். இந்தப் புத்தகத்தின் காலம் தெரியாவிட்டாலும், அக்காலத்தில் இருந்த பழக்கவழக்கங்களை இந்நூல் மூலம் அறிய முடிகிறது. என் மூளைக்கு எட்டிய சில விஷயங்களை சுருக்கமாக பகிர்ந்து கொள்கிறேன்.

பெரும்பாலும் அனைத்துப் பாடல்களுமே உவமையோடு தான் எழுதியிருக்கிறார்கள். அவற்றில் பல ஆச்சரியங்கள். எனக்கு பிடித்த ஒரு உவமை. சோழன் வீதியில் வருவதைக்காண பெண்கள் தங்கள் வீட்டு சன்னல் அருகே நிற்கிறார்கள். சோழனைத் தேடும் அவர்களின் கண்கள், வலையில் சிக்கிய மீன்கள் அலைபாய்வதைப் போல் பாய்கிறதாம்.

முத்தொள்ளாயிரக் காலத்தில் கடவுள் வழிபாடு இருந்திருக்கிறது. சிவபெருமானைப் பற்றிய பாடல் இதில் உள்ளது. அரசர்களை முருகனுக்கு ஒப்பாகச் சொல்லியிருக்கிறார்கள். ஒரு பாடலில் இந்திரனும் வருகிறான். ஒரு பாடலில் கடவுளுக்கு விலங்குகளை பலி கொடுக்கும் வழக்கம் சொல்லப்பட்டிருக்கிறது. முருகனைப் பற்றிக் கூறுகையில் ஒரு பாடலில் கோழிக்கொடி ஏந்தியிருப்பவன் என்று வருகிறது. நமக்குத் தெரிந்தவரை முருகன் ஏந்திக்கொண்டிருப்பது சேவற்க் கொடி. ‘கோழி’ என்ற சொல் ஆண்பாலையும் குறிக்கிறதா? இல்லை முருகனின் வேல் மாறிவிட்டதா? தெரியவில்லை.

இந்தக் காதலில் விழுவது என்பது எல்லாக் காலங்களிலும் துன்பம் தான் போலும். எனக்கு அதில் எந்த அனுபவமும் இல்லை. ஆனால், முத்தொள்ளாயிரம் படித்தவுடன் அவர்கள் சொல்வது சரிதானா என்று சோதிக்கத் தோன்றுகிறது. அந்தந்த ஊர்ப் பெண்கள், அவர்களின் அரசர்களின் மீது அநியாயத்திற்கு ஆசை கொள்கிறார்கள் (அந்த ஊர் ஆண்கள் அய்யோ பாவம்!). அரசனைக் கண்டவுடன் அவர்கள் நெஞ்சம் அவன் பின்னாலேயே போய்விடுகிறது. இல்லை இவர்களே நெஞ்சைத் தூதாக அனுப்பிவிடுகிறார்கள். அப்படிப் போன ஒரு நெஞ்சம், பாண்டியனின் வாயிலில், தன் இடுப்பில் கை வைத்துக்கொண்டு அவனிடம் பேச காத்து நிற்கிறதாம். இன்னொருத்தியின் நெஞ்சம், யாருக்கும் போக வர வழி கொடாமல் பாண்டியனின் வாயிலில் நிற்கிறதாம். (என்னுடைய மூளை தான் சில நேரங்களில் வேலை செய்வது போல் தெரியவில்லை. எங்காவது போய் வருகிறதோ?)

அப்புறம் சொக்கனைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். அட! இவர் எந்த ஊர் ராஜாவா? இவர் தான் முத்தொள்ளாயிரத்திற்கு ‘புரியும் படி’ உரை எழுதியிருக்கிறார். நம்மை மூன்று நாடுகளூக்கும் தோளில் கைப்போட்டுக் கொண்டு அழைத்துச் செல்கிறார். ஒவ்வொரு வார்த்தைக்கும் நம் மண்டையில் ஏறும் படி விளக்கம் தருகிறார்; சப்பரம் தெரியாமல் தவிக்கும் குழந்தைகளை தோளில் தூக்கிக் காண்பிக்கும் அப்பாமார்கள் போல (ஆகா! எனக்கும் கூட உவமை எழுத வருகிறதே!). சொக்கன் ஒருவரையும் விடுவதில்லை. வீட்டில் அடைபட்டுக் கிடக்கும் மகளுக்கும் அவள் தாய்க்கும் என்ன பிரச்சனை என்று விசாரிக்கிறார். காதல் வயப்பட்டிருக்கும் பேதைகளிடம் போய் விசாரிக்கிறார். யானைகளிடம் கூட பேச்சுக் கொடுக்கிறார். சரி மனிதர் ஏதோ நல்லது செய்கிறார் என்று அவர் பின்னால் போனால், போர்களத்திற்குள் இழுத்துக் கொண்டு போய் பேய்களையும் பிணங்களையும் அறிமுகப்படுத்தி வைக்கிறார். முத்தொள்ளாயிரத்தைப் பற்றிய ஒரு முன்னுரையை மட்டும் எழுத மறந்துவிட்டார் போலும். அதை விரைவில் வரப்போகும் இரண்டாம் பதிப்பில் சேர்த்துவிடுவார் என்று நம்புவோம்.

இந்தப் புத்தகம் மற்ற பழந்தமிழ் நூல்களையும் படித்து புரிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை ஏற்ப்படுத்தியிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் சொக்கனின் நகைச்சுவை கலந்த எழுத்துக்கள் தான். புத்தகத்தை வடிவமைத்தவருக்கு தாராளான மனம் போலும். எழுத்துக்களை கொட்டி அடைக்காமல், விசாலமாக வடிவமைத்திருக்கிறார்.

மேற்படி தகவல்களுக்கு:

2 comments:

  1. விமர்சனத்துக்கு நன்றி நண்பரே.

    - என். சொக்கன்,
    பெங்களூரு.

    ReplyDelete
  2. Thanks and I have a tremendous offer you: Where Is Charlotte Church House Renovation custom home remodeling

    ReplyDelete