Monday, July 18, 2011

சதி!

வழக்கம் போல் இந்த ஞாயிற்றுக்கிழமையும் காய்கறி வாங்க அதே கடைக்குத்தான் போனோம்.  உருளைக்கிழங்கு, வெங்காயம், கத்திரிக்காய், பீன்ஸ், கேரட் என்று அதே சைக்கிள் தான். இதைப் போன்ற கடைகளில் எந்தக் காய்கறியானாலும் பொறுக்கி பொறுக்கி வாங்கலாம். யாரும் தராசைத் தூக்கிக் கொண்டு அடிக்க வரமாட்டார்கள். பரங்கிக்காயை கூட சிலர் பொறுக்கி பொறுக்கித் தான் வாங்குகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.   ஒவ்வொரு கத்திரிக்காயாக, ஓட்டையில்லமல், நசுங்காமல், சூத்தையில்லாமல் இருக்கிறதா என்று பார்த்து பார்த்து பொறுக்கிக் கொண்டு வந்தேன்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கத்திரிக்காயை ஏதாவது ரூபத்தில் சமைத்துவிடுவது வழக்கம். இந்த வாரம் சீக்கிரம் வேலையாக வேண்டும் என்பதால் கத்திரிக்காய் வதக்கல் செய்துவிடலாம் என்று ஒருமனதாக தீர்மானமாயிற்று. சரி கொண்டாருங்கள் நான் நறுக்கித் தருகிறேன் என்று களத்தில் இறங்கினேன். அதற்கு இரண்டு வாரம் முன்பு செய்த கத்திரிக்காய் வதக்கல் சொதப்பியதற்கு நறுக்கியவர் தான் காரணம் என்று   தீர்ப்பாகியிருந்தது ஞாபகம் வந்தது. இருந்தாலும் என்னுடைய திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பாக கருதி இந்த வேலையை செய்யத் துணிந்தேன்.

ரொம்பவே கவனமாக என்னால் முடிந்த அளவிற்கு மெல்லிசாக நறுக்கி அதை சமைக்கவும் செய்தாயிற்று. சமைத்தது நானில்லை, வேறொருவர்.

கொஞ்ச நேரத்தில் சாப்பிட உட்கார்ந்தோம். கத்திரிக்காயை எடுத்து வாயில் போட்டுக்கொண்டால் அதை தொண்டைக்கு கீழ் இறக்க முடியவில்லை. மீன் வாடை. கத்திரிக்காயை நீள நீளமாக நறுக்கி கறி செய்தால் அது மீனைப் போல் இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் அதில் மீன் வாடையெல்லாம் இதற்கு முன் வந்ததே இல்லை. உடன் சாப்பிட்ட இரண்டு பேருக்கும் அதிர்ச்சி. 'டேய்! என்னடா இது?' அது கத்திரிக்காய் தானா என்ற சந்தேகமே அவர்களுக்கு வந்துவிட்டது. அந்தக் கத்திரிக்காய்களுக்கு விதித்தது அவ்வளவுதான் போலும் என்று அதை தூரப்போட்டுவிட்டு மாவடுவை சேர்த்துக்கொண்டோம்.

சரி இந்த வாடை எப்படித்தான் வந்திருக்கும்? ஒருவேளை அந்தக் கடையில் மீன் வண்டியில் கத்திரிக்கயையோ அல்லது கத்திரிக்காய் வண்டியில் மீனையோ ஏற்றிவந்திருக்கலாமோ? ஒவ்வொரு நொள்ளையாய் பார்த்து பார்த்து பொறுக்கும் போது வராத வாடை, 3mm  துண்டுகளாக நறுக்கும் போது வராத வாடை, சமைக்கும் போது வராத வாடை கடைசியில் எப்படி வந்தது. மீனும்-கத்திரியும் சேர்ந்து பயனித்திருக்கலாம் என்ற இந்த லாஜிக் எல்லா இடத்திலும் இடிப்பதால் இதை விட்டுவிடலாம்.

எங்கள் அக்கம் பக்கத்தில் இருக்கும் எதோ ஒரு வீட்டில் ஞாயிறு தோறும் மீன் சமைப்பார்கள். நான் பார்த்ததில்லை ஆனால் வாடை வரும். நேற்றும் சமைத்தார்கள்.  நேற்று அவர்கள் சமைக்கும் அதே நேரத்தில் தான் எங்கள் வீட்டிலும் சமைத்தார்கள். அவர்கள் சமைத்த மீனின் ஆவி கூடுவிட்டு கத்திரிக்காய்க்குள் பாய்ந்திருக்குமோ? உங்களைப் போல் நானும் முற்போக்குவாதி தான். இந்த கூடுவிட்டு கூடு பாய்வதை எப்படி நம்புவது? அதனால் இதையும் விட்டுவிடலாம்.

பின் ஐநூறு கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் ஒரு அனுபவசாலி தொலைபேசியில் அழைத்து, ஒருவேளை எண்ணையிலிருந்து வாடை வந்திருக்கலாம் என்று எண்ணையை சோதிக்கச் சொன்னார். எண்ணெய் புதிய எண்ணெய் தான்; நல்லெண்ணெய் தான்; அதாவது நல்ல ரீபைண்டு சூரியகாந்தி எண்ணெய் தான். அதே பாக்கில் இருந்து எடுத்த எண்ணையில் முந்தா நாள் பொறித்த அப்பளத்திலும் அன்றைக்கு தாளித்துக் கொட்டிய குழம்பிலும் எந்த பிரச்னையும் இல்லை. அதனால் இது எண்ணையால் விளைந்தது அல்ல. இதில் சோதனைக்குறிய விஷயம், உடன் சாப்பிட்ட ஒருவர் 'நீ நறுக்கியதால் தான் இப்படி ஆகிவிட்டதோ' என்று ஆரம்பித்தார்.

எனக்குப் புரிந்துவிட்டது. இத்தனை நாள் மனிதர்கள் மூலம் என்னை இம்சித்துக் கொண்டிருந்த கடவுள், இப்போது கத்திரிக்காய்களையும் ஏவிவிடத் தொடங்கியிருக்கிறார்.

கடவுளே! அடுத்தது என்ன? காத்திருக்கிறேன்.

5 comments:

  1. மன்னிக்கவும், எழுத்திப் பிழை. தண்ணீர்க் குழாயில் மீன் இறந்திருக்கும்.

    ReplyDelete
  2. அரிசியும் அதே தண்ணீரில் தான் வேகவைத்தோம். அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை :-)

    ReplyDelete
  3. முடிவில் சொன்னவாசகம் என்னை ரொம்பக் கவர்ந்துவிட்டது
    மனிதர்கள் மூலம் இம்சித்துவரும் கடவுள்
    பொருட்கள் மூலமும் இம்சிக்கத் துவங்கிவிட்டால் என்ற எண்ணம்
    என்னுள் வளர வளர மீன் வாடை பிரச்சனை
    சிறிதாகிப் போய்விட்டது
    சொல்லிச் செல்லும் விதம் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. உங்கள் தளத்தை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்
    http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_29.html
    என் தளம்
    http://kovaimusaraladevi.blogspot.in/

    ReplyDelete