‘இந்தா, இத அவர்கிட்ட கொடு...’
’இந்தாங்க...’
‘ஏல! எப்பவும் இடதுகைதானா? வலது கையால கொடுடா...’
‘என்னங்க, தம்பிக்கு இடதுகை பழக்கமா? எனக்கு கூட இடதுகை பழக்கம் தான் (அவருக்கு அவ்வளவு சந்தோஷம்)... தம்பிக்காக அஞ்சு ரூபா குறைச்சுக்கறேன்.’
ஐம்பது ரூபா ஜால்ராவுக்கு அஞ்சு ரூபா தள்ளுபடி; நம்ம லேண்ட்மார்க் மாதிரி 10% தள்ளூபடி. அந்த தம்பி நாந்தேன், அப்புறம் அந்த கடை மதுரையில் எதோ ஒரு ரத வீதியில் இருக்கு. அதுவரைக்கும் எனக்கு மட்டும் தான் அப்படி ஒரு பழக்கம் இருக்குன்னு நினைத்திருந்தேன். ஒவ்வொரு வருஷமும் ஆகஸ்ட் 13ம் தேதி இடதுகை பழக்கமுடையவர்கள் தினம் கொண்டாடுகிறார்கள் (யார் கொண்டுகிறார்கள் என்பது தெரியவில்லை, யாராவது நல்ல புத்திசாலி வியாபாரியா இருக்கலாம்). அந்த வாய்ப்பை நானும் பயன்படுத்திக்கிறேன். அதுக்காகத்தான் இந்த பதிவு.
நான் முதலில் குச்சி பிடிச்சு எழுத ஆரம்பிச்ச அப்போ, இடது கையால் எழுத ஆரம்பிச்சேன். அம்மா குச்சியை பிடுங்கி வலது கையில் கொடுத்தாங்க. கொஞ்ச நேரம் வலது கையில் எழுதிட்டே இருப்பேன்; எப்படித்தான் மாறுமோ தெரியாது, ஆனா இடதுகைக்கு குச்சி மாறிடும். எங்க மைதிலி டீச்சர், அதான் எங்க எல்.கே.ஜி டீச்சர், முதல்ல திட்டினாங்க; அப்புறம் அடிச்சாங்க. ஆனா என்னால மாத்திக்கவே முடியல. சரி எப்படியோ தொலைஞ்சு போன்னு எல்லாரும் விட்டுட்டாங்க.
இந்த இடதுகை பழக்கம் எதனால் வருதுன்னு ஏகப்பட்ட பேர் ஆராய்ச்சி பண்ணியிருக்காங்க. ஒரு பிரபலமன தியரிப்படி, நம்ம மண்டைக்குள்ள மூளை மூளை அப்படின்னு ஒன்னு இருக்குமாம். அது வலது பக்கம் இடது பக்கம்னு இரண்டு பிரிவா இருக்குமாம். இடது பக்க ஆதிக்கம் அதிகமா இருந்தா வலதுகை பழக்கமும், வலது பக்க ஆதிக்கம் அதிகம் இருந்தா இடதுகை பழக்கமும் வருமாம். இதனால எனக்கு மூளை இருக்குங்கிறதையும், அதுல ஒரு பகுதியாவது வேலை செய்யுதுங்கறதையும் நீங்க மறுக்க முடியாது.
இன்னொரு தியரிப்படி அம்மாவோட தொப்பைகுள்ள இருக்கும் போது எந்த கை நம்ம வாய்க்கு பக்கத்தில் இருக்குகோ அந்த கை பழக்கம் வருதாம். இன்னொருவர் கரு உருவாகும் போது அதிக டெஸ்டோஸ்டீரோன் சுரந்தால் இடது மூளை அவ்வளவா வளராதுன்னு சொல்றார். அதனால வலது மூளை ஆதிக்கம் அதிகமாயிடுமாம். அப்புறம் வழக்கமா சொல்லற ஒரு பதில். எல்லாமே டி.என்.ஏ-க்கு உள்ள தான் இருக்குனு சொல்லிட்டு, இப்போ இருக்கா இல்லையான்னு ஆராய்ச்சி பண்ணறாங்க. (நன்றி: விக்கிபீடியா)
நான் சுமார் 99% வேலைகளை இடதுகையால் தான் செய்கிறேன்; சாப்பிடுவது தவிர. சிலர் சாப்பாட்டையும் இடதுகையால் சாப்பிடுவதை பார்த்திருக்கிறேன். சிலர் சில வேலைகளுக்கு மட்டும் இடதுகையை பயன்படுத்துவார்கள். ஓர் எளிய உதாரணம், சச்சின். சச்சின் இடதுகையால் எழுதுவார்; ஆனால், வலதுகையால் தான் பந்துவீசுவார். சிலர் வேண்டுமென்றே இடதுகை பழக்கத்திற்கு மாறுவார்கள். டென்னிஸ் வீரர் ரபேல் நாடல், அப்படி மாறியவர் தான். பெரும்பாலும் அனைத்து வீரர்களும் வலதுகை வீரர்களை எதிர்த்தே பயிற்சி செய்வார்கள். அப்படி பயிற்சி செய்தவர்களுக்கு எதிராக இடதுகையில் ஆடுவது லாபம்.
இடதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு சங்கடங்கள் இருக்கிறது. பெரும்பாலும் எல்லா உபகரணங்களும் வலதுகை பழக்கத்தை மட்டுமே மனதில் கொண்டு அமைக்கப்படுகின்றன. கத்திரிக்கோல், கம்ப்யூட்டர் மவுஸ், கதவு தாழ்பாழ், இப்படி நிறைய சொல்லலாம். இதெல்லாம் மற்றவர்கள் சொல்லி எனக்கு தெரிய வந்ததே தவிர, எனக்கு ஒரு போதும் இவை சங்கடமாக தெரியவில்லை. எல்லா பொருட்களும் வலதுகை பழக்கத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்படுவதால், இடதுகை பழக்கம் உள்ளவர்கள் அதிகமாக விபத்தில் சிக்குகிறார்கள்.
ஆனால், இந்த பழக்கம் ஒரு நல்ல அடையாளம். எங்க வகுப்பில் ஒரே உயரத்தில், கிட்டதட்ட ஒரே நிறத்தில் இரண்டு நடராஜன் இருந்தபோது நான் ‘லெப்ட்’ நடராஜன் ஆனேன். அதற்கு முன்னால் சிறிய வகுப்பில் என் பேர் நொட்டாங்கை (இந்த நொட்டாங்கையும் பீச்சாங்கையும் எப்படி எங்கிருந்து வந்ததுன்னு தெரிஞ்சவங்க கண்டிப்பா சொல்லுங்க!). நான் இடதுகையில் எழுதுவதை ரொம்ப ஆச்சரியமா பார்த்தவங்க, நிறைய பேர். சிலர் நான் இடதுகையில் எழுதுவேன்னு சொன்னதும் ‘அப்படியா? நீ வலமிருந்து இடம் எழுதுவியா?’ ன்னு கேப்பாங்க; அதாவது உருது எழுதற மாதிரி. எழுதிக்காமிச்ச பிறகுதான் அவங்களுக்குச் சந்தேகமே தீரும்.
இடதுகையால் எழுதுவதில் எந்த ஒரு கஷ்டமும் இல்ல. ஆனா, சில சூழ்நிலைக் கஷ்டங்கள் மட்டும் இருக்கு. என் வகுப்பில் ஒருவரோ இருவரோ தான் அப்படி இருப்பார்கள். சராசரியா நூறு பேர் இருக்கற வகுப்பில் அதுவே அதிகம். ஒரு பெஞ்சில் ஆறு பேர் உட்கார வேண்டும். நான் இடதுபக்க ஓரத்தில் உட்காரவில்லை என்றால், கண்டிப்பா பக்கத்தில் உள்ளவனின் (வலதுகையால் எழுதுபவர்) முழங்கையும் என் முழங்கையும் இடிக்கும். இரண்டு பேரும் சரியா எழுத முடியாது. அரசியலில் நாற்காலி போல, பள்ளிக்கூடத்தில் பெஞ்சு ஓரத்துக்கு அத்தனை போட்டி இருக்கும். அதை அடைய அதிக சாமர்த்தியம் வேணும். நான் எழுதும் போது ஒவ்வொரு வரியும் எனக்கு செங்குத்தா தான் எழுதுவேன்; அதுக்கு ஏத்தாப்புல காகிதத்தை திருப்பி வச்சுப்பேன்.
ஒரு முறை பரீட்டையில் நான் வலது பக்க ஓரமா உட்கார்ந்திருந்தேன், இடதுபக்கம் இன்னொருத்தன். மேற்பார்வைக்கு வந்தவர், அவர் பெயர் என்னமோ இருந்துட்டு போகுது. நாங்க அவரை செல்லமா சதுக்க பூதம்னு தான் கூப்பிடுவோம் (சதுக்க பூதம், சிலப்பதிகாரத்தில் ஒரு பாட்டில் வருகிறது). அவருக்கு நான் அந்த பையனுக்கு உதவி செய்கிறேனோன்னு ஒரு சந்தேகம். மனுஷன் கேள்வியால் துளைத்துவிட்டார்; பரீட்டையே எழுதவிடவில்லை.
ஒரு தடவை ஏதோ கல்யானமோ காதுகுத்தோ? ஒரு வீட்டுக்கு போயிருந்தோம். அங்க, இடதுகையால பானையில் இருந்து தண்ணீர் எடுத்துக் குடிச்சேன். அங்க வந்த ஒரு அம்மா 'Don't you have manners?' அப்படின்னு கேட்டாங்க. அப்போ நான் அஞ்சாப்பு படிச்சிட்டிருந்தேன்; ‘manners’ அப்படின்னா என்னனு தெரியாது. எதோ அவங்ககிட்ட இல்லாதத கேக்கறாங்கன்னு நெனச்சுக்கிட்டேன். எனக்கு ரொம்ப பிடிச்ச வேலை, பந்தி பரிமாறுவது. சில பேர், இடதுகையால சாதம் போட்டா நான் சாப்பிட மாட்டேன்னு சொல்லியிருக்காங்க. சிலர், என்னோட இடதுகை பழக்கத்த சொன்னவுடன், ‘அப்படின்னா பரவாயில்லை! தாராளமா பரிமாறு’ ன்னு சொல்லியிருக்காங்க.
கடைசியா ஒரு விஷயத்தோட முடிச்சுக்கறேன். இடதுகை பழக்கமுடைய நிறைய பிரபலங்கள், சாதனையாளர்கள் இருங்காங்க. அதனால், எல்லா இடதுகை பழக்கம் உள்ளவங்களும் அப்படித்தான் புத்திசாலியா, திறமைசாலியா இருப்பாங்கன்னு ஒரு நம்பிக்கை உலகம் பூராவும் பலருக்கு இருக்கு. என்னைப் பார்த்த பிறகு சிலர் அந்த நம்பிக்கையை மாத்திகிட்டிருக்காங்க. நீங்க எப்படி?
நானும் லெப்டுதாங்க...
ReplyDeleteஎல்லாரும் முதலில ஒரு மாதிரி ஆச்சரியமா பாப்பாங்க. அப்பறமா சரியாயிடுவாங்க.
இதில ஒரு பிரத்யேக வசதி- ஸ்கூல்ல படிக்கும்போது அவசர அவசரமா சாப்ட்டுக்கிட்டே ஹோம் வர்க்கை லஞ்ச் ஹவர்ல முடிச்சு ஷோ காட்டலாம்.
என் நண்பர் ஒருவர் தன் பெண்ணுக்கு காலேஜ் பீஸ் கட்ற அப்ளிகேஷன் முதற்கொண்டு அல்லாத்துக்கும் என் கிட்டதான் வருவாரு- நாம லோட்டாங்கைல எழுதிக் கொடுத்தா ராசியாம்!
இடக்கையால் நேரும் இடக்கை நானும் அறிவேன். என் அன்னாவிருக்கும் பள்ளியில் லெஃப்ட் என்றுதான் பெயர். சாதாரண குடும்பங்களில் இருப்பவர்களை விட, சற்று சாஸ்திர அனுஷ்டானங்கள் இருக்கும் வீடுகளில் பிறந்த இடக்கை ஆசாமிகள் பாடு இன்னும் அதிகம்.
ReplyDeleteஇடக்கை பழக்கம் உள்ளவர்கள், இரட்டையர்கள் எண்ணெய் தேய்த்து நீவிவிட்டால் சுளுக்கு பிடிப்பு அகலும் என்று நம்பிக்கைகள் உண்டு.
உலகம், எப்போதும் பெரும்பன்மையானவர்களுக்காக வடிவமைக்கப் படுகிறது.
இதனால எனக்கு மூளை இருக்குங்கிறதையும், அதுல ஒரு பகுதியாவது வேலை செய்யுதுங்கறதையும் நீங்க மறுக்க முடியாது. LOL
ReplyDeleteஎன்னைப் பார்த்த பிறகு சிலர் அந்த நம்பிக்கையை மாத்திகிட்டிருக்காங்க. நீங்க எப்படி?
-நாளைக்கு என்ன நடக்கும்னு யாருக்குத் தெரியும்?!
இடதுகை பழக்கம் கொண்ட பெண்களுக்கு தனி வசீகரம் உண்டு.. வித்யா டீச்சர் உட்பட.. :-)
ReplyDelete