Wednesday, May 11, 2011

தொலைக்காட்சி தொடர் காணும் உரிமைச் சட்டம்


மேலே படிக்கும் முன் உங்களைக் கொஞ்சம் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

கண்ணை மூடிக் கொள்ளுங்கள். சட்டசபையில் இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். சட்டசபையை அப்படியே மனத்தில் காட்சியாய் ஓட விடுங்கள்.

தற்சமயம் முதல்வராக இருவரை மட்டுமே நம்மால் நினைத்து பார்க்க முடியும் என்பதால், அந்த இருவரில் உங்களுக்கு பிடித்தவர் அல்லது பிடிக்காதவர் இங்கு முதல்வாராக சட்ட வரைவை வாசிப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.

காலை மணி 10.10.

ஆளுங்கட்சி சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்துவிட்டார்கள். தான் எந்தக் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்று தெரியாத ஒரு உறுப்பினர் ஒரு ஓரமாக நின்று கொண்டிருக்கிறார்.

சபாநாயகர்: தொலைக்காட்சி தொடர் காணும் உரிமைச் சட்டத்தை சபையில் தாக்கல் செய்ய மாண்புமிகு முதல்வரை அழைக்கிறேன்.

ஓவர் டூ முதல்வர்:

பெண்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் எனது அரசு எப்போதும் பாடுபட்டுவந்திருக்கிறது. அதற்காக நான் சந்தித்த எதிர்ப்புகளும் சோதனைகளும் அதிகம். ஆனால் இந்த எதிர்ப்புக்கு பயப்படாமல், சதாசர்வகாலமும் மக்களுக்காகவே சேவை செய்து வருகிறேன். அதிலும் குறிப்பாக பெண்களுக்காக இந்த அரசு வகுத்திருக்கும் திட்டங்களும் சட்டங்களும் எதிர்கால வரலாற்றில் கூட யாராலும் செய்ய முடியாதது.

பெண்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் எனது அரசு எப்போதும் பாடுபட்டுவந்திருக்கிறது. அதற்காக நான் சந்தித்த எதிர்ப்புகளும் சோதனைகளும் அதிகம். ஆனால் இந்த எதிர்ப்புக்கு பயப்படாமல், சதாசர்வகாலமும் மக்களுக்காகவே சேவை செய்து வருகிறேன். அதிலும் குறிப்பாக பெண்களுக்காக இந்த அரசு வகுத்திருக்கும் திட்டங்களும் சட்டங்களும் எதிர்கால வரலாற்றில் கூட யாராலும் செய்ய முடியாதது.

(ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேசையை தட்டுகிறார்கள்)

சட்டத்தின் முக்கிய அம்சங்களை இந்த சபையில் பட்டியலிடுகிறேன்.

 • இந்த சட்டம் ஒவ்வொரு வீட்டிலும் பெண்களுக்கு குறைந்தது 10 மணிநேரம் தொலைக்காட்சி நேரத்தை உறுதி செய்கிறது. அதிலும் ப்ரைம் டைம் என்று அழைக்கப்படும் மாலை 6 மணி முதல் 11 மணி முழுவதும் அவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.
 • இந்த நேரத்தில் அவர்களை சமையல் செய்யச் சொல்லுதல், சாப்பாடு பரிமாறச் சொல்லுதல் போன்றவை குற்றமாகக் கருதப்படும். இடையிடையே கிரிக்கெட் ஸ்கோர் பார்க்க அவர்களை தொந்தரவு செய்வது, விளம்பர இடைவேளையின் போது ரிமோட்டை கைப்பற்றுவது போன்றவை இனிமேல் குற்றமாக பதிவு செய்யப்படும்.
 • இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சம் மூன்று நாள் சிறைத் தண்டனையும் தண்டனை காலத்தின் போது நாளொன்றுக்கு 10 மணி நேர தொலைக்காட்சி தொடர்களும் காண்பிக்கப்படும்.
(இப்போது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இன்னும் பலமாக மேசையை தட்டுகிறார்கள்.)
 • குற்றவாளிகளை அரசு போஷிக்கிறது என்ற அவப்பெயரை என் அரசு தாங்காது. அதனால் சிறையில் இருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் குற்றவாளிகளிடமிருந்தே சிறை வாடகை வசூலிக்கப்படும்.
 • நல்ல கதை புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பது, கைவினைக் கலைகள், இசை, மொழி போன்றவற்றை கற்க ஆர்வத்தை தூண்டுவது, இதனால் மரியாதை, மதிப்பு, அறிவு எல்லாம் உயரும் என்று ஆசை வார்த்தை கூறி, தொலைக்காட்சி தொடர்கள் பார்க்கும் பழக்கத்தையும் உரிமையையும் வேரோடு அழிக்க நினைப்பவர்களை இந்த அரசு தயவுதாட்சன்யம் இன்று தண்டிக்கும்.
 • இத்தகைய குற்றங்களில் ஒருவர் ஈடுபட்டார் என்பது நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கப்படும். அதற்கான சிறைவாடகையும் வசூலிக்கப்படும்.
 • மேலும் தண்டனை காலம் முடிந்தபின் தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்கு அருகிலுள்ள காவல் நிலையத்தில் தினமும் மாலை 7 மணிக்கு ஆஜராகி, 7 மணி முதல் 9 மணி வரை அதிகாரி ஒருவரின் மேற்பார்வையில் தொலைக்காட்சி தொடர்களை கட்டாயம் பார்க்க வேண்டும்.
 • இவ்விதமான ஏற்பாடுகள் குற்றவாளிகள், மீண்டும் குற்றம் புரிவதையும் மற்றவர்களின் உரிமையில் தலையிடுவதையும் தடுக்கும்.
 • இந்த சட்டத்தின் கீழ் குற்றங்களை பதிவு செய்ய, காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் தங்கள் அலைபேசியில் இருந்து TV <பெயர்> <குற்றம் சாட்டப்படுபவரின் பெயர்> <அவர் முகவரி> என்று டைப் செய்து பூஜ்யம் பூஜ்யம் பூஜ்யம் பூஜ்யம் பூஜ்யம் (00000) என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாலே போதும். மற்றவற்றை எனது அரசு இயந்திரம் பார்த்துக் கொள்ளும். 
(தொடர்ந்து இரண்டு நிமிடம் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேசையைத்      தட்டுகிறார்கள்.)                                                       


3 comments:

 1. ஊருக்கு நல்லது சொல்வேன் அப்படின்னு சொல்லிக்கிட்டு, என்ன ஒரு கொலை வெறியோட திரியறீங்க!

  இந்தப் பதிவு எழுதியமைக்காக தினமும் ஒரு மணி நேரம் வெங்காயம் உரிக்கும் தண்டனை தரப்படுகிறது :)

  ReplyDelete
 2. @natbas நல்ல வேளை டிவி பாக்கற தண்டனை கொடுக்கும் அளவுக்கு நீங்கள் கடுமையானவர் இல்லை!

  ReplyDelete
 3. கடுமையானவர் இல்லைன்னு சொல்லாதீங்க, ரிமோட்டைக் கைப்பற்றித் தக்க வைத்துக் கொள்ளும் துணிச்சல் இல்லாதவன்.

  என்கூட சேர்ந்து வெங்காயம் உரிக்க சொல்லலாம், அதுதான் என்னால முடியும் :)

  ReplyDelete